வவுனியா தாலிக்குளம் பகுதியிலுள்ள 14 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் செயற்படும் தமிழ் மொழி சேவைப்பிரிவிற்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கடந்த 03 ஆம் திகதி  பூவரசங்குளம் பகுதி வைத்தியசாலைக்கு சிறுமி ஒருவரை அழைத்துச் சென்றபோது அச்சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாகவும் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்குச் செல்லுமாறு வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையம் செல்லவில்லை.  அப்பகுதியில் செயற்படும் சிறுவர் பாதுகாப்புக்குழுவினரால் வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் தமிழ் மொழி சேவைப்பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ் மொழி சேவைப் பொலிஸார் பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வதற்கு பொலிஸார் சென்ற போது சிறுமியின் வீட்டில் எவரும் இருக்கவில்லை இதையடுத்து அருகிலுள்ளவர்களிடம் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு   தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறுநாள் 4 ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற தாயார் சிறுமியுடன் தனது கணவரே பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதையடுத்து பொலிஸார் கணவனின் ஊரான அங்குறுவத்தோட்ட பகுதி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டு கணவனைக் கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுமி மருத்துவப் பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் செயற்படும் தமிழ் மொழி 0766224949 சேவைப்பிரிவிற்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. அதற்கான உடனடி நடவடிக்கைகள் தரிதமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.