(மனோகரன் பிரியங்கா)
இயற்கையின் மடியில் மூன்று அதிசயங்களை ஒரே பயணத்தில் அனுபவிப்பது, மனிதனுக்கான ஆன்மிகத் தேடலுக்கும் அமைதிக்கும் வழிகாட்டும் ஓர் அரிய வாய்ப்பாகும். அழகும் அமைதியும் ஒன்றிணையும் ஹோட்டன் சமவெளியில், உலகத்தின் விளிம்பே ஒரு ஆன்மிக மேடையாக திகழ்கிறது. மனம் தேடும் அமைதியும், கண்கள் தேடும் அழகும் ஹோட்டன் சமவெளியின் மூன்று அற்புதங்களில் காத்திருக்கின்றன.
இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் 2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஒளிந்திருக்கும் ஹோட்டன் சமவெளி (Horton Plains) ஒரு பசுமை வனத்தின் பேரழகை தாங்கி நிற்கக்கூடிய, நாட்டின் முக்கியமான உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட தேசிய பூங்காவாகவும் உலக பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது.
இது ஒரு பசுமை மேடாகவும், தனிச்சிறப்புடைய பருவநிலையை கொண்ட இடமாகவும் திகழ்வதால், சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி, ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் இந்த இடத்துக்குச் செல்வதில் ஆர்வம் அதிகம்.
ஹோட்டன் சமவெளியில் காணப்படுகின்ற ஆறுகள் இலங்கையின் முக்கியமான நீர்த்தேக்கங்கள் மற்றும் பாசனத்துக்கு உயிரோட்டம் வழங்குகின்றன. ஹோட்டன் சமவெளி நாட்டின் நீர் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஹோட்டன் சமவெளி உலகத்தில் மிக அரிய உயிரியல் சூழல்களுக்குள் ஒன்றாக கருதப்படுகிறது. இலங்கையில் மட்டுமே காணப்படும் மிக அரிய வகையான 90%க்கும் மேற்பட்ட பல உயிரினங்கள், தாவரங்கள், விலங்குகள், பறவைகள் இங்கு காணப்படுகின்றன. இந்த சமவெளி வனவிலங்கு ஆராய்ச்சி, உயிரியல் பாதுகாப்பு மற்றும் உலக பாரம்பரிய காப்பகங்களுக்கு முக்கியமான இடமாகவும் விளங்குகிறது.
இங்குதான் உலகப் புகழ்பெற்ற உலக முடிவு (World's End), சிறிய உலக முடிவு (Mini World's End) மற்றும் பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி (Baker's Falls) போன்ற மூன்று இடங்கள் காணப்படுகின்றன. இந்த மூன்று இடங்களும் இயற்கையின் மண்ணோடு, மரத்தோடு, நீரோடு, ஆகாயத்தோடு ஒன்றிணைந்து மனிதனுக்கு ஆன்மிகத் தூண்டுதல் தரும் இடங்களாக இன்று வரை நிலைத்து நிற்கின்றன. இவை மூன்றையும் ஒரே பயணத்தில் அனுபவிப்பது என்பது ஒருவித ஆசிர்வாதம் என்று கூறலாம்.
பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி (Baker's Falls)
ஹோட்டன் சமவெளி நடைபாதை வழியாக செல்லும் பயணிகள் தவறாது பார்க்கும் ஓர் இடம்தான் பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி (Baker's Falls). மலைத் தொகுதியின் நடுவே 20 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழும் இந்த நீர்வீழ்ச்சி, சுற்றியுள்ள செடிகள் மற்றும் பசுமைக் காடுகளால் சூழப்பட்டிருப்பதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாக திகழ்கிறது.
பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சியின் குளிர்ந்த நீர், ஒலி, சூழல் அனைத்தும் ஒரு கலைவிழா போலவும், மனதுக்குள் ஒரு தீரா அமைதி ஊட்டும் ஆலயமாகவும் தோன்றும். புகைப்படக் கலைஞர்களுக்கு ஏற்ற இடமாகவும் திகழ்கிறது. பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை, மர நிழல் வழியாகத் தொடரும் ஒரு அழகிய நடைபாதை. வழியிலே அரிய மலர்கள், நீளமான பனிப்புற்கள், கொஞ்சும் பறவைகள்.... இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் காணலாம்.
பசுமை காட்டின் மடியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, சுற்றுச்சூழல் அமைதியையும் இயற்கையின் பசுமையையும் மனதிற்கு பரிசளிக்கிறது. இது பயணிகளை தங்கள் தினசரி அழுத்தங்களிலிருந்து தற்காலிகமாகக் கடத்திச் செல்லும் ஒரு மாயாஜாலக் காட்சியாக தோன்றும். பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சியின் அழகே, அதை ஒரு புகைப்படத்தில் மட்டும் அடக்க முடியாது என்பதுதான். நேரில் சென்று அதன் குளிர்ந்த நீர்த் துளிகளை அனுபவிக்க வேண்டியதுதான் அதன் உண்மையான அனுபவம்.
வரலாறும் பெயரும் பெருமையும்
இந்த நீர்வீழ்ச்சிக்கு “பேக்கர்ஸ்” என பெயரிடப்பட்டதற்கான முக்கியமான வரலாற்றுப் பின்னணி ஒன்றுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளரான சாமுவேல் வைட் பேக்கர் (Samuel White Baker : 1821 - 1893) அவரது மனைவி ப்ளோரன்ஸுடன் இலங்கைக்கு வந்தபோது, நுவரெலியா மற்றும் அதனை சுற்றியுள்ள பருவமழை வனப்பகுதிகளை ஆராய்ந்தார்.
இவர் ஹோட்டன் சமவெளி (Horton Plains) மற்றும் அதன் இயற்கை நிலங்களைப் பற்றி ஆராய்ந்தபோது அங்கு காணப்பட்ட நீர்வீழ்ச்சியை முதல் முறையாக வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினார். மேலும் இந்த நீர்வீழ்ச்சி தொடர்பில் அவர் பல ஆவணங்களை எழுதினார்.
இந்த நீர்வீழ்ச்சியை முதலில் கண்டறிந்தவர் பேக்கர் என்பதால் அவருடைய நினைவாகவே இந்த நீர்வீழ்ச்சி "Baker's Falls" என அழைக்கப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. அது மாத்திரமின்றி, பேக்கர் இலங்கையில் தான் பெற்ற அனுபவங்களைப் பற்றி “Eight Years in Ceylon” எனும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இதனால் பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி, இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சி ஆகிய இரண்டிலும் சம நிலையில் இடம்பெறவேண்டிய முக்கிய இடமாகவும் கருதப்படுகிறது.
உலக முடிவு (World's End)
ஹோட்டன் சமவெளியிலிருந்து சுமார் 9.5 கிலோமீட்டர் நடைபயணம் செய்யும்போது இறுதியாக காணக்கூடிய மிக அழகான இயற்கைக் காட்சிகளில் ஒன்றுதான் உலக முடிவு (World's End). இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 870 மீட்டர் (2,854 அடி) உயரத்தில் உள்ள அதிர்ச்சியூட்டும் பள்ளதாக்கு போன்று காணப்படும் ஒரு புவியியல் உருவாக்கம் ஆகும்.
இங்கு நின்று பார்த்தால், கீழே பரந்த நிலப்பரப்பும் அலைபாயும் மேகங்கள், பசுமை வயல்கள் தென்படும். அப்பரப்பை தெளிவான நாட்களில் அம்பாந்தோட்டை வரை பார்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.
World's End பார்வையிட வருபவர்கள் காலை 6 - 9 மணிக்கு இடையே செல்ல பரிந்துரைக்கப்படுகிறது. அதன் பின்னர், சென்றால் மூடுபனி அதிகமாகி, அப்பகுதியை தெளிவாக பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.
நல்ல காலநிலையில் தெளிவாக பார்ப்பதற்கு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலம் சிறந்ததாக கருதப்படுகிறது.
World's End இயற்கையாக உருவான ஒரு பள்ளத்தாக்காக இருப்பதால், பாதுகாப்பான இடத்தில் நின்று பார்வையிட வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.
உலக முடிவு (World's End) ஹோட்டன் பிளெயின்ஸ் தேசிய பூங்காவின் முத்துக்கிளியாய் விளங்கும் இயற்கையின் அற்புதங்களில் ஒன்று. கடும் பாறை முகட்டில் விளிம்பில் நின்று பல்லாயிரம் அடிகளுக்கு கீழே இருக்கும் அந்த வெறிச்சோடிய பள்ளத்தாக்கை பார்க்கும்போது, மனிதன் இயற்கையின் அழகுக்கு முன்னால் எவ்வளவு சிறியவன் என்பதை உணர வைக்கும்.
காலை வேளையில் அங்கு மிதக்கும் பனிமூட்டம், பள்ளத்தாக்கின் ஆழத்தையும் அதன் மர்மத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது. World's End என்பது வெறும் ஒரு பார்வையிடும் இடம் மட்டுமல்ல. அது ஒரு அனுபவம்.
இயற்கையின் மௌனமும் அதன் வலிமையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டிய ஒரு மர்மமான அரங்கம். இந்த இடம் சுற்றுலாவுக்கு மட்டுமல்ல, மனிதன் தன் உள்ளத்தை ஆழமாக பார்க்கும் தியானபூர்வமான இடமாகும்.
சிறிய உலக முடிவு (Mini World's End)
சிறிய உலக முடிவு (Mini World's End), ஹோட்டன் சமவெளியில் மறைந்திருக்கும் மற்றுமொரு அற்புதம். இது, பெரிய உலக முடிவை (World's End) ஒத்த ஒரு குறைவான பாறை விளிம்பாக இருந்தாலும், அதன் அழகிலும் மர்மத்திலும் சிறிதும் குறைவில்லை. சுமார் 270 மீட்டர் (885 அடி) உயரத்தில் அமைந்திருந்தாலும் கூட பயணிகளுக்கு ஓர் எளிமையான ஆனந்த அனுபவத்தை கொடுக்கும்.
பசுமைக் காடுகளால் சூழப்பட்ட இந்த பாறை விளிம்பில் நின்று கீழே தென்படும் காட்சியை பார்த்தால், பள்ளத்தாக்கும் அடர்ந்த காடுகளும் அப்பாலுள்ள கிராமங்கள் வரை விரியும் பசுமை விரிப்பும் பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும். காலையிலோ மாலை நேரத்திலோ செல்லும்போது, பனிக்குடை நெறியடையும் இந்த இடம், இயற்கையின் அமைதியையும், அதன் பேரழகையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க ஒரு சிறப்பான வாய்ப்பை வழங்குகிறது.
பெரிய World's End என்பது அதன் உயரத்தாலும் தாக்கத்தாலும் உலக அளவில் புகழ்பெற்ற இடம். அதேவேளை, சிறிய World's End, அதனை ஒத்த ஒரு சிறிய பதிப்பு போல் இருந்தாலும், அதன் அமைதி, தனிமை மற்றும் அழகு தனித்துவம் வாய்ந்தது. பெரும் கூட்டத்திலிருந்து விலகி அமைதியாக இயற்கையை ரசிக்க விரும்புவோருக்கு சிறிய World's End சிறந்த தேர்வாக இருக்கலாம்.
இங்கு நின்று பார்வையிடும்போது, பசுமை மலைகள், பள்ளத்தாக்குகள், தொலைவில் பசுமையாய் விரியும் புல்வெளிகள் என எல்லாம் ஒரு கனவு போல் கண்களுக்கு தெரியும். மனித மனதை அமைதிக்குள் ஆழ்த்தும் இந்த இடம், இயற்கையோடு ஒருமித்த தனித்துவ அனுபவத்தை வழங்குகிறது. சிறிய உலக முடிவு, அதன் எளிமையும் அமைதியுமான சூழலாலும் தனக்கே உரித்தான சாயலில் பயணிகளின் நினைவுகளில் நிலைத்திருக்கும்.
பசுமை காட்டின் மடியில் அமைந்துள்ள இந்த இடம், நமது மனதில் ஒரு தனித்துவமான அமைதியையும் நிம்மதியையும் விதைக்கிறது. பனிக்காற்று முகத்தை மெதுவாக வருடும் அந்த நொடி, எங்கோ திரியும் பறவையின் சத்தம் மட்டும் காதுக்கு கேட்கும் அந்த அமைதியான சூழல் நம்மை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது.
இங்கு நின்று கீழே பார்ப்பது ஒரு சாதாரண பார்வையல்ல. கீழே காணும் பள்ளத்தாக்கும் அதன் மௌனமும், நம் உள்ளத்திற்குள் ஒரு மிதமான பீதியையும், அசாதாரண அமைதியையும் ஏற்படுத்துகிறது. நம் மனதை நகர்த்தும் அந்த அழகு, நகரங்களின் குழப்பத்திலிருந்து முற்றிலும் வேறான ஒரு பயணமாக இருக்கும். சிறிய உலக முடிவு பயணத்தை ஒரு ஆன்மிக அனுபவமாகவே கருதலாம்.
இந்த மூன்று இயற்கை அதிசயங்களை ஒரே பயணத்தில் அனுபவிப்பது, நம் அன்றாட அலைச்சல்களிலிருந்து ஓய்வெடுத்து, இயற்கையின் அழகையும் ஆன்மிகத்தையும் சுவைக்கும் ஓர் அரிய வாய்ப்பாகும். இயற்கையோடு நெருங்கி, அதனுடன் ஒன்றிணைந்து, நமது உள்ளத்தை ஆழமாக அறிந்துகொள்ளும் பயணமாக இந்த இடங்கள் என்றும் நினைவில் நிற்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM