ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிற்சங்கம் இந்த நாட்டின் பொருளாதார, சமூக, கலாசார துறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பங்களிப்பு செய்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வரலாற்று காலத்திலிருந்தே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், கட்சியின் தொழிற்சங்கமும் ஒரே பாதையில் பயணித்த மனிதநேய இயக்கமாகுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க சம்மேளனத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நினைவு பலகையை திரைநீக்கம் செய்து, புதிய அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, விசேட விருந்தினர்கள் பதிவேட்டிலும் நினைவுக் குறிப்பினை பதிவு செய்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதி தலைவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்னவினால் விசேட முன்மொழிவு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா சுதந்திர அரச தொழிற்சங்க சம்மேளனத்தின் மூன்று சிரேஷ்ட உறுப்பினர்களான ஸ்ரீ லங்கா சுதந்திர பொது மற்றும் மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவையின் பட்டதாரி சங்க தேசிய அமைப்பாளர் கலாநிதி எரிக் ஜயலத், ஸ்ரீ லங்கா சுதந்திர முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தின் முன்னாள் பிரதம செயலாளர் டியூடர் ரணசிங்க, ஸ்ரீ லங்கா புகையிரத தொழிலாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் ம. ரூபசிங்க ஆகியோருக்கு ஜனாதிபதியால் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு விசேட நினைவுப் பரிசும் இதன்போது வழங்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்ன, ஸ்ரீ லங்கா சுதந்தி ஊழியர் சங்க பொது செயலாளர் லெஸ்லி தேவேந்ர, ஸ்ரீ லங்கா சுதந்திர அரச தொழிற்சங்க சம்மேளன பொது செயலாளர் டபிள்யூ.ரோய் டி மெல் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர அரச தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.