கலையில் சமத்துவமின்மையை ஏன் கொண்டுவர வேண்டும்? - பெங்களூர் மோகினியாட்டக் கலைஞர் ரேக்கா ராஜு

Published By: Nanthini

23 May, 2025 | 06:56 PM
image

(நேர்காணல் : மா. உஷாநந்தினி)

“மோகினியாட்டக் கலைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மிக அதிகம். நானும் நிறைய விமர்சனங்களை சந்தித்திருக்கிறேன். என்றாலும், அம்மாவின் வழிநடத்தலாலும் பகவான் ஆசிர்வாதத்தாலும் இடையூறுகளை தாண்டி பயணித்துக்கொண்டிருக்கிறேன்...

'இந்தக் கலை உனக்கு எதைக் கற்றுக்கொடுத்திருக்கிறது?' என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்களானால், 'நான்  வாழ்க்கையைப் படித்ததே இந்த நாட்டியத்தினால்தான்' என்பேன்” என இந்தியாவின் பெங்களூரில் புகழ்பெற்ற மோகினியாட்டக் கலைஞரான ரேக்கா ராஜு கூறினார்.

அண்மையில் மோகினியாட்ட நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காக இலங்கைக்கு வருகைதந்த ரேக்கா ராஜுவை கொழும்பில் சந்தித்துக் கதையாடியபோது, சமீபத்தில் தன் அம்மாவை இழந்த துயரத்தில் சில நினைவுகளை கண்ணீரோடு வெளிப்படுத்தினார்.  

மண வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத ஒருவராக, “கலையில் நிறைய சாதிக்க வேண்டும்; நாட்டியத்தைத் தவிர வேறொன்றைப் பற்றி நினைக்கவேண்டிய தேவை ஏற்பட்டதில்லை” என்று புன்னகை ததும்பக் கூறிய ரேக்கா ராஜு தனது எண்ணங்களை தொடர்ந்து இவ்வாறு பகிர்ந்துகொண்டார்.  

இரண்டாவது முறையாக இலங்கைக்கு வருகை தந்திருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?

இலங்கை எனக்கு மிகவும் பிடித்த நாடு. அதிலும், இலங்கை மக்களை நான் அதிகமாக நேசிக்கிறேன். அவர்கள் மிகவும் மென்மையானவர்கள். அக்கறையும் கவனிப்பும் விருந்தோம்பும் பண்பும் நிறைந்தவர்கள்.

இலங்கை, மொரோக்கோ, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் முருகக் கடவுளையும் மயிலையும் பூஜிக்கின்ற பக்தர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை இலங்கையர் ஒருவர் சொல்லியே நான் அறிந்துகொண்டேன்.

இலங்கையிலும் தமிழ் பண்பாடு நிறைந்த இடங்கள் பல உண்டு. அவற்றின் வரலாறு ஆராயப்பட வேண்டும். அதை நோக்கிய யாகத்தை நானும் வளர்த்து வருகிறேன்.

இலங்கையில் “மோகினியாட்டம்” நாட்டிய நிகழ்வொன்றில் முழுமையாக அங்கம் வகிக்கவுள்ளீர்கள்... உங்கள் எண்ணவோட்டம் எப்படியிருக்கிறது?  

கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. எந்தவொரு நிகழ்ச்சியானாலும், நாட்டியத்துக்கு தயாராகும் நொடியிலிருந்து ஆடி முடித்த பின், “ரொம்ப நல்லா இருந்தது" என்று ஒருவரேனும் சொல்கிற வரை அந்த பயம் விலகாது.

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்திவிட்டேன். இருந்தும், ஒவ்வொரு மேடையும் எனக்கு புதியது. ஒவ்வொரு நாட்டிய நிகழ்வும் எனக்கு முதல் நிகழ்வு.

ஒரு முறை நான் சுகவீனமுற்று, நூற்றிநான்கு டிகிரியில் அனல் தெறிக்கும் காய்ச்சல் ஏற்பட்டபோதும், எட்டு நாட்டிய நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக ஆடினேன்.

அம்மா எப்போதும் சொல்வார்.... “என்ன நடந்தாலும் நம்மைத் தேடி வரும் வாய்ப்பைத் தாண்டி, கடமையை தாண்டி எதையும் யோசிக்கக்கூடாது. பகவான் உனக்காக அளிக்கும் வாய்ப்பை ஒரு முறை அலட்சியப்படுத்தினாலும் ஒருக்காலமும் நீ நல்லாயிருக்க மாட்ட” என்று.

இந்த கலைப் பயணத்தில் எனக்கு வழங்கப்படும் ஒவ்வொரு வாய்ப்பும் மிகப் பெரிய பொறுப்பினை உணர்த்துகிறது. அதனால், பிசகின்றி திறமையாக ஆடி நிறைவு செய்யவேண்டும் என்ற ஒன்று மட்டுமே என் சிந்தனையில் இருக்கிறது. திருப்தியாக ஆடி முடித்துவிடவேண்டும். அவ்வளவுதான். அதுதான் கலைக்கும் கலையை கற்றுக்கொடுத்த குருவுக்கும் என் அம்மாவுக்கும் நான் செய்யும் மரியாதை!

“நான் பெரிய கலைஞர். நான் பார்க்காத நிகழ்ச்சியா?" என அலட்சியமாக நினைக்காமல், குரு கற்றுக் கொடுத்த கலையை உரிய முறையில் மேடையில் சபையோரின் முன்னிலையில் பக்திபூர்வமாக சமர்ப்பிப்பதே பெரிய கடமையென நினைக்கிறேன்.

நாட்டியம் என்றதும் உங்களுக்குள் ஒலிக்கும் மந்திரம் என்ன?

என்னுடைய உயிர், மூச்சு, வாழ்க்கை எல்லாமே நாட்டியம்தான். இதை விட ஒரு நீண்ட தத்துவம் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

மோகினியாட்டத்தில் தனித்துவ அடையாளம் கொண்டவர் நீங்கள்... எத்தனையோ நாட்டியங்கள் இருக்க, எது உங்களை மோகினியாட்டத்தின் பக்கம் ஈர்த்தது?

பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக், கதகளி, ஒடிசி நடனங்களை கற்றிருக்கிறேன். பரதநாட்டியம் கற்று அரங்கேற்றம் நிகழ்த்தி, பல நாட்டிய நிகழ்வுகளில் ஆடிய அனுபவங்கள் நிறைய இருக்கின்றன.  

ஆனாலும், மோகினியாட்டத்தை எனக்கான அடையாளமாக்கியவர் எனது அம்மா. அவர் கேரளாவில் பிறந்தவர். அங்கு மிகப் பிரபலமான மோகினியாட்டத்தின் நளினம் அம்மாவுக்குப் பிடித்துப்போய்விட்டது. அத்துடன், பெண்குழந்தைகளுக்கு இந்த நடனம் பொருத்தமானது என்பதால் என்னை மோகினியாட்டக் கலையில் ஈடுபடுத்தினார்.

அப்போது மோகினியாட்டத்துக்கு எந்தவொரு அங்கீகாரமும் அடையாளமும் இல்லாத காரணத்தால், எனது நாட்டியத் தெரிவுக்கு பலர் மாற்றுக் கருத்துக்களை கூறிவந்தனர். “மோகினியாட்டமா...!” என கேலியாக சிரித்தனர். அவர்களுக்கு இந்தக் கலையின் தெய்வீகத்தன்மை புரிந்திருக்கவில்லை.

அப்போது குருவும் அம்மாவும் என்னிடம் சொன்னார்கள்... “வருங்காலத்தில் நீ மோகினியாட்டத்துக்கு மாபெரும் அடையாளமாக திகழாவிட்டாலும், இக்கலை ஓவியத்தில் ஒரு சிறிய கோடாக இரு!" என்று. அந்த அறிவுரையை நான் உள்வாங்கிக்கொண்டேன்.

அதைத் தவிர, மோகினியாட்டத்துக்கு பிரத்தியேகமாக அணியப்படும் வெண்மை நிற ஆடை என்னை அதிகம் ஈர்க்கிற ஒன்றாகிறது. ஏனென்றால், எனக்கு வெண்மை பிடிக்கும்.

பொதுவாக, எல்லாப் பெண்களிடமும் இயல்பாகவே ஒரு நளினம் உண்டு. அதை மெருகேற்றி ஆடுவதே மோகினியாட்டம். அதன் பாவம், கண் அசைவு, அங்க அசைவுகளும் புதுவிதமானவை. என்னுடைய பேச்சு, உடை, பாவம் அனைத்திலும் கூட மோகினியாட்டம் கலந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

மோகினியாட்டத்தை பற்றி அறியாதவர்களுக்கு உங்கள் பாணியில் சிறு விளக்கம் தரமுடியுமா?

விஷ்ணுவின் அவதாரம் மோகினி. ஆகவே, மோகினி ஆடிய ஆட்டம் “மோகினியாட்டம்” என்று சொல்லப்படுகிறது. அனைத்துவித  நளினங்களும் சேர்ந்த கலை இது. மோகினியாட்டத்தில் பாவங்களாகட்டும் கண் அசைவுகளாகட்டும் சலனங்களாகட்டும் எதிலும் உச்சபட்ச நளினம் காட்டப்படும். இந்த நாட்டியத்தில் “விருத்தாகார” - வட்ட வடிவ அசைவுகளே அதிகம்.

விளக்கமாகச் சொல்வதானால், கடல் அலைகள் அசைந்து வளைந்து மேலும் கீழுமாக தவழ்ந்து மெல்லச் செல்வது போல மோகினியாட்டம் ஆடப்படும்.

உங்கள் குருவைப் பற்றி சொல்லுங்களேன்?

மூன்றரை வயதில் எனது கலைப்பயணம் பரதநாட்டியத்துடன் ஆரம்பமானது. அப்போது குரு பத்மினி ராமச்சந்திரனிடம் பரதநாட்டியம் கற்றேன். அவர் இப்போது நம்முடன் இல்லை. என்னில் நாட்டியத்துக்கான அத்திவாரத்தை இட்டவர் அவர்தான்.

அவரைத் தாண்டி அம்மாவை “குரு" என்பேன். ஏதும் தெரியாதவளாக சிறு வயதில் நான் நாட்டியப்பள்ளிக்குச் சென்ற நாட்களில், குரு கற்றுக்கொடுக்கும் பாடத்தை அம்மா முழுமையாக குறித்து வைத்துக்கொள்வார்.

பிறகு, வீட்டுக்குச் சென்றதும் தான் எடுத்த குறிப்புகளைக் கொண்டு எனக்கு தனியாக நாட்டியம் கற்றுக்கொடுப்பார். அம்மா நன்றாக பாடுவார் என்பதால் அவருடைய பாட்டு, என்  நாட்டியப் பயிற்சிக்கு துணையானது.

அது மட்டுமல்ல, அம்மாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என எல்லாவித மொழியறிவும் உண்டு. அவருடைய வழிநடத்தலில்தான் நாட்டியத்துக்கான சிறப்பு பரீட்சைகளை நான் கன்னட மொழியில் எதிர்கொண்டு சித்தியடைந்தேன் என்று சொல்லவேண்டும்.

அதன் பின்னர், தற்போது கேரளாவில் “கலாமண்டலம்” டொக்டர் சுகந்தி அவர்களிடம் நாட்டியம் கற்று வருகிறேன். குரு மிகவும் தன்னடக்கமானவர். பேதம், ஏற்றத் தாழ்வு பாராமல், எவரிடமும் எதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் உன்னதமான மனப்பான்மை கொண்டவர். அவரிடம் நாட்டியம் பயிலும் மாணவி என்ற ஸ்தானத்தை இன்றைக்கும் கொண்டிருக்கிறேன் என்பதில் பெருமையடைகிறேன். எனக்கும் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால், “நானும் ஒரு மாணவி” என்ற இந்த நிலை என்றைக்கும் மாறாது!

அனாயாசமாக வளைந்து ஆடுகிறீர்கள்... இந்த நாட்டியத்துக்கென உடற்பயிற்சி ஏதும் செய்கிறீர்களா?

இதற்கென்று உடற்பயிற்சியெல்லாம் கிடையாது. யோகக்கலையின் உயர்ந்த வடிவமே நாட்டியமாகிறது. மந்திரம், தியானம் செய்யும்போது அரை மணிநேரமானாலும் ஒரே நிலையில் அமர்ந்திருப்பேன். தினமும் நாட்டியமாடுவதால் அதுவே சிறந்த உடற்பயிற்சியாகிவிட்டது.

“நுண்கலைகளின் நிருத்ய தாம கோவில்” நடனப்பள்ளியின் உயர் நோக்கம், பெருந்தன்மை பற்றி பலர் உயர்வாக சொல்கிறார்களே....

அப்படியா! வறுமையில் வாடும் எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நாட்டிய வகுப்புக்கு கட்டணம் செலுத்த முடியாமல், நாட்டியத்துக்குத் தேவையான ஆடை, அணிகலன்களை வாங்கிக்கொடுக்க வசதி இல்லாமல்  நிறையவே கஷ்டப்படுகிறார்கள்.

எனது சிறு வயதில் வறுமை ஏற்பட்டதால் நாட்டியம் பயில வழியின்றி தவித்தவள் நான். அந்த தவிப்பை என் குழந்தைகள் அனுபவிக்கக் கூடாது என்பதால் வறிய குழந்தைகளிடம் நான் கட்டணம் வாங்குவதில்லை. ஆடை, அணிகலன்களையும் நானே வாங்கிக் கொடுத்துவிடுகிறேன். தானங்கள் அனைத்திலும் மிகப் பெரியது வித்தியாதானம்தானே!

எச்.ஐ.வி  பாதிப்புக்குள்ளான சிறுவர்களுக்கும் நீங்கள் நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக கேள்விப்பட்டேன்.... எப்படி இது சாத்தியமானது?

ஆமாம். முதலில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என அவர்களை நான் பிரித்துப் பார்ப்பதில்லை.

எச்.ஐ.வி. ப்ரீடம் பவுண்டேஷன் ஸ்தாபனத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 8 - 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு நான் நாட்டியம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன்.

நாட்டியப்பள்ளியில் எல்லாக் குழந்தைகளும் எனக்கு சமம். எல்லோரையும் ஒரே மாதிரி அணுகுவது என் இயல்பு. பாடம் சொல்லிக்கொடுப்பதாகட்டும் கண்டிப்பதாகட்டும் பாராட்டுவதாகட்டும்.... எதுவாயினும் என்னில் பாரபட்சம் இருக்காது.

தற்போது என்னிடம் உள்ளூரில் சுமார் முந்நூறு மாணவர்கள், உலகளவில் ஐந்நூறு மாணவர்கள் நாட்டியம் பயில்கிறார்கள். எல்லோரையும் போல் அந்தக் குழந்தைகளும் தங்கள் கலைப்பயணத்தை சிறப்பாகக் கொண்டு செல்கின்றனர். அவர்களின் நிலை என்னவென்பது என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதனால்தான் அந்தக் குழந்தைகளால் இயல்பாக கலையுலகில் சஞ்சரிக்க முடிகிறது.

துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் சிலர் இன்று நம்மிடையே இல்லை. அவர்கள் “மறைந்துவிட்டதாக” நான் ஒருபோதும் கருதுவதில்லை. நாட்டியம் என்றொரு ஸ்தானத்தை அடைந்துவிட்ட பிறகு, அடுத்த கட்டத்துக்கு என் குழந்தைகள் சென்றுவிட்டதாகவே எண்ணுகிறேன்.

மோகினியாட்டம் பயில்பவர்களுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன?

முதல் தகுதி, ஆர்வம் இருக்கவேண்டும். இரண்டாவது, நாட்டியம் பயில வந்துவிட்டால், எவ்விதமான பெருங்கொண்ட எண்ணத்தையும் தலை மேல் ஏற்றிக்கொள்ளாமல், ஒரு வெற்றுக்காகிதம் போல, கலையின் பெறுமதியை உணர்ந்து திறந்த சிந்தனையோடு, குருவுக்கு முன்னால் அர்ப்பணித்து நிற்க வேண்டும். மனதையும் ஆத்மாவையும் ஒருசேர அர்ப்பணித்தே ஆகவேண்டும் என்பது என்னுடைய அபிப்பிராயம்.

ஒரு கலையை கற்பது கணக்கு, விஞ்ஞானம் படிப்பது போன்றதல்ல. கலை, உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடியது. அதற்கு சிறந்த உதாரணம் நான்.

'இந்தக் கலை உனக்கு எதைக் கற்றுக்கொடுத்திருக்கிறது?' என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்களானால், 'நான் வாழ்க்கையைப் படித்ததே நாட்டியத்தினால்தான்' என்று சொல்வேன்.

பரதநாட்டியத்தைப் போல் மோகினியாட்டம் பெரிதளவில் அறியப்படவில்லையே... ஏன்?

மோகினியாட்டத்தின் வளர்ச்சி வேகம் மிக மிகக் குறைவு என்பது ஒரு காரணம்.

இன்னொன்று, எல்லை தாண்டி சில விடயங்களை செய்கிறபோது பல்வேறு சர்ச்சைகள் வெளிக்கிளம்பலாம். அவற்றையும் மீறி, “நான் இதைத்தான் செய்வேன்... இப்படித்தான் செய்வேன். இதுதான் சரி” என்று  துணிந்து செயற்பட்டால்தான் சாதிக்க முடியும். பரதநாட்டியமும் அப்படி வளர்ந்த ஒரு கலையே. முந்தைய “குரு"க்களின் விடாமுயற்சியாலும் கடினமான போராட்டத்தாலும் எத்தனையோ சர்ச்சைகளையும் சவால்களையும் பரதநாட்டியம் கடந்து வந்திருக்கிறது.

மோகினியாட்டக் கலைஞர்களுக்கு இந்த சவால்கள் அதிகமாகவே இருக்கின்றன. நானும் நிறைய விமர்சனங்களை சந்தித்திருக்கிறேன். என்றாலும், அம்மாவின் வழிநடத்தலாலும் பகவான் ஆசிர்வாதத்தாலும் இடையூறுகளை தாண்டி பயணித்துக்கொண்டிருக்கிறேன்.

அதேசமயம், வேறு சில மோகினியாட்டக் கலைஞர்களால் முன் நகர முடியவில்லை. ஏன்? சமூகம், பொருளாதாரம், விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதது.... என அவர்களை சுற்றிலும் பல காரணங்கள்! அனைத்தையும் அவர்கள் எதிர்கொண்டு வரவேண்டும்!  

“கலை கலைக்காக” என்போர் ஒருபுறம்... “கலை மக்களுக்காக” என்போர் மறுபுறம்.... நீங்கள் எந்த ரகம்?

கலை கலைக்காக என்று சொல்லிக்கொண்டு யாரும் வீட்டுக்குள்ளேயே எந்த கலையையும் வளர்த்து முன்னேறிவிடவில்லை. கலை கலைக்காக செய்யப்பட்டாலும் அது முடிவில் மக்களை போய்ச் சேர வேண்டும்.

ஏனைய நடனங்களைப் போல மோகினியாட்டத்திலும் மானிடக் கருத்துக்கள், சமுதாயப் பிரச்சினைகளை காட்ட முடியுமா?

தாராளமாக.... சிந்தனைக் கருத்துக்களோ சமூகப் பிரச்சினைகளோ எதுவானாலும் அதை நாட்டியத்தில் கொண்டுவர முடியும்.

சமீபத்தில் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் அமில வீச்சு தாக்குதலின் கொடூரத்தை எடுத்துக்காட்டும் விதமாக மோகினியாட்டம் ஆடியிருந்தேன்.

அடுத்ததாக, இறப்பு நிகழும் நிமிடங்கள் எப்படியிருக்கும் என்பதை ஒரு நாட்டியமாக அமைத்து அண்மையில் ஆடியிருந்தேன். எனது அம்மா மறைந்து ஒரு வாரத்தில் அந்த நாட்டியத்தை நான் ஆடியது உணர்வுபூர்வமான தருணம். இந்தக் கருவை நான் தெரிவுசெய்ததும் அம்மாவின் இறப்பும் முன்னரே நிர்ணயிக்கப்பட்டதைப் போல ஏக காலத்தில் நடந்திருக்கிறதென்றால் பாருங்கள்...

தண்ணீர் பிரச்சினையை நாட்டியத்தில் காட்டியிருக்கிறேன். சுற்றுச்சூழல் தூய்மையை சுட்டிக்காட்டும் விதமான நடனங்களையும்  அமைத்திருக்கிறேன். நாட்டியம் ஆடுவதற்கு முன்னர் பூமியைத் தொட்டு நமஸ்காரம் செய்கிறோம். அந்த பூமியை நீங்கள் தூய்மையாக வைத்துக்கொள்ளாவிட்டால், உங்களால் எப்படி அதை தொட்டு வணங்க முடியும் என்ற கருத்தையும் அதில் வெளிப்படுத்தியிருந்தேன்.  

இயல்பு வாழ்க்கையில் நடக்கக்கூடிய எல்லா விடயங்களையும் கருப்பொருள்களாக எடுத்தாட முடியும். அவற்றை முத்திரை, பாவங்கள் சேர்த்துச் செய்கிறபோது, அவை கலை வடிவமாகவும் செய்திகளாகவும் மக்களுக்குப் போய் சேர்கின்றன.

“ஆண்களுக்கு நான் மோகினியாட்டம் கற்றுக்கொடுப்பதில்லை” என்று முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தீர்களே.... ஏன்?

ஆம். ஆண்களுக்கு நான் நாட்டியம் கற்றுக்கொடுப்பதில்லை. சிலர் என்னிடம்  கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால், ஒரு ஆணுக்கு நாட்டியம் சொல்லிக்கொடுக்குமளவு பக்குவ நிலையை நான் இன்னும் அடையவில்லை என்றே கருதுகிறேன். இருப்பினும், இந்த காலகட்டத்தில் ஆண்களும் மோகினியாட்டம் ஆடுகிறார்கள். அது வரவேற்கத்தக்கது.

“இது மோகினியாட்டம்; மோகனன் ஆட்டம் இல்லை", “ஆண்கள் மோகினியாட்டம் ஆடக்கூடாது” என்பது போன்ற சர்ச்சையான கருத்துக்கள் கேரளாவில் கிளம்பியிருந்தன.... இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மோகினி அவதாரம் ஏற்று வந்தவர் விஷ்ணு பகவான்தானே. ஆணே, பெண்ணாக அவதரித்து ஆடிய மோகினியாட்டத்தை ஆண்கள் ஆடக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்?

நாட்டியத்தின் கடவுள் நடராஜர். அவர் ஆண்தானே. அப்படியிருக்க, குறிப்பிட்ட ஒரு நாட்டியத்தை ஆண்கள் ஆடக்கூடாது என்று சொல்வது நியாயமல்ல.

ஆண் - பெண் சமத்துவத்தைப் பற்றி பேசுகிறோம். ஆனால், கலையில் ஆண் - பெண் பேதம் பார்க்கிறோம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

எந்தவொரு கலையும் “இது இவருக்கு மட்டுமானது" என்று வரையறுக்கப்படவில்லை. ஆண்கள் மட்டும் மிருதங்கம் வாசிக்க வேண்டும், பெண்கள் மட்டுமே வீணை இசைக்க வேண்டும் என்ற கருத்து இன்றில்லை. இராவணன் போன்று வீணை மீட்ட யாரால் முடியும்? ஆனால், வீணையிசையின் அதிபதியாக சரஸ்வதி தேவியை பூஜிக்கிறோம். ஆக, ஆண்களாயினும் பெண்களாயினும் எல்லோரும் எல்லா கருவிகளையும் இசைக்கிறார்கள். அப்படியிருக்க, கலையில் ஏன் சமத்துவமின்மையை கொண்டுவர வேண்டும்?

இலங்கையில் மோகினியாட்டப் பயிற்சி அளிக்கத் திட்டமுண்டா?

நிச்சயமாக... இலங்கையிலும் மோகினியாட்டத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் விருப்பமும் நிறையவே இருக்கிறது.  

பரதநாட்டியத்தைப் போன்று மோகினியாட்டமும் நல்லதொரு ஆடல் கலையே என்ற சிந்தனையோடும் நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் கற்க முன்வருவார்களாயின், பயிற்சி அளிக்கக் காத்திருக்கிறேன்.

உங்கள் அடுத்த படைப்பு...?

மணிப்புரி, பரதம், மோகினியாட்டம் மூன்று நடனங்களையும் ஒரு கோட்டில் கொண்டுவந்து ஒரு நாட்டியத்தை அமைத்து மேடையேற்றவுள்ளோம். இதில் கிருஷ்ணன், சிவன், ராதை ஆகிய தெய்வங்கள் இணைவர்.

கிருஷ்ணன், ராதை இருவரது ராசலீலையை பார்த்து மகிழும் சிவன் மோகினி வேடமேற்று, கோபிகைகளில் ஒருவராக பிருந்தாவனத்தில் பிரவேசித்து கிருஷ்ணன், ராதை இருவருடன் நடனமாடியதாக ஒரு புராணக் கதை உண்டு. கிழக்கிந்தியாவில் ஒரு கிரந்தத்தில் இதற்கு ஆதாரமாக சில குறிப்புகள் இருக்கின்றன. அடுத்த இரண்டு மாத உழைப்பும் இந்த நாட்டியத்துக்கானதாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைகாசி விசாகத்தின் மகத்துவங்கள்....

2025-06-09 09:14:33
news-image

"நாட்டியத்தில் முழுமையான சந்தோஷத்தை உணர்கிறேன்" -...

2025-06-11 17:04:49
news-image

கலையில் சமத்துவமின்மையை ஏன் கொண்டுவர வேண்டும்? ...

2025-05-23 18:56:02
news-image

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, அரசடி ஶ்ரீ...

2025-05-08 13:55:50
news-image

மனம் திறந்தார் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’

2025-04-29 21:17:35
news-image

காண்பியக் காட்சி - கே.கே.எஸ் வீதி...

2025-04-25 21:34:14
news-image

இசையின் காதல் ராணி எஸ். ஜானகியின்...

2025-04-23 13:13:06
news-image

வயலின் மறுசீரமைப்பில் ஒரு கலங்கரை விளக்கமாக ...

2025-04-22 13:58:25
news-image

புதிய அலை கலை வட்ட இளைஞர்...

2025-04-19 10:02:50
news-image

பங்குனி உத்தர நாயகி போற்றி....!

2025-04-04 16:54:50
news-image

நுவரெலியா காயத்ரி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள 108...

2025-04-10 16:32:08
news-image

கம்பளை முத்துமாரியம்மன் தேவஸ்தான பங்குனித் திங்கள்...

2025-04-06 12:33:39