முள்ளிவாய்க்கால் அவலம் அரங்கேறி 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வின்றியும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி இன்றியும் அவலத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் பேரழிவுகளை சந்தித்த தமிழ் மக்கள், உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொண்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, அழுது புலம்பி, தமது உறவுகளை உணர்வு எழுச்சியுடன் நினைவு கூர்ந்திருந்தனர். இந்நிலையில் வழமைபோன்றே இம்முறையும் தெற்கில் வெற்றி விழா கொண்டாட்டம் இடம்பெற்றிருக்கின்றது.
யுத்தத்தில் உயிர் நீத்த படையினரை நினைவு கூரும் வகையில் ஜெயவர்தனபுர போர் வீரர்கள் நினைவுத் தூபி அமைந்துள்ள மைதானத்தில் 16ஆவது தேசிய போர் வீரர் வெற்றி நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கிலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றிருந்த நிலையில் தெற்கில் வெற்றி விழா இம்முறையும் கொண்டாடப்பட்டிருக்கிறது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்தே இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவு கூருவதற்கு அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அனுமதி மறுத்திருந்தது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கூட மக்கள் அனுஷ்டிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. அந்த வேளையில் தெற்கில் அன்றைய அரசாங்கத்தினால் தேசிய சுதந்திர தினத்தை விடவும் கோலாகலமாக இராணுவ வெற்றி விழா கொண்டாடப்பட்டு வந்தது.
பல்லாயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்காலில் இழந்து தமிழ் மக்கள் தவித்து வந்த வேளையில், அந்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனுமதிக்காத அன்றைய அரசாங்கம், வெற்றி விழா வை மாத்திரம் வெகுகோலாகலமாக கொண்டாடியது. இந்த செயற்பாடானது பெரும் இழப்புகளை சந்தித்த தமிழ் மக்களுக்கு பெரும் வேதனையை அழிக்கும் விடயமாகவே இருந்து வந்தது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மாற்றமடைந்ததை அடுத்து நல்லாட்சி அரசாங்கத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், படையினரை நினைவு கூரும் போர்வையில் வெற்றி விழா கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
வடக்கில் தமிழ் மக்கள் உயிரிழந்த உறவுகளை நினைவேந்தல் செய்த நிலையில் தெற்கில் அரசாங்கம் வெற்றி விழாவை கொண்டாடி வந்தது. இதிலிருந்து வடக்கும் தெற்கும் இரு துருவங்களாக பிரிந்திருந்தமை நிரூபணமாகி வந்தது.
தற்போது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில் நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் கட்டி எழுப்பப்படும், யுத்த வெற்றி கோஷங்கள் இல்லாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்கள் பாதிக்கப்படாதவாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றெல்லாம் கருதப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியானது யுத்தத்தின் கொடூரத்தை நன்கு விளங்கிய கட்சியாக செயற்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது. தாம் ஆட்சிக்கு வந்தால் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவோம், காணாமல்போனோரது பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்றெல்லாம் தேசிய மக்கள் சக்தியினர் வாக்குறுதி வழங்கியிருந்தனர். அத்தகைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும், நாட்டில் இனவாதமும் மதவாதமும் இல்லாது ஒழிக்கப்படும், இதன்மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றெல்லாம் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும் படையினரை நினைவு கூர்வது என்ற போர்வையில் வெற்றி விழா நிகழ்வு இடம்பெற்றமையானது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
தெற்கில் இடம்பெற்ற வெற்றி விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொள்ள மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார்வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த கடந்த 18ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் செய்தியாளர் மாநாடொன்றினை நடத்தி அறிவிப்பினை விடுத்திருந்தார்.
16ஆவது தேசிய போர் வீரர் நினைவு தினம் கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர் நினைவு தூபியில் இடம்பெறும் என்றும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சார்பில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அநுர ஜெயசேகர கலந்துகொள்வார் எனவும் பாதுகாப்பு செயலாளர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பையடுத்து தேசிய போர் தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார் என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டது. இதற்கு எதிரணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொஜன பெரமுன, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெலஉறுமய, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி என்பன ஜனாதிபதி நிகழ்வில் பங்கேற்காதிருப்பது குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன. இதனைவிட பல்வேறு சிங்கள பெளத்த தேசியவாத அமைப்புகளும் தமது அதிருப்திகளை தெரிவித்திருந்தன. இத்தகைய அதிருப்திகளையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் தேசிய போர் வீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதற்கிணங்க தேசிய போர் வீரர் நினைவு தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்பி நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும், அதற்கான செயற்பாடுகளில் ஈடுபடும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தேசிய போர் வீரர் நினைவு தினம் வழமை போன்று இடம்பெற்றமையும் அதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டமையும் கடந்த கால அரசாங்கங்களைப் போன்றே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் செயற்படுகின்றது என்ற எண்ணப்பாட்டை உருவாக்கியிருக்கின்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு உரையாற்றுகையில்,
“அதிகாரம் மோகம் உடையவர்கள் வடக்கிலும் தெற்கிலும் மீண்டும் இனவாதத்தை தூண்ட ஆரம்பித்துள்ளனர். இனவாதம் தலைதூக்குவதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. காலத்துக்குக் காலம் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் அதனை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தாம் செய்த குற்றங்களை மறைப்பதற்காகவும் யுத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
தெற்கில் சிங்கள பெளத்த தேசியவாத சக்திகளின் அழுத்தம் அதிகரித்து வருகின்றது. படைவீரர் நினைவு தின கொண்டாட்டம் தொடர்பில் அவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான அவர்களின் செயற்பாடுகள் என்பன இதனை உணர்த்துவதாக உள்ளன.
சிங்கள பெளத்த தேசியவாத சக்திகளின் அழுத்தத்துக்கு அடிபணியும் நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளதோ என்ற சந்தேகத்தை தேசிய போர் வீரர் நிகழ்வில் ஜனாதிபதியின் பங்கேற்பு ஏற்படுத்தியிருக்கின்றது.
முதலில் அந்த நிகழ்வில் பங்கேற்பதில்லை என்ற எண்ணத்திலிருந்த ஜனாதிபதி, சிங்கள பெளத்த தேசியவாத சக்திகளின் எதிர்ப்புகளை அடுத்து இந்நிகழ்வில் பங்கேற்றாரா என்றும் கேள்வி எழுப்பப்படுகின்றது.
கடந்த கால வரலாற்றை எடுத்துக்கொண்டாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் முயற்சிகள் எடுக்கப்பட்ட போது சிங்கள பெளத்த தேசியவாத சக்திகளின் எதிர்ப்பு காரணமாகவே அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன. அந்த வரலாறு மீண்டும் திரும்புகின்றது என்பதை உணர்த்துவதாகவே சிங்கள பெளத்த தேசியவாத சக்திகளின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் எனவும் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால், அதற்கு எதிராக பெரும் எதிர்ப்புகள் பெளத்த தேசிய வாதிகளால் கிளப்பப்பட்டது. இதே போன்றதொரு நிலைமை தற்போதும் தோன்றி வருவதாகவே தெரிகின்றது. எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சிங்கள பெளத்த தேசியவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM