(எம்.வை.எம்.சியாம்)
46 கிலோ குஷ் ரகப் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய யுவதியை தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நீர் கொழும்பு மேலதிக நீதிவான் தருஷிக்கா பிரேமரத்ன முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர் தொடர்பில் அண்மையில் வெளியாகிய சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் இதன்போது விவாதிக்கப்பட்டதுடன் நீதிவான் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட வரும் தரப்பினர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தாய்லாந்து பாங்காக் நகரிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த 12 ஆம் திகதி வருகை தந்த பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
யுவதி அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது அவரது பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46 கிலோ குஷ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது.
பின்னர் சந்தேகநபர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சந்தேக நபர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் குறைந்தளவான வசதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் இணையத்தளம் கடந்த 21ஆம் திகதி செய்தி வெளியிட்டு இருந்ததுடன் இது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் நடைபெற்றபோது சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபரான பிரித்தானிய யுவதியை மன்றில் ஆஜர்ப்படுத்தியிருந்தார். யுவதியின் பயணப்பைகளிலிருந்து மீட்கப்பட்ட 46 கிலோ குஷ் போதைப் பொருள் மன்றில் சமர்பிக்கப்பட்டதுடன் அதனை நீதிமன்றத்தின் வழக்கு பொருட்கள் களஞ்சியப்படுத்தப்படும் அறையில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
இதன்போது சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி சம்பத் பெரேரா மன்றில் ஆஜராகி விடயங்களை முன்வைத்தார். அண்மையில் சிலர் தம்மை ஊடகவியலாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு எனது சேவை பெறுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு சென்று காணொளி ஒன்றை பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
இதன் ஊடாக எனது சேவை பெறுநர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சிறந்த உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள், குறித்த யுவதியின் நண்பர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் வருகை தந்து அவரை பார்வையிட அனுமதி கோரினர். சாதாரண நடைமுறையின் கீழ் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கினோம். அதில் ஒருவர் பொத்தான் வடிவில் உள்ள சிறிய கமராவை பயன்படுத்தி அங்கு நடந்த விடயங்களை காணொளியாக பதிவு செய்துள்ளார் எனக்கூறினர்.
இதற்கமைய இரு தரப்பு விடயங்களை ஆராய்ந்த நீதிவான் திறந்த மன்றில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடும் தரப்பினர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு சிறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
இந்த சந்தேகநபரை பார்வையிட வருபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தார். இந்த வழக்கு மீண்டும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM