bestweb

ஜிட்டேஷ் ஷர்மாவின் அதிரடியுடன் லக்னோவை வீழ்த்திய RCB முதலாவது தகுதிகாணில் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்தாடவுள்ளது

Published By: Vishnu

28 May, 2025 | 01:44 AM
image

(நெவில் அன்தனி)

லக்னோவ், எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (27) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் கடைசி லீக் போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியை எதிர்த்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) 6 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 19 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, ப்ளே ஓவ் சுற்றில் முதலாவது தகுதிகாண் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்தாட தகுதிபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலிரு இடங்களுக்குள் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இடம் பிடித்தது 9 வருடங்களின் பின்னர் இதுவே முதல் தடவையாகும்.

இந்தப் போட்டி முடிவை அடுத்து நீக்கல் போட்டியில் அணிகள் நிலையில் 3ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட குஜராத் டைட்டன்ஸை 4ஆம் இடத்திலுள்ள முன்னாள் சம்பியன் மும்பை இண்டியன்ஸ் எதிர்த்தாடவுள்ளது.

கடைசி லீக் போட்டியில் பதில் அணித் தலைவர் ஜிட்டேஷ் ஷர்மா குவித்த அதிரடி அரைச் சதம், விராத் கோஹ்லி பெற்ற நிதானமான அரைச் சதம், மயன்க் அகர்வாலின் அபார துடுப்பாட்டம் என்பன றோயல் செலஞ்சர்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 227 ஓட்டங்களைக் குவித்தது.

கடைசி லீக் போட்டியில் எல்பிஎல் அறிமுகத்தைப் பெற்ற தென் ஆபிரிக்க வீரர் மெத்யூ போல் ப்றீட்ஸ் 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார். (25 - 1 விக்.)

ஆனால், அதன் பின்னர் மிச்செல் மார்ஷ், அணித் தலைவர் ரிஷாப் பான்ட் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து 77 பந்துகளில் 152 ஓட்டங்களைப் பகிர்ந்து பஞ்சாப் கிங்ஸை பலமான நிலையில் இட்டனர்.

மிச்செல் மார்ஷ் 37 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து ரிஷாப் பான்ட், நிக்கலஸ் பூரண் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 26 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ரிஷாப் பான்ட் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 61 பந்துகளில் 11 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட 118 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இலங்கை வீரர் நுவன் துஷார சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 18.4  ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

பில் சோல்ட், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடி 34 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பில் சோல்ட் 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து ரஜாத் பட்டிடார் (14), லியாம் லிவிங்ஸ்டோன் (0) ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில்  ஆட்டம் இழந்தனர்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த விராத் கோஹ்லி, மொத்த எண்ணிக்கை 123 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தார். அவர் 10 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டம் இழந்ததும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆனால், மயன்க் அகர்வால், பதில் அணித் தலைவர் ஜிட்டேஷ் ஷர்மா ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.

மொத்த எண்ணிக்கை 189 ஓட்டங்களாக இருந்தபோது திக்வேஷ் ரதி வீசிய பந்தை ரிவேர்ஸ் சுவீப் முறையில் ஜிட்டேஷ் ஷர்மா அடிக்க அந்தப் பந்தை அயுஷ் படோனி பிடித்தார். ஆனால். மூன்றாவது மத்தியஸ்தர் அந்த பந்தை விதி மீறிய பந்து என அறிவித்ததும் ஜிட்டேஷ் ஷ்ர்மா ஆட்டம் இழப்பிலிருந்து தப்பித்துக்கொண்டார்.

அடுத்து வீசப்பட்ட ப்ரீ ஹிட் பந்தை ஜிட்டேஷ் ஷர்மா சிக்ஸாக விளாச ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து கடைசி 3 ஓவர்களில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றிக்கு 28 ஓட்டங்கள் தேவைப்படடதுடன் 6 விக்கெட்கள் மீதம் இருந்தது.

18ஆவது ஓவரில் ஜிட்டேஷ் ஷர்மா 20 ஓட்டங்களை விளாச மொத்தம் 21 ஓட்டங்கள் பெறப்பட்டது. இதனை அடுத்து 19ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றியீட்டியது.

நெருக்கடிக்கு மத்தியில் துடுப்பாட்டத்தில் அற்புதமான ஆற்றலை வெளிப்படுத்திய ஜிட்டேஷ் ஷர்மா பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் மயான்க் அகர்வாலுடன் 44 பந்துகளில் 107 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

33 பந்துகளை எதிர்கொண்ட ஜிட்டேஷ் ஷர்மா 8 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 85 ஓட்டங்களுடன்  ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய மயன்க் அகர்வால் 23 பந்துகளில் 5 பவுண்டறிகள் உட்பட 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் வில் ஓ'றூக் 74 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன்: ஜிட்டேஷ் ஷர்மா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிலாந்து 251 - 4 விக்.,...

2025-07-11 05:24:07
news-image

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின்...

2025-07-10 22:30:31
news-image

இலங்கைக்கு வெற்றி இலக்கு 155 ஓட்டங்கள்

2025-07-10 20:43:20
news-image

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் தரவரிசையில்...

2025-07-09 20:27:23
news-image

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இலங்கை -...

2025-07-09 20:22:32
news-image

குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த,...

2025-07-08 22:21:46
news-image

குசல் மெண்டிஸ் அபார சதம் குவிப்பு;...

2025-07-08 18:56:13
news-image

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது

2025-07-08 14:57:12
news-image

சர்வதேச கிரிக்கெட் நடுவர் பிஸ்மில்லாஹ் ஜான்...

2025-07-08 09:47:46
news-image

மகளிர் ஆசிய கிண்ண தகுதிகாணில் பங்குபற்றிய ...

2025-07-07 15:55:09
news-image

இலங்கை ரி20 கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

2025-07-07 15:25:26
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம்: கடைசி நேர...

2025-07-06 23:40:30