குழந்தைப் பிரசவ சிகிச்சைகளை “சிசேரியன்” மூலம் மேற்கொண்ட போது, சிகிச்சை பயனின்றி தாயும் சிசுவும் மரணமான சம்பவமொன்று மகியங்கனை அரசினர் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.

மகியங்கனைப் பகுதியின் சொரபொர என்ற இடத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ரோகினி அத்தநாயக்க என்ற தாயும் அவரிடமிருந்து “சிசேரியன்” மூலம் பிரசவிக்க முயன்ற ஆண் சிசுவுமே இவ்வாறு மரணமாகியுள்ளனர்.

குறித்த மரணங்கள் மருத்துவமனை டாக்டர்களின் தவறான செயற்பாடுகளினாலேயே ஏற்பட்டதென்றும் குறித்த டாக்டர்களுக்கு எதிராக, சடலத்தின் உரிமையாளர்களால் நேற்று மருத்துவமனைக்கு முன்னால் மறியல் போராட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மகியங்கனை அரசினர் மருத்துவமனை பணிப்பாளர் டாக்டர் ஏ.எம். செனரத் பண்டாரவிடம் வினவிய போது,

“தாயையும் குழந்தையையும் காப்பாற்ற பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டோம். ஆனால் எம் முயற்சி தோல்வியடைந்துள்ளது. 

உயிரைக் காப்பாற்றுவதே எமது நோக்கமேயன்றி, காப்பாற்றாமல் விடுவது எமது நோக்கமல்ல. மருத்துவமனைக்கு முன்னால் போராட்டம் நடத்தியவர்களின் கூற்றை முற்று முழுதாக நிராகரிக்கின்றோம்” என்று தெரிவித்தார்.