எம்முடைய இல்லங்களில் வாழும் முதிய வயதினர் அல்லது அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு MCI  எனப்படும் அறிவாற்றல் குறைபாடு அதாவது நினைவுத்திறன் குறைவது அதிகரித்து வருகிறது.

இதனை தொடக்கநிலையிலேயே கண்டறிந்துவிட்டால் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள், நினைவுத் திறன் மேம்படுவதற்கான சில எளிய பயிற்சிகள், சில உணவு வகைகளை கூடுதலாக சேர்த்துக்கொள்வது போன்றவற்றை மேற்கொள்வதால் குணமடையலாம். ஆனால் இதனை கண்டறியாமலோ அல்லது தெரிந்தும் புறகணித்தாலோ நரம்பியல் தொடர்பான கோளாறுகளாகவும், அல்சைமர் போன்ற நினைவுத்திறன் குறைவு பிரச்சினையாகவும் மாறிவிடக்கூடிய அபாயம் உண்டு.

பொதுவாக இந்த வயதினர் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களின் படிப்பு, அவர்களின் போக்கு ஆகியவற்றால் ஏற்படும் மன உளைச்சலால் தான் இத்தகைய குறைபாட்டினை எதிர்கொள்கிறார்கள். அத்துடன் இவர்களுக்கு ஏற்கனவே உடலில் ஏற்பட்டுள்ள முதுமையை எதிர்கொள்வதில் காரணமற்ற பயம் கூடுதலாக இருக்கும். அவர்களுக்கு இந்த பயமும் சேர்வதால் அவர்களுக்கு பதற்றத்திற்கு ஆளாகிறார்கள். இந்த பதற்றம் தான் அவர்களுக்கு ஞாபக மறதியை உண்டாக்குகிறது.

அதனால் இவர்கள் MCI யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கண்டறிந்தவுடன் சிலவற்றை பட்டியலிட்டு, அதனை நாளாந்த பணியாக பின்பற்றினால் இதற்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும். அந்த பட்டியலில் உள்ளரங்க விளையாட்டுகளான சதுரங்கம், கேரம், குறுக்கெழுத்து புதிர், புதிய மொழிக்கான பயிற்சி,நவீன தொழில்நுட்பத்தை கையாளுதல் போன்றவையும் அடங்கும்.

அத்துடன் போதிய அளவிலான ஆரோக்கியமான தூக்கம் கிடைக்கவேண்டும். மனக்கவலை, மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவை இருந்தால் அவை தூக்கத்தைப் பாதிக்கும். வயதானவர்களுக்கு தூக்கம் கெட்டால் அவர்களுக்கு இப்பிரச்சனை விரிவடையும். அதனால் தூக்கத்திற்கு அதாவது ஆரோக்கியமான தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

Dr. மருதுபாண்டியன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்