bestweb

உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கம் முதல் தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளது - ரணில்

29 May, 2025 | 05:33 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பொதுத் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணையை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் ஆணையை வழங்குமாறே, ஜனாதிபதி, உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்து வந்தார். ஆனால் 23 இலட்சம் பேர் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. இதன் மூலம் அரசாங்கம் முதல் தடவையாக வீழ்ந்துள்ளது. அரசாங்கத்தின் செயற்றிட்டங்களில் மக்களுக்கு திருப்தி இல்லாமையே இதற்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகிய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு கட்சியின் தலைவரும்  முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரணில் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் விசேட தேர்தல் ஒன்றாகும். பொதுவாக ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்ற பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும்போது,  ஆளும் அரசாங்கத்துக்கே  அதிக வாக்குகள் கிடைக்கப்பெறுகின்றன. ஆனால், இந்த தேர்தல் பெறுபேறு வித்தியாசமாகவே அமைந்துள்ளது.

இந்த தேர்தலில் ஜனாதிபதி நாடுபூராகவும் சென்று மீண்டும் மக்கள் ஆணையை வழங்குமாறும், வழங்கிய மக்கள் ஆணையை மீண்டும் உறுதிப்படுத்துமாறும் கேட்டிருந்தார். ஆனால் என்ன நடந்தது? பாராளுமன்ற தேர்தலில் 68 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இந்த தேர்தலில் 45 இலட்சம் வாக்குகளே கிடைத்துள்ளன. 23 இலட்சம் மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. என்னை பொறுத்தவரை முதல் தடவையாக அரசாங்கம் வீழ்ந்துள்ளது. 

பொதுவாக இந்த தேர்தலில் மக்கள் ஆணையை கேட்கத் தேவையில்லை. ஆனால் கேட்டால் கிடைக்கவேண்டும். கிடைக்காவிட்டால் அது பாரிய பிரச்சினையாகும். அதாவது, இதுவரையான காலப்பகுதியில் அரசாங்கத்தின் செயற்றிட்டங்களில் மக்கள் திருப்தியடையவில்லை.

அதன் பிரகாரம் ஏனைய கட்சிகளின் நிலைமையை பார்ப்போமானால், நாங்கள் பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவில் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். அதில்  எங்களுக்கு  5 இலட்சத்து 67 ஆயிரம் கிடைக்கப்பெற்றது. இந்த முறை நாங்கள் யானை சின்னத்தில் தனித்து போட்டியிட்டோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தனித்து போட்டியிட்டது.

பொதுஜன பெரமுன வேறாக போட்டியிட்டது. எமது கூட்டணியின் மொத்த வாக்குகளாக 9 இலட்சத்து 47ஆயிரத்து 156 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதன் பிரகாரம்  எங்களுக்கு 3 இலட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் அதிகரித்துள்ளன. யானை சின்னத்தில் போட்டியிட்ட எங்களுக்கும் இரண்டு இலட்சம் வரை வாக்குகள் அதிகரித்துள்ளன. என்றாலும் இன்னும் அதிகரித்திருக்க வேண்டும்.

அதேபோன்று மொட்டு கட்சிக்கு பொதுத் தேர்தலில் 3 இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்தது. இந்த தேர்தலில் 9 இலட்சத்து 54 ஆயிரம் பெற்றுக்கொண்டுள்ளது. அவர்கள் 6 இலட்சம் வாக்குகளை அதிகமாக பெற்றுக்கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்திக்கு பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 2 இலட்சம் வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளன.

ஏனைய கட்சிகளுக்கு  8 இலட்சம் வாக்குகள் வரை சென்றுள்ளன. அதனால் இந்த தேர்தலில் வாக்குகள் பிரிந்து சென்றுள்ளன. எனவே  ஆட்சி அமைக்க முடியுமான சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைவருடனும் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். ஏனைய சபைகளில் எதிர்க்கட்சியாக செயற்படுகிறோம்.

அத்துடன் இந்த  தேர்தலில் புதிய முகங்களே அதிகம் தெரிவாகி இருக்கின்றன. ஏனைய கட்சிகளை பார்த்தாலும் அங்கும் புதியவர்களே தெரிவாகி இருக்கின்றனர். தேசிய மக்கள் சக்தியிலும் அவ்வாறே. பழையவர்கள், அனுபவமுள்ளவர்கள்  நிராகரிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் புதியவர்கள் மூலம் புதிய முறையில் செயற்பட நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேர்தலில் எமக்கு வாக்குகள் அதிகரிப்பதற்கு நான் காரணமில்லை. இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ஒரு குழு அமைத்திருந்தோம்.

கட்சியின் செயலாளர், தவிசாளர், தேசிய அமைப்பாளர், உபதலைவர், பிரதித் தலைவர், ராஜித்த, சேனாரத்ன, மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்ணான்டோ போன்றவர்கள் அந்த குழுவில் இருந்து பொறுப்புக்களை பிரித்துக்கொண்டு அவர்களுக்கு முடிந்தளவில் செயற்பட்டுள்ளார்கள்.

தற்போது இந்த பெபேறுகளின் அடிப்படையில் நாங்கள் புதிய கட்சியை அமைக்க வேண்டும். அதனையும் இந்த குழுவே மேற்கொள்ளும். பொறுப்புக்களை தொடர்ந்து எனக்கு  வைத்துக்கொண்டிருக்க முடியாது. பிரித்து வழங்கவே இவ்வாறு செயற்பட்டேன். இந்த  வேலைத்திட்டத்தை செய்ய முடியுமா என பார்க்க அவர்களுக்கு சற்று கால வரையறை ஒன்றையும் வழங்க வேண்டும். 

இந்த குழுவுக்கு புதியவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். 56, 77, 94, 2021 ஆகிய  காலகட்டத்திலும் நாங்கள் புதிய கட்சி அமைத்தோம். அதனால் தற்போதும் புதிய சிந்தனைகள் வேலைத்திட்டங்களுடன் புதிய கட்சி ஒன்றை அமைக்க வேண்டும். கடந்த காலங்களிலும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து புதிய கட்சி அமைத்தோம்.

அத்துடன் இந்த தேர்தலில் பழையவர்கள் அதிகமானவர்கள் தெரிவாகவில்லை. அவர்களையும் எமது வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்றும் கட்சிக்குள் புதியவர்களை இணைத்துக்கொள்ளவும் முயற்சிக்க வேண்டும். அதனால் ஏனையவர்களையும் இணைத்துக்கொண்டு புதிய கட்சி ஒன்றை அமைப்போம். அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் இணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவராக...

2025-07-11 14:25:54
news-image

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக்...

2025-07-11 14:30:08
news-image

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற...

2025-07-11 13:32:42
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-07-11 14:23:59
news-image

மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய உப...

2025-07-11 13:16:16
news-image

போதைப்பொருள் தகராறு ; கத்திக்குத்துக்கு இலக்காகி...

2025-07-11 13:03:54
news-image

ஹொரணையில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக...

2025-07-11 12:10:56
news-image

சாதாரண தர பரீட்சையில் 13 392...

2025-07-11 12:33:21
news-image

மல்வத்துஹிரிபிட்டியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் சந்தேக...

2025-07-11 11:49:40
news-image

மன்னார், கதிர்காமத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில்...

2025-07-11 11:46:08
news-image

இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம், ஊடக துறையின்...

2025-07-11 11:12:07
news-image

ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது!

2025-07-11 10:55:07