பாத்திரங்கள் கழுவ போகின்றீர்களா? இவற்றை கடைபிடிக்கத் தவற வேண்டாம்…!

16 May, 2025 | 01:07 PM
image

சமைக்கும்போதே முடிந்தவரை பாத்திரங்களைத் துலக்கி வைத்து விடுங்கள். உதாரணமாக, புளி கரைத்த கிண்ணத்தை அப்படியே சிங்கில் போடாமல் ரசம் கொதிக்கும்போதே கழுவி வைத்துவிடுங்கள். சமைத்து முடித்து வெளியே வரும்போது, சிங்கில் எந்தப் பாத்திரமும் இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது பெரிய அளவில் பயனளிக்கும்.

பாத்திரங்களைக் கழுவும்போது குளிர்ந்த நீருக்குப் பதிலாக வெந்நீரைப் பயன்படுத்துகிறீர்களா? ஆம் எனில், அதனை உடனடியாக நிறுத்த வேண்டும். எண்ணைப் பசையை நீக்க, சூடான நீர் பயனுள்ளதாக இருந்தாலும், அது உங்கள் கைகளுக்கு சிறந்தது அல்ல. இது அவற்றை எளிதில் வறண்டு போக வைக்கும் மற்றும் தீக்காயங்களை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள். 

பாத்திரங்களை கழுவும் போது நாம் செய்யும் மற்றொரு பொதுவான தவறு, அதிகமாக சவர்க்காரம் பயன்படுத்துவது. மீதமுள்ள உணவு எச்சங்களை சுத்தம் செய்ய சவர்க்காரம் தேவைதான். இருப்பினும், அதை அதிகமாகப் பயன்படுத்துவது உங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்வதை மேலும் கடினமாக்கும். பாத்திரங்களைக் கழுவும் திரவத்தின் சில துளிகள் செயல்முறையை மிகவும் எளிதாக்குகின்றன. மேலும், சிறந்த முடிவுகளுக்கு நீங்கள் நல்ல தரமான சவர்க்காரத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.

தூய்மையற்ற ‘ஸ்பொன்சை’ மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது தவறாகும். இதை தூக்கியெறிய வேண்டும் என்று தெரிந்தாலும் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில் இது பாத்திரம் கழுவுவதை கடினமாக்குகிறது. சமையலறை ‘ஸ்பொன்சு’கள் பாத்திரங்களில் இருந்து உணவுத் துகள்களை உறிஞ்சி துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். பாத்திரங்களை சுத்தம் செய்ய அவற்றைப் பயன்படுத்துவதால் பாத்திரத்தில் பக்டீரியா மற்றும் துர்நாற்றம் பரவுகிறது. எனவே, எப்போதும் சுத்தமான ஒன்றை பயன்படுத்தவும்.

பாத்திரங்களைக் கழுவுவதற்கு முன் சமையலறை தொட்டியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமில்லாத சின்க் என்பது பக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகும். இது பாத்திரங்களுக்கு எளிதில் பரவும். சமையலறைத் தொட்டி எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ, அவ்வளவு குறைவான பக்டீரியாக்கள் மற்றும் குப்பைகள் அதில் இருக்கும். அதை தொடர்ந்து சுத்தம் செய்ய சில கூடுதல் முயற்சி எடுக்கலாம்.

பாத்திரங்களை உலர போதுமான நேரத்தை அனுமதிப்பது அவற்றை சுத்தம் செய்வது போலவே முக்கியமானது. பாத்திரங்களை நன்றாகக் கழுவிய பின், அவற்றை தண்ணீர் ஒழுக அல்லது உலர வைக்கவேண்டும். அவற்றை மீண்டும் இருந்த இடத்தில் அடுக்குவதற்கு முன், அவை முழுமையாக உலர்ந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவை இன்னும் ஈரமாக இருந்தால், அவை எளிதில் அச்சு மற்றும் பக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும், துர்நாற்றத்தையும் உருவாக்கலாம்.

பால் காய்ச்சிய பாத்திரம் போன்றவற்றை சிறிது தண்ணீர் ஊற்றிவைத்தால், துலக்கும்போது அதிகம் தேய்க்க வேண்டியதில்லை.

முடிந்தால் தேநீர் பைகள் பயன்படுத்துங்கள். தேநீர் கொதிக்க வைத்த பாத்திரம் துலக்குவதுதான் கடினம். அதேபோல கோப்பி, தேநீர் அருந்தியவுடன் தம்ளர்களை உடனடியாக கழுவிவைப்பது சாலச் சிறந்தது.

சாப்பிட்டு கை கழுவும்போதே தட்டையும் கழுவிவிடுங்கள். இந்த உத்தி சிறப்பான பலனளிக்கும் ஒன்றாகும்.

பாத்திரம் துலக்கும்போது, பெரிய பாத்திரத்தில் இருந்து தொடங்குங்கள். விரைவில் சிங்க் காலியவதால் பெரிய சுமையாகத் தெரியாது.

கண்ணாடி, பீங்கான் பொருட்களை உபயோகியுங்கள்.

விளிம்புகள் தட்டையாக உள்ள பாத்திரங்கள், தம்ளர்கள் பயன்படுத்துங்கள். விளிம்புகள் மடித்து இருப்பதைவிட இவை துலக்குதல் எளிது.

இன்று பெரும்பாலான வீடுகளில் குக்கரைத் தவிர்த்து பாத்திரங்களில் சாதம் சமைக்கத் தொடங்கியுள்ளனர். இது நல்ல விடயம். ஆனால், பாத்திரத்தை சிங்கில் போடும்போது சாதம் சமைத்த பாத்திரத்தில் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அதைக் கழுவுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். இல்லையென்றால் காய்ந்த சோற்று பருக்கைகள் விரல்களில்பட்டு கிழிப்பதற்குக்கூட அதிக வாய்ப்புண்டு.

சாப்பிட்டு முடித்ததும் வீணாகும் காய்கறி, தோல்கள் ஆகியவற்றைச் சிங்கில் போடுவதற்கு முன்பு குப்பைத் தொட்டியில் போடவேண்டும். இல்லையென்றால் இந்த வீணானப் பொருட்கள் சிங்கிள் இருந்து கழிவுநீர் வெளியேறுவதற்குத் தடையாக இருக்கும்.

அசைவ உணவுகள் சமைக்கும் பாத்திரங்களை ஒன்றுக்கு இரண்டு முறை கழுவுவது நல்லது. அப்போதுதான் அசைவ வாடை அந்தப் பாத்திரத்திலிருந்து போகும்.

90 சதவீத வீடுகளில் அடுப்படியில்தான் சிங்க் அமைக்கப்பட்டிருக்கும். அதனால் அதை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது அனைவருக்கும் நல்லது. சிறிது சுத்தம் இல்லை என்றாலும் அதிலிருந்து வரும் நாற்றம், சமையல் தரத்தையே குறைத்துவிடும்.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால்கூட சமையலறைக்குள் வந்து அவர்கள் முதலில் பார்க்க விரும்புவது சிங்க் ஆகத்தான் இருக்கும். அதனால் அதை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right