குழந்தை கடத்தல்காரி என்ற வதந்தியால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று  மேற்கு வங்கப் பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

மேற்கு வங்கத்தில் மூர்ஷிதாபாத்  பகுதியைச்  சேர்ந்த ஓடேரா பிபி என்ற 42 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட  பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் வழிதவறி பக்கத்து கிராமத்துக்கு சென்றுள்ளார், அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த ஒருபெண்ணொருவர்  மனநிலை பாதிக்கப்பட்ட ஓடேரா பிபி என்ற பெண்ணை பார்த்து குழந்தை கடத்தல்காரி, நமது கிராமத்தில் உள்ள குழந்தைகளை கடத்துவதற்கு வந்துள்ளார் என கூச்சலிட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கூச்சலைக் கேட்ட  கிராம மக்கள் மனநிலை பாதிக்கப்பட்ட  பெண்ணை பிடித்து வாகனமொன்றில் ஏற்றி கட்டிவைத்து அடித்துள்ளனர்.

தகவலறிந்த பொலிஸார்  சம்பவ இடத்துக்கு சென்று மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றி வைத்தியசாலையில்  அனுமதித்துள்ளனர், ஆனால் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

அந்தப் பெண்ணை அடித்தவர்கள் மீதும், அவரை பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.