முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறுகின்றது. 16 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் பிரதேசம் இந்தக் காலப் பகுதியில் இரத்தத்தினால் தோய்ந்திருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
இறுதி யுத்தத்தின் போது பேரிழப்புகளை தமிழ் மக்கள் சந்தித்திருந்தனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருந்தனர். தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது பலமுனைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதனால் ஏற்பட்ட இழப்புகள் விபரிக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த இறுதி யுத்தத்தின் போது 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். 9 ஆயிரம் சிறுவர்கள் அநாதரவாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டனர். படையினரிடம் சரணடைந்தவர்கள், படையினரால் கைது செய்யப்பட்டவர்கள், படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் என்று காணாமல்போனோரது சோக வரலாறுகள் இன்றும் தொடர்ந்து வருகிறது.
இவ்வாறு முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட இழப்புகளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடந்தோறும் மே மாதம் 18ஆம் திகதி நடத்தப்பட்டு வருகின்றது. மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் வாரம் நினைவு கூரப்படுகின்றது.
16 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இம்முறையும் முள்ளிவாய்க்கால் வாரம் கடந்த 6 தினங்களாக அனுஷ்டிக்கப்பட்டது. இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலும் வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் மக்கள்பட்ட அவலத்தை வெளிக்காட்டும் வகையில் கடந்த ஒரு வார காலமாக வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டு வந்தது.
முள்ளிவாய்க்காலில் பேரழிவுகளை சந்தித்த தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி போராடி வருகின்றனர். ஆனால், 16 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அதற்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் உறுதி வழங்கிய போதும் உள்ளக விசாரணையில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை இழந்த மக்கள் சர்வதேச விசாரணைகளை கோரும் நிலைமை ஏற்பட்டிருந்தது.
2012ஆம் ஆண்டு முதல் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் அவற்றை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் உரிய வகையில் நிறைவேற்றவில்லை.
இதனால் நம்பிக்கை இழந்த தமிழ் மக்கள் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் நிலைமை உருவாகியிருக்கின்றது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டிலேயே ஈடுபட்டு வந்தது.
யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளைக் கூட முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்துவதற்கு அன்றைய அரசாங்கம் அனுமதிக்க வில்லை.
இவ்வாறான நிலையில் பேரிழப்புகளை சந்தித்த மக்கள் தமது உறவுகளை நினைவுகூர முடியாத அவலத்தை அந்தக் காலப்பகுதியில் சந்தித்திருந்தனர்.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை மேற்கொள்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதற்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. ஆனாலும் முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இன்னமும் நீதியை பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலை நீடித்து வருகின்றது. இதனால்தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இனப்படுகொலையாக பிரகடனப்படுத்த வேண்டிய நிலைமை புலம்பெயர்ந்த தேசங்களில் ஏற்பட்டுள்ளது.
தற்போது கனடாவில் இனப்படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. கனடாவின் ஒன்றாரியோ மாகாண பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 104ஆம் இலக்க தமிழின படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டத்தின் பிரகாரம் கடந்த 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான ஒரு வார காலம் தமிழின படுகொலை அறிவூட்டல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான தீர்மானம் கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதேபோன்றே கனடாவில் பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவகம் கடந்த 10ஆம் திகதி அந்த நகரின் மேயர் பற்றிக் பிரவுனினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற அவலங்களை பறைசாற்றும் வகையில் கனடாவில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக் ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகவும் பயணத் தடையை கனடா விதித்திருந்தது.
கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை அழைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இந்த விடயம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
எவ்வித ஆதாரமுமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டு மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்ட ஒப்புதல் என்பன தொடர்பில் இலங்கை கடும் அதிருப்தி கொண்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை அல்ல என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகளை அழித்தோம் என்றே கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தெரிவித்திருந்தது.
ஆனால், தற்போது பதவியேற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று கூறியே ஆட்சிக்கு வந்திருந்தது.
அந்த அரசாங்கமும் இறுதி யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய வகையில் பொறுப்புக்கூறத் தயாராக இல்லை. ஐ.நா. மனித உரிமை பேரவையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னைய அரசாங்கங்களின் கொள்கையையே தற்போதைய அரசாங்கமும் கடைப்பிடித்து வருகின்றது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2022ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சாட்சிகளை திரட்டும் ஐ.நா.வின் பொறிமுறைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தற்போதும் இனப்படுகொலை விவகாரத்தில் கனடாவுடன் அரசாங்கம் முட்டி மோதுகின்றது.
உண்மையிலேயே முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு உரிய விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க அரசாங்கம் முன் வருமாக இருந்தால் இந்த விடயத்தில் சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படப் போவதில்லை.
அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் உரிய அக்கறையை காண்பிக்காது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு முன் வராது தமிழ் மக்களுக்கு சார்பான கனடா உட்பட சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதும் அதிருப்தி வெளியிடுவதும் எந்த வகையிலும் பயனளிக்கப்போவதில்லை.
சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை இல்லாது ஒழிக்க வேண்டுமானால் அரசாங்கமானது முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது உரிய வகையில் நீதியை வழங்க முன்வர வேண்டும். இல்லையேல் இனப்படுகொலை விவகாரமானது சர்வதேச அளவில் பேசப்படும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM