நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை ஏற்படுத்தி அரசியலில் பிரபல்யத்தை பெற்றுக்கொள்வதற்கு ஒரு குழுவினர் சதி செய்வதாக குற்றம் சாட்டும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்காக தினமும் ஊடகவியலாளர் மாநாடு நடத்தி இனவாதத்திற்கு தூபமிடுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெயாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் இனவாதத்தை தூண்டிவிடும் குழுக்கள் இயங்குகின்றது. அத்தோடு நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பாதையை ஒரு குழு செப்பனிட்டுக் கொண்டிருக்கின்றது.

இக் குழு நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதை உங்களால் பார்க்க முடியும்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலமே அவர்களது அரசியலில் பிரபல்யம் அடைய முடியும். எமது நாட்டில் அனைத்து இனங்கள் மத்தியிலும் அடிப்படை வாதிகள் இருக்கின்றனர். ஆனால் அனைத்து மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானமான நாட்டை கட்டியெழுப்புவதற்கே நாம் புதிய ஆட்சியை ஏற்படுத்தினோம்.