இழுவைக் படகுகளை இலங்கை கடற்பகுதியில் கட்டுப்படுத்தும் சட்டமூலத்தில் உள்ளூர் இழுவை படகு தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் - குருநகர் பகுதி இழுவைப் படகு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்பகுதியில் இழுவை படகுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலம் எதிர்வரும் 6 ஆம் திகதி பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் நிலையிலேயே உள்ளூர் இழுவை படகு தொழிலாளர்கள் மேற்படி கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றனர். 

இது தொடர்பாக இன்று குருநகரில் ஊடகவியலாளர்களை சந்தித்த உள்ளூர் இழுவை படகு தொழிலாளர்கள் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை கடற்பகுதியில் இழுவை படகுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தில் உள்ளூர் இழுவை படகு தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான விதிகள் இணைக்கப்படவேண்டும். 

அவ்வாறு இணைக்கப்படா விட்டால் இழுவைப் படகு தொழிலை அடிப்படை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மே ற்பட்ட குடும்பங்கள் முதல் நிலையிலும், சுமார் 3000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 2 ஆம் நிலையிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதனால் வடமாகாணத்தில் சுமார் 5000 வரையிலான மீனவ குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ள நேரிடும். எனவே இழுவைக் படகுகளை இலங்கை கடற்பகுதியில் கட்டுப்படுத்தும் சட்டமூலத்தில் உள்ளூர் இழுவை படகு தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்பட வேண்டும் என மேற்படி சட்டமூலத்தை கொண்டுவந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்டு கொள்கிறோம்.

 1976 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தில் இழுவை படகு மூலமான கடற்றொழிலை நாங்கள் செய்து வருகின்றோம். 1976 ஆம் ஆண்டு தொடக்கம் 1983 ஆம் ஆண்டு வரையில் யாழ்ப்பாணம் குருநகரில் மட்டும் சுமார் 300 ற்கும் மேற் பட்ட இழுவை படகுகள் இருந்தன. அந்த காலப்பகுதியில் இந்த இழுவைப் படகு தொழிலை செய்வதற்கு அப்போதைய கடற்றொழில் அமைச்சும் அனுமதி வழங்கியிருந்தது. 

பின்னர் 1983 ஆம் ஆண்டு போர் காரணமாக எம்மிடமிருந்த 300 ற்கும் மேற்பட்ட படகுகளும் அழிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தொழில் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் போர் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து மீண்டும் இழுவை படகு தொழிலை செய்ய கூடியதாக இருந்தது. அதன் பின்னர் தற்போது குருநகரில் மட்டும் 325 இழுவை படகுகள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக வடமாகாணத்தில் 600 ற்கும் மேற்பட்ட இழுவை படகுகள் இருப்பதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் குருநகரில் மட்டும் இழுவை படகு தொழிலை நம்பி சுமார் 1000 குடும்பங்கள் நேரடியாக தங்கள் வாழ்வாதாரத்தை பெறுகின்றன. இதேபோல் பகுதியளவில் அல்லது 2 ஆம் நிலையில் சுமார் 2000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. எனவே மேற்படி இலங்கை கடற்பகுதியில் இழுவை படகுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலம் இப்போது இருக்கும் நிலையிலேயே நடைமுறைக்கு வந்தால் யாழ்பபாணம் - குருநகரில் மட்டும் சுமார் 3000 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பட்டினிச் சாவை எதிர்கொள்ளும். 

எனவே மக்களுக்கு பதில் சொல்லவேண்டும். இதேபோ ல் இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கடல்வளம்சார் ஆய்வு நிலையமான நாறா நிறுவனம் இழுவை படகு தொழில் ஊடாக பவள பாறைகளும், கடல் தாவரங்களும் அழிக்கப்படுவதாக கூறியிருக்கின்றது. 

ஆனால் எமது தொழிலை பொறுத்தமட்டில் நாம் இறால் பிடிப்பதை அடிப்படையாக கொண்டே இழுவை படகு தொழிலை செய்கின்றோம். இறால் பெரும்பாலும் பவள பாறைகள் நிறைந்த இடத்திலோ, கடல் தாவரங் கள் நிறைந்த இடத்திலோ இருப்பதில்லை. அது அதிகம் சேற்று பகுதியிலேயே இருக்கின்றது. எனவே தவறான புரிதல்கள் மக்கள் மத்தியில் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. எனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்படி சட்டமூலம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் கூட்டத்தில் குறித்த சட்டமூலத்தை கொண்டுவரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதைபோன்று சில சேற்று பாங்கான இடங்கள் இனங்காணப்பட்டு அந்த பகுதிகளில் தொழில் செய்ய எமக்கு அனுமதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். மேலும் நாம் வாரத் தில் 7 நாட்களும் தொழில் செய்வதில்லை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே தொழில் செய்கின்றோம் எனவே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உத்தரவாதத்தை நம்பிய எமக்கு உறுதியான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.