(நா.தனுஜா)
நினைவுகூரல் நடவடிக்கைகள் இழப்புக்கான எதிரீட்டின் ஓரங்கமாகும். எந்த சமூகத்தை அல்லது அரசியல் நம்பிக்கையை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் தமது அன்புக்குரியவர்களை இழந்த துயரைப் பகிர்ந்துகொள்வதற்கும், அவர்களை நினைவுகூருவதற்குமான வாய்ப்பைப் பெறுவதற்கு உரித்துடையவர்களாவர்.
இன, மத வெறுப்பை ஊக்குவிக்காத மற்றும் பகைமை அல்லது வன்முறைக்குத் தூண்டுதலாக அமையாத நினைவுகூரல் நடவடிக்கைகளுக்கு பொலிஸார் மதிப்பளிக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரினால் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளுடன் தொடர்புடைய விவகாரங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து முன்னைய பொலிஸ்மா அதிபருக்கு எம்மால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தினை நினைவுகூருகின்றோம்.
அமைதியான முறையில் நினைவுகூரல் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்த நபர்கள் 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சமவாயச்சட்டத்தின் 3 ஆம் பிரிவின்கீழ் கைதுசெய்யப்பட்ட நிலையில், அச்சட்டத்தின் தவறான பிரயோகம் குறித்து எமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தோம்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெரிவுசெய்யப்பட்ட புதிய அரசாங்கம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் நினைவுகூரல் நிகழ்வுகளில் தலையிடமாட்டோம் என பொது அறிவிப்பொன்றை வெளியிட்டது.
அந்த அறிவிப்புக்குப் பின்னரும் கூட, குறித்த சில நினைவுகூரல் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப்பெற பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
வன்முறை, பகைமை அல்லது ஒடுக்குமுறைகளைத் தூண்டக்கூடிய இன, மத வெறுப்பு சார்ந்த நடவடிக்கைகளைத் தடைசெய்யும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 3 ஆம் பிரிவானது நடைமுறையில் தவறாகப் பயன்படுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது.
இந்தப் பிரிவு முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை அவதானித்ததன் காரணமாக, கடந்த 2019 ஆம் ஆண்டு இச்சட்டத்தின் சரியான பிரயோகம் தொடர்பான வழிகாட்டல்களை நாம் வெளியிட்டோம்.
அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் நினைவுகூரல் நிகழ்வுகள் மற்றும் உணவுப்பொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை பகைமை அல்லது வன்முறைக்குத் தூண்டும் நடவடிக்கைகளாகக் கருதமுடியாது எனவும், இவை நாட்டின் அரசியலமைப்பின் 14 (1)(அ) பிரிவின்கீழ் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு உட்பட்டவையாகும் எனவும் எமது ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 3 ஆம் பிரிவினைப் பிரயோகிப்பது பொருத்தமற்றது என்பதுடன் அதன் பிரயோகம் தனிநபர்களை துன்புறுத்தப்படுவதற்கும், அவர்களது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மீறப்படுவதற்கும் வழிகோலும்.
மேலும் நினைவுகூரல் நடவடிக்கைகள் இழப்புக்கான எதிரீட்டின் ஓரங்கமாகும். ஆகவே பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளை மதித்தல், பாதுகாத்தல் என்பன இலங்கை அரசின் கடமையாகும்.
அதேபோன்று 2017 ஆம் ஆண்டு எமது ஆணைக்குழுவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளின் பிரகாரம் எந்த சமூகத்தை அல்லது அரசியல் நம்பிக்கையை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் தமது அன்புக்குரியவர்களை இழந்த துயரைப் பகிர்ந்துகொள்வதற்கும், அவர்களை நினைவுகூருவதற்குமான வாய்ப்பைப் பெறுவதற்கு உரித்துடையவர்களாவர்.
அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் நினைவுகூரல் நிகழ்வுகள் தமிழர்கள் மத்தியில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படவேண்டிய இழப்பீட்டுக்கான எதிரீட்டின் ஓரங்கமாக சட்டத்தின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதனால், இதுகுறித்து பொலிஸின் அனைத்துப் பிரிவுகளுக்கும் மும்மொழிகளிலும் தெளிவான வழிகாட்டல்களை வழங்குங்கள்.
அத்தோடு இன, மத வெறுப்பை ஊக்குவிக்காத மற்றும் பகைமை அல்லது வன்முறைக்குத் தூண்டுதலாக அமையாத நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும் என சகல பொலிஸாருக்கும் அறிவுறுத்தவேண்டும்.
அத்தோடு இவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிர்வாகப்பிரிவுகளில் உள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் நினைவுகூரல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுவதைத் தவிர்க்கவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM