காஸாவின் தற்போதைய நிலைமையானது 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வன்னியில் மக்கள் சந்தித்த அவலங்களை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்திருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட அவலமும் அன்று தமிழ் மக்களை காப்பாற்றுவதிலிருந்து ஐ.நா. தவறியமை குறித்தும் தற்போதும் நினைவூட்டப்படுகின்றது.
அண்மையில் உதவி ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் டொம் ப்ளெச்சர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் உரையாற்றுகையில் தெரிவித்த விடயமானது, இறுதி யுத்தத்தின் போதான தமிழ் மக்களின் அவலத்தை மீண்டும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் உடனடி உதவி ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. செயலாளர் நாயகம் டொம் ப்ளெச்சர், காஸாவின் தற்போதைய நிலைவரம் கடந்த காலங்களில் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளில் இடம்பெற்ற மிக மோசமான அட்டூழியங்களை தடுப்பதில் சர்வதேச சமூகம் அடைந்த தோல்வியை ஒத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
நெருக்கடி நிலைமைகளின் போது ஐக்கிய நாடுகள் சபையும் செயற்பாடு தொடர்பான கடந்த கால மீளாய்வுகளை சுட்டிக்காட்டியுள்ள அவர், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு எதிராக இடம்பெற்ற மிக மோசமான மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அணுகுமுறை குறித்த முன்னைய அறிக்கைகளை நினைவுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
‘மியன்மார் தொடர்பான 2009ஆம் ஆண்டு அறிக்கை, இலங்கை தொடர்பான 2012ஆம் ஆண்டு அறிக்கை மற்றும் 1999இல் இஸ்ரேப் ரெனிக்கா மற்றும் ருவாண்டா தொடர்பான அறிக்கை என்பவற்றில் நாம் தோல்வியடைந்திருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் மெளனிக்கப்பட்டவர்களுக்கு அப்பால் உங்களுக்கு இன்னும் என்ன ஆதாரம் தேவைப்படுகின்றது’ என்றும் அவர் தனது உரையின்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
பலஸ்தீனத்திலுள்ள மக்கள் மீது இஸ்ரேல் வலுக்கட்டாயமாக மனிதாபிமானமற்ற நிபந்தனைகளை விதிக்கின்றது. பல வாரங்களாக உணவு, மருந்து, குடிநீர், படுக்கைகள் உள்ளிட்ட எந்தவொரு பொருளும் காஸாவுக்குள் கொண்டு செல்லப்படவில்லை என்றும் டொம் ப்ளெச்சர் மிகுந்த கவலை வெளியிட்டிருந்தார்.
இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போகச் செய்யப்பட்டிருந்தனர். ஒன்பதாயிரம் சிறுவர்கள் அநாதரவாக்கப்பட்டனர். தொண்ணூறாயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். வன்னியில் திறந்தவெளி சிறைச்சாலையாக காணப்பட்ட பகுதியில் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
இவ்வாறு தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது சர்வதேசம் கைகட்டி வாய்பொத்தி அமைதி காத்தது. ஐ.நா. சபையும் செய்வதறியாது நின்றிருந்தது. இவ்வாறு பேரழிவுகளை தடுக்க முடியாத தமது கையறு நிலை தொடர்பில் ஐ.நா. சபையானது இலங்கை தொடர்பில் 2012ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கவலை தெரிவித்திருந்தது. தமிழ் மக்களை காப்பாற்றும் விடயத்தில் தாம் தவறிழைத்து விட்டதாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டிருந்தது.
அதனைத் தான் தற்போது பாதுகாப்பு சபை கூட்டத்தில் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் உடனடி உதவி ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் டொம் ப்ளெச்சர் மீண்டும் நினைவுபடுத்தியிருக்கின்றார்.
அன்று இறுதி யுத்தம் இடம்பெற்றவேளையில் வன்னியில் நிலைகொண்டிருந்த ஐ.நா. முகவர் அமைப்புகள் வெளியேறியிருந்தன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட்ட ஐ.நா.வின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வன்னியை விட்டு கொழும்பு திரும்பியிருந்தனர்.
அன்றைய அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையைடுத்தே ஐ.நா.வின் முகவரமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அவலங்களை சந்தித்த தமிழ் மக்களை கைவிட்டு வெளியேறிருந்தனர். அவ்வாறு ஐ.நா. முகவர் அமைப்பினர் வெளியேறுவதற்கு தீர்மானித்த போது தம்மை விட்டு செல்ல வேண்டாம் என்று வன்னியில் தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.நா. முகவர் அமைப்பு நிறுவனங்களின் அலுவலகங்களை சுற்றிவளைத்து அந்த மக்கள் தம்மை நிர்க்கதியாக விட்டு விட்டு செல்ல வேண்டாம் என்று கதறி அழுதிருந்தனர். ஆனால், அன்றைய அரசாங்கத்தின் கட்டாயப்படுத்தல் காரணமாக தமது உயிர்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஐ.நா. முகவர் அமைப்பினர் வன்னியிலிருந்து வெளியேறியிருந்தனர்.
சர்வதேச அமைப்புக்களின் பிரசன்னமற்ற நிலைமை வன்னியில் உருவாக்கப்பட்டது. ஐ.நா.வின் பிரதிநிதித்துவமும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. இந்நிலையில்தான் வன்னியில் மக்கள் அன்று கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். ஐ.நா.வின் முகவர் அமைப்பினர் வன்னியில் நிலைகொண்டிருந்தால் இத்தகைய அவலங்களை ஓரளவுக்காவது வெளியுலகுக்கு எடுத்துக் கூறி அவற்றை தடுத்திருக்க முடியும் என்று எதிர்வு கூறப்பட்டது.
ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதித்துவம் அன்று வன்னியை விட்டு வெளியேறியமை தவறு என்பதையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமையை தடுப்பதற்கு தாம் உரிய நடவடிக்கை எடுக்காமை வருத்தமளிப்பதாகவும் ஐ.நா. சபை 2012ஆம் ஆண்டு அறிக்கையில் அறிவித்திருந்தது.
தற்போது அந்தத் தவறை மீண்டும் சுட்டிக்காட்டி காஸாவிலும் அத்தகைய தவறு இடம்பெறுவதை உணர்த்தும் வகையிலேயே தற்போது டொம் ப்ளெச்சர் கருத்து தெரிவித்திருக்கின்றார்.
இறுதி யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக அன்றைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் அறிவித்திருந்தது. அதன் பின்னர் உடனடியாகவே அன்றைய ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை வந்திருந்தார். அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர் உலங்குவானூர்தியில் சென்று வன்னியில் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிகளை பார்வையிட்டிருந்தார்.
இதன் பின்னர் பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஐ.நா. செயலாளர் நாயகமுமான பான் கீ மூனுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்துக்கு அமையவும் அன்றைய அரசாங்கம் செயற்பட்டிருக்கவில்லை. இந்த விடயத்திலும் ஐ.நா. தோல்வியடைந்திருந்தது.
ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் கூட அன்றைய மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றியிருக்கவில்லை. இதனால்தான் 2012ஆம் ஆண்டு ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையிலேயே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு வரை 08 பிரேரணைகள் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டன. உள்ளகப் பொறிமுறையின் கீழ் விசாரணையை நடத்துவமாறு ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்துமாறும் வலியுறுத்தப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச நீதி விசாரணையினை முன்னெடுக்குமாறும் பிரேரிக்கப்பட்டது.
ஆனால், மாறி மாறி இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் உரிய அக்கறை செலுத்தியிருக்கவில்லை. இதன் காரணமாக தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை தொடர்ச்சியாக வலியுறுத்தினர். அதற்கும் இணக்கம் காணப்படாமையினால் தற்போது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலையில் நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
காஸாவில் இன்று அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதைப் போன்றே அன்று வன்னியில் இடம்பெற்றிருந்தது என்பதை ஐக்கிய நாடுகள் சபையானது இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறது. வன்னியில் பேரழிவுகளை தடுப்பதற்கு தாம் தவறி விட்டதாகவும் ஐ.நா. தற்போது ஏற்றுக் கொண்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையானது அன்று விட்ட தவறையே இன்றும் காஸாவில் விடுவதாகவே உணரப்படுகின்றது. இதனால்தான், உடனடி உதவி ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் டொம் ப்ளெச்சர் இலங்கையுடன் ஒப்பிட்டு இந்த விவகாரத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
எனவே, இலங்கை விவகாரத்தில் ஐ.நா. விட்ட தவறுகளுக்கு பரிகாரம் காணப்பட வேண்டும். பொறுப்புக் கூறலுக்கான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு வழங்கி தவறுக்கு பரிகாரம் காண ஐக்கிய நாடுகள் சபை இனியாவது முயலவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM