உபாதையீடு நேரத்தில் யுவிந்து கொடிதுவக்கு வைத்த ட்ரை மூலம் 13ஆவது தடவையாக டயலொக் ஜனாதிபதி கிண்ணத்தை இஸிபத்தன சுவீகரித்தது

Published By: Vishnu

18 May, 2025 | 10:29 PM
image

(நெவில் அன்தனி)

நடப்பு சம்பியன் இஸிபத்தன கல்லூரிக்கும் முன்னாள் சம்பியன் கண்டி திரித்துவ கல்லூரிக்கும் இடையில் கொழும்பு றோயல் கல்லூரி விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) பிற்பகல் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய டயலொக் ஜனாதிபதி கிண்ண இறுதிப் போட்டியில் 12 - 9 என்ற புள்ளிகள் அடிப்படையில் இஸிபத்தன வெற்றிபெற்று சம்பியனானது.

டயலொக் ஜனாதிபதி கிண்ணத்தை 13ஆவது தடவையாக சுவீகரித்ததன் மூலம் பாடசாலைகள் றக்பி மன்னர்கள் என்பதை இஸிபத்தன மீண்டும் நிரூபித்தது.

மிகவும் விறுவிறுப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இறுதிப் போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது திரித்துவ கல்லூரி 9 - 7 என முன்னிலையில் இருந்தது. இதன் காரணமாக 12 வருடங்களின் பின்னர் திரித்துவம் சம்பியன் பட்டத்தை சூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பந்து மைதானத்திற்குள் விளையாட்டில் தொடர்ந்து இருந்ததால் ஆட்டம் நிறுத்தப்படாமல் தொடரப்பட்டது. றக்பி விளையாட்டில் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் ஒரு அணி முன்னிலை வகித்தால் மாத்திரமே முழு நேரத்துடன் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும். அல்லது பந்து விளையாட்டில் இருக்கும்வரை ஆட்டம் தொடர்வது றக்பி விதியாகும்.

இந்நிலையில் உபாதையீடு நேரத்தில் யுவிந்து கொடிதுவக்கு கடும் பிரயாசை எடுத்துக்கொண்டு திரித்துவ அணியின் நான்கு வீரர்களது தடுப்பாட்டத்தை முறியடித்து திரித்துவ எல்லைக் கோட்டிற்குள்ளே ட்ரையை வைத்து இஸிபத்தனவின் வெற்றியை உறுதிசெய்து போட்டியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

இந்த இறுதிப் போட்டியில் இரண்டு அணியினரும் முதலாவது விசிலில் இருந்து கடைசி விசில்வரை கடுமையாக மோதி இரசிகர்களை பரபரப்பின் உச்சத்திற்கே இட்டுச் சென்றனர்.

இரண்டு அணியினரும் இப் போட்டியில் தவறுகள் இழைத்ததுடன் திரித்துவ அணியினர் தொடர்ச்சியாக தவறுகளை இழைத்ததால் தோல்வியைத் தழுவ நேரிட்டது.

போட்டியின் 11ஆவது நிமிடத்தில் யுவிந்து கொடிதுவக்கு வைத்த ட்ரைக்கான மேலதிக புள்ளிகளை அவிஷ்க ஹிரான் பெற்றுக்கொக்க, இஸிபத்தன 7 - 0 என முன்னிலை அடைந்தது.

ஆனால், திரித்துவ வீரர் ஷான் அல்தாப் 13ஆவது, 18ஆவது நிமிடங்களில் இலகுவான பெனல்டிகளைப் புகுத்தி புள்ளிகள் நிலையை  6 - 7 என ஆக்கினார்.

சற்று நேரத்தில் அல்தாப் இரண்டு ட்ரொப் கிக்களை முயற்சித்தபோதிலும் அவை இலக்கு தவறின.

அதன் பின்னர் இஸிபத்தன எல்லையை ஆக்கிரமித்த திரித்துவம் இரண்டு சந்தர்ப்பங்களில்  தவறுகளை இழைத்ததால்ட்ரை வாய்ப்புகளைத் தவறவிட்டது.

இடைவேளையின்போது 7 - 6 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இஸிபத்தன முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் தொடர்ந்தபோது இரண்டு அணிகளுக்கும் மாறிமாறி பெனல்டிகள் கிடைத்தன. ஆனால், அவை முறையாக பயன்படுத்தப்படவில்லை.

போட்டியின் 54ஆவது நிமிடத்தில் திரித்துவ வீரர் அல்தாப் 35 மீற்றர் தூரம் பந்துடன் ஓடி வைத்த ட்ரை, தொலைக்காட்சி மத்தியருடனான ஆலோசனையின் பின்னர் கள மத்தியஸ்தரினால் நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து 50 மீற்றர் பெனல்டி உட்பட இரண்டு பெனல்டிகளைத் தவறவிட்ட அல்தாப், 60ஆவது நிமிடத்தில் ட்ரொப் கோல் மூலம் திரித்துவ அணியை 9 - 7 என முன்னிலையில் இட்டார்.

அதன் பின்னர் இஸிபத்தன இரண்டு பெனல்டிகளைத் தவறவிட்டது.

போட்டியின் உபாதையீடு நேரத்தின் போது இஸிபத்தன வீரர்  யுவிந்து கொடிதுவக்கு வைத்த ட்ரை தொலைக்காட்சி மத்தியஸ்தரினால் அங்கீகரிக்கப்பட, இஸிபத்தன 12 - 9 என வெற்றிபெற்று சம்பயினானது.

ஆட்டநாயகன்: செத்தும் ராஜபக்ஷ இஸிபத்தன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட்...

2025-06-16 02:49:49
news-image

ஐ லீக் முதலாம் கட்ட முடிவுகள்:...

2025-06-15 22:47:01
news-image

27 வருட கால கனவை நனவாக்கி...

2025-06-14 21:56:02
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம் இன்று ஆரம்பம்...

2025-06-14 11:49:39
news-image

20 இன் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப்...

2025-06-14 11:48:01
news-image

மார்க்ராமும் பவுமாவும் தென் ஆபிரிக்காவை பெருமையின்...

2025-06-14 10:08:25
news-image

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் -...

2025-06-13 00:04:14
news-image

புனித மரியாள் பழைய மாணவர் கிரிக்கெட்...

2025-06-12 12:15:14
news-image

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பூரன்,...

2025-06-12 01:37:08
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2025-06-12 08:35:05
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழாவில் சந்த்ரா...

2025-06-11 18:30:20
news-image

ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் ஹேடன்,...

2025-06-11 17:50:17