ஜூன் மாத இறுதியில் வெளியாகும் விஜய் அண்டனியின் ‘மார்கன்’

15 May, 2025 | 06:59 PM
image

இசையமைப்பாளராக வாய்ப்பு பெற்று, பிரபலமான இசையமைப்பாளர் விஜய் அண்டனி- அதன் பிறகு தனக்கான திரையுலக பயணத்தை அவரே வடிவமைத்து பயணித்துக் கொண்டிருக்கிறார்.

கதை- திரைக்கதை- வசனம்- இயக்கம்- தயாரிப்பு - நடிப்பு- படத்தொகுப்பு -  இசை - பாடகர் - பாடலாசிரியர் - என டிஜிற்றல் யுக தசாவதானியாக - தன்னிடமுள்ள திறமைகளை பட்டியலிட்டு, அதனை வெளிப்படுத்தி, திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர் என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் இவரது தயாரிப்பில் உருவாகி இருக்கும் பனிரெண்டாவது திரைப்படமான 'மார்கன்' படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

படத் தொகுப்பாளராக பணியாற்றி, இயக்குநராக அறிமுகமாகும் லியோ ஜோன் பால் இயக்கத்தில் உருவாகியுள்ள ' மார்கன் ' திரைப்படத்தில் விஜய் அண்டனி , சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிடா, தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி, ' அந்தகாரம்' நடராஜன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இவர்களுடன் விஜய் அண்டனியின் உறவினரான அஜய் திஷான் வில்லனாக அறிமுகமாகிறார்.  எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை மீரா விஜய் அண்டனி வழங்குகிறார்.  

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடல் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன் படத்தைப் பற்றிய ஆர்வத்தையும் அதிகரித்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே விஜய் அண்டனியை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து படத்தை தயாரித்து, நிறைவு செய்த தயாரிப்பாளர்கள் விஜய் அண்டனிக்கான தமிழ் - தெலுங்கு திரையுலகின்  சந்தை மதிப்பு குறைந்ததால்.. அப்படங்களை திரையிட முன்வரவில்லை. இந்நிலையில் தன்னுடைய சந்தை மதிப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக விஜய் அண்டனி தொடர்ந்து படங்களை தயாரித்து, வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் தயாரிப்பில் உருவான 'மார்கன்' திரைப்படம் ஜூனில் வெளியாகிறது. இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியைப் பெற்றால் தான்..‌அவர் நடிப்பில் உருவான ஏனைய திரைப்படங்கள் வெளியாகும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்