கண்டாவளை  வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் இரு கனரக வாகனங்கள் நேருக்குநேர் மோதுண்டதில் இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் நேற்று இரவு பதினொன்று முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துத் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் முல்லைத்தீவிலிருந்து  பரந்தன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த  லொறி ரக வாகனமும் வெளிக்கண்டல் பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதுண்டதனாலேயே  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிசார்  தெரிவித்தனர்.

டிப்பர் வாகனத்தின் சாரதியின் உதவியாளரும் லொறி ரக வாகனத்தின் சாரதியுமே விபத்தின்போது காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் குறித்த வாகனங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்துள்ளமையால் வீதியில் இருந்து அகற்றப் படாமையால் இன்று அதிகாலை இரண்டு மணிவரை ஏ-32  முல்லை வீதியின் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.