இந்த நாட்டில் வாழும் தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளான நிலையில் தொடர்ச்சியாக வாழ்ந்துவருவதாக கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காவது நாளான நேற்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் நடைபெற்றது.
கல்லடி, உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக உள்ள பிள்ளையார் ஆலயம் முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ லோகநாதன் குருக்கள் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வில் கல்குடா சைவக்குருக்கள் ஒன்றியம் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது இறுதி யுத்தத்தின்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இறுதி யுத்த காலப்பகுதியில் மக்கள் உணவாக கொண்ட உப்பில்லா கஞ்சி பகிரும் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் குருமார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தலைவர்,
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது எம் இனம் சிறுவர்கள் பெரியோர் வேறுபாடு இன்றி மிகவும் கொடூரமான இனப்படுகொலையை முன்னைய அரசாங்கம் கடைப்பிடித்து இருந்தது. அந்த இனப்படுகொலையிலேயே எமது மக்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு உட்பட்டு இருந்தார்கள். உண்பதற்கு உணவு இன்றி யாருடைய தயவும் இன்றி ஒருவேளை உணவிற்கு கஷ்டத்தின் மத்தியில் இந்த கஞ்சியை அருந்தி அனைவரும் அல்லல்ப்பட்டிருந்தார்கள.
இதனை வருடம் தோறும் நாங்கள் எதிர்கால சந்ததி இதனை மறந்து விடக்கூடாது என்பது மட்டுமல்லாது உணர்வுபூர்வமாக மிகவும் கொடூரமாக நடைபெற்ற இனப்படுகொலையை கண்டிப்பதோடு மட்டுமல்லாது அந்த படுகொலையில் உயிர் நீர்த்த எம் உறவுகளை நினைவு கூர்ந்து வருடம் தோறும் எமது கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தினர் தொடர்ந்து இந்த ஆத்ம சாந்தி பிரார்த்தனையையும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிகழ்வானது எதிர்கால எமது உறவுகள் எம்மை விட்டு உயிர் பிரிந்த எம் உறவுகளை நினைவு கூர வேண்டும். எவ்வளவு துன்பங்களை அவர்கள் அனுபவித்தார்கள் என்பதனை நாங்கள் இலகுவில் மறந்து விட முடியாது. அதனை வருகின்ற சந்ததிக்கும் நாங்கள் கடத்த வேண்டிய ஒரு கட்டாயம் அனைவருக்கும் இருக்கின்றது.
இந்த நாட்டில் நாங்கள் தமிழர்கள் மிகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாகி கொண்டே தான் தற்போதும் இருக்கின்றோம். நேற்றைய தினம் சிவில் சமூக செயல்பாட்டாளர் செல்வகுமார் என்பவரை ராணுவ புலனாய்வாளர்கள் என்று சந்தேகப்படுகின்றவர்களால் மிகவும் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது வைத்தியசாலையிலே சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேபோன்று உறவுகளை நாங்கள் நினைவு கூறுவதற்கும் அவர்களுடைய ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதற்கும் எங்களுக்கு எது வித உரிமையும் இல்லையா?. அப்படியானால் நாங்கள் இந்த மண்ணில் சுதந்திரமாக எங்களுடைய உரிமைகளை பெற்று நாங்கள் வாழ முடியாதவர்களாக இன்று பரிதவித்துக் கொண்டு இருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும் நமது சமூகம் எமது மக்கள் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் எங்களுடைய கலை பண்பாடு கலாச்சாரங்களை பேணிப் பாதுகாத்து அவர்கள் எதிர்காலத்திலே சுதந்திரமாக வாழ்வதற்கு எல்லோரும் வழி சமைக்க வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.
இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியத்தின் செயலாளர் சிவஸ்ரீ குகநாதன் குருக்கள்,
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்கின்ற சொல்லுக்கு அமைவாக இங்கு இந்த நாட்டில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கின்றார்களை தவிர எங்களுடைய இனம் பட்ட அவலங்களுக்கான சர்வதேச நீதியோ அதற்கான விசாரணையோ அதற்கான தண்டனையோ இதுவரையில் யாருக்கும் வழங்கியதாக தெரியவில்லை.
நாங்கள் கைவிடப்பட்ட ஒரு இனமாக தற்போது நிற்கதியாக இருக்கின்றோம். எங்களை சர்வதேசமும் திரும்பி பார்ப்பதில்லை இந்திய வல்லாதிக்க அரசும் எங்களை திரும்பிப் பார்ப்பதில்லை. நாங்கள் என்ன செய்வது எங்கே போவது யாரிடம் நீதியை கேட்பது என்ற நிலையிலே 16 வருடங்களை கடந்திருக்கின்றோம்.
இன்னும் இந்த நிலை அவ்வாறே தான் காணப்படுகின்றது. இந்த வாரமானது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரமாக எங்களுடைய வடகிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு எங்களுடைய மக்களுக்கு எமது எதிர்கால சந்ததியினருக்கு இந்த நிகழ்வினை ஏன் நடந்தது எதற்காக நடந்தது அங்கே எவ்வாறு நமது மக்கள் துன்பப்பட்டார்கள் என்பதனை அவர்களுக்கு அறியப்படுத்துமுகமாக ஒவ்வொரு வருடமும் இந்த நாட்களிலே இந்த கஞ்சியினை வழங்கி எங்களுடைய எதிர்கால சந்ததிக்கு இந்த நிகழ்வை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றோம்.
இந்த இடத்திலேயே எங்களுடைய வடகிழக்கு வாழ் பெற்றோர்களுக்கு ஒரு வினயமான கோரிக்கையினை விட்டு செல்கின்றோம். எதிர்கால உங்களுடைய குழந்தை செல்வங்களுக்கு எங்களுடைய இனம் பட்ட வேதனையை நீங்கள் கட்டாயமாக எடுத்துச் சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் உங்களுக்கு தெரியும் யூத இனம் என்கின்ற ஒரு இனம் உலகம் பூராகவும் பரந்து வாழ்ந்து எங்களுக்கு நாடு இல்லையே என்கின்ற நிலையை தக்க வைத்துக் கொண்டு வருகின்ற அனைத்து சங்கதிக்கும் அதை கடத்திக் கடத்திச் சென்று இன்று இஸ்ரேல் என்கின்ற நாட்டை உருவாக்கி இருக்கின்றது. அது போதாமல் இருப்பதினால் பாலஸ்தீனத்தையும் நாங்கள் கைப்பற்ற வேண்டும் என்கின்ற சூழ்நிலையில் உலக நாடுகளோடு யுத்தம் செய்து கொண்டிருக்கின்றது.
ஆனால் நாங்கள் இந்த உலக நாட்டிலே ஒரு நாடற்ற அகதிகளாக நிற்கதியாக எங்களுடைய மக்கள் இன்று வரை புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே இதற்கான ஒரு விடிவினை எமது மக்களும் நமது தெய்வங்களும் எங்களுக்கு அதனை பெற்று தர வேண்டும். நாங்கள் ஆட்சியாளர்களை நம்பவில்லை எங்களுடைய சர்வதேச விசாரணை ஊடாக எங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதனை இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM