(நெவில் அன்தனி)
மும்பை வான்கடே விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (21) நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 63ஆவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸை 59 ஓட்டங்களால் வெற்றிகொண்ட மும்பை இண்டியன்ஸ் கடைசி அணியாக ப்ளே ஒவ் சுற்றுக்குள் நுழைந்தது.
சூரியகுமார் யாதவ், நாமன் திர் ஆகியோரின் கடைசிக் கட்ட அதிரடி துடுப்பாட்டங்களும் மிச்செல் சென்ட்னர், ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் மும்பை இண்டியன்ஸை வெற்றிபெறச் செய்தன.
மும்பை இண்டியன்ஸ் ப்ளே ஒவ் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளதால் மாற்று வீரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சரித் அசலன்க, ஜொனி பெயாஸ்டோ, ரிச்சர்ட் க்ளீசன் ஆகியோர் அவ்வணியில் இணைவது உறுதியாகின்றது.
மும்பை இண்டியன்ஸுக்கும் டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கும் தீர்மானம் மிக்கதாக அமைந்த இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் கடைசி 2 ஓவர்களில் குவிக்கப்பட்ட 48 ஓட்டங்களின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.
மும்பை இண்டியன்ஸ் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை வேகமாக பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டனர்.
சூரியகுமார் யாதவ், நாமன் திர் ஆகிய இருவரது அதிரடி துடுப்பாட்டங்களே மும்பை இண்டியன்ஸுக்கு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவின.
ரெயான் ரிக்ல்டன் (25), ரோஹித் ஷர்மா (5) வில் ஜெக்ஸ் (21) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழக்க மொத்த எண்ணிக்கை 58 ஓட்டங்களாக இருந்தது.
சூரியகுமார யாதவ், திலக் வர்மா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர்செய்தனர்.
திலக் வர்மா 27 ஓட்டங்களைப் பெற்றார்.
அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா வெறும் 3 ஓட்டங்களையே பெற்றார்.
18 ஓவர்களில் நிறைவில் மும்பை இண்டியன்ஸ் 5 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
இந் நிலையில் 19ஆவது ஓவரில் சூரியகுமார் யாதவ் 2 பந்துகளில் 7 ஓட்டங்களையும் நாமன் திர் 4 பந்துகளில் 20 ஓட்டங்களையும் விளாசினர்.
கடைசி ஓவரில் சூரியகுமார் யாதவ் தனியாக 21 ஓட்டங்களைக் குவித்தார்.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 21 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர்.
வழமைபோல் ஆரம்பத்தில் நிதானத்துடனும் கடைசியில் அதிரடி ஆட்டத் திறனுடனும் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 43 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
நாமன் திர் 8 பந்துகளில் 2 பவண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் முக்கேஷ் குமார் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
181 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்ததுடன் ப்ளே ஓவ் வாய்ப்பையும் இழந்தது.
டெல்ஹி துடுப்பாட்டத்தில் நால்வர் மாத்திரமே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். ஏனையவர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டம் இழந்தனர்.
ஆரம்ப வீரர் கே.எல். ராகுல் 11 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் சமீர் ரிஸ்வி 38 ஓட்டங்களையும் விப்ராஜ் நிகம் 20 ஓட்டங்களையும் பின்வரிசையில் அஷுட்டோஷ் ஷர்மா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மிச்செல் சென்ட்னர் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: சூரியகுமார் யாதவ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM