லெவன் - திரைப்பட விமர்சனம்

15 May, 2025 | 07:00 PM
image

தயாரிப்பு : ஏ. ஆர். என்டர்டெய்ன்மென்ட்

நடிகர்கள்‌: நவீன் சந்திரா, ரியா ஹரி அபிராமி, திலீபன், ரித்விகா 'ஆடுகளம்' நரேன் மற்றும் பலர்

இயக்கம் : லோகேஷ் அஜில்ஸ்

மதிப்பீடு: 2.5 / 5

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் நவீன் சந்திரா கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'லெவன்'. தமிழ் சினிமாவின் சமீபத்திய ட்ரெண்டான திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம்-  அனைத்து தரப்பு இரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.‌

தமிழக மாநகரத்தில் தொடர்ந்து மர்மமான முறையில் கொலை சம்பவம் நடைபெறுகிறது. தொடர் கொலைகளின் பின்னணி என்ன? குற்றவாளி யார்? என்பது குறித்து காவல்துறை விசாரணையை தொடங்குகிறது.

இதனிடையே வங்கி ஒன்றில் ஒரு கும்பல் கொள்ளை அடித்து விட்டு தப்பிக்கிறது. இதனை அரவிந்தன் (நவீன் சந்திரா) தலைமையிலான காவல்துறை - கொள்ளையர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடலில் ஈடுபடுகிறது. விசாரணையில் இதுவரை நடைபெற்ற எட்டு கொலைகளும் ஒரே பாணியில் நடைபெற்றிருப்பதை கண்டறிகிறார்கள். இது தொடர்பான மேல் விசாரணையில் கொலை செய்யப்பட்டிருப்பவர்கள் இரட்டையர்கள் என தெரிய வருகிறது.

தொடர் விசாரணையில் டுவின் பேர்ட்ஸ் எனும் தனியார் பாடசாலையில் கடந்த சில தசாப்தங்களுக்கு முன் கல்வி பயின்ற இரட்டையர்கள் மீது சந்தேகம் ஏற்படுகிறது. இரட்டையர்கள் கொல்லப்படுவது ஏன்? குறிப்பிட்ட தனியார் பாடசாலையில் கல்வி பயின்ற இரட்டையர்களை குறி வைத்து கொல்வது யார்? என உண்மையை விறுவிறுப்பாக விவரிப்பது தான் இப்படத்தின் திரைக்கதை.

படத்தின் முதல் காட்சியிலேயே விறுவிறுப்பு தொடங்கி விடுகிறது. பார்வையாளர்களின் யூகங்களுக்கு மாறாக காட்சிகள் நகர்வதாலும்... அதற்கு ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை இரசிக்கும் வகையில் இருப்பதாலும் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் படைப்பை உற்று நோக்க தொடங்குகிறார்கள்.

கொலைக்கான காரணத்தை இயக்குநர் உணர்வு பூர்வமாக விவரித்திருப்பது... ஒரு தரப்பினருக்கு பிடிக்கச் செய்கிறது. இரண்டாம் பாதியில் அதிலும் உச்சகட்ட காட்சிகளில் இயக்குநர் வைத்திருக்கும் எதிர்பாராத திருப்பம் .. இரசிக்கத்தக்கதாகவே இருக்கிறது.  

பெஞ்சமின் - பிரான்சிஸ் என்ற  இரட்டையர்களில் ஒருவருக்கு நிக்டோபோபியா என்ற உளவியல் சிக்கல் இருப்பதாக கதைத்திருப்பது இயல்பான எதிர்பார்த்த ஒன்று என்றாலும், அது தொடர்பான திரை மொழி - காட்சி மொழி-  நாடகத்தனம் இல்லாமல் இரசிக்கத்தக்கதாகவே இருக்கிறது.

திட்டமிட்டு உளவியல் ரீதியாக துன்புறுத்தி, ஒருவனை மரணம் அடையச் செய்வது ஏற்கத்தக்கதல்ல. இதனால் அவரை சார்ந்து இருக்கும் நபருக்கு ஏற்படும் தனிமை கொடுமையானது. இவர்களிடத்தில் சமூகம் கற்பிக்கும் மனித நேயம்-  விட்டுக் கொடுக்கும் தன்மை - மன்னிப்பு-  ஆகியவை பலன் அளிக்காது என்பதை உரத்துப் பேசி இருக்கிறது.

அரவிந்தன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நவீன் சந்திரா - கதாபாத்திரத்தின் அடுக்குகளை உணர்ந்து நேர்த்தியாக நடித்து இரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கிறார்.  அரவிந்தனை விரட்டி விரட்டி காதலிக்கும்  கேரக்டரில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் ரியா ஹரி தன்னால் முடிந்த அளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார். அபிராமி- திலீபன்- ரித்விகா- 'ஆடுகளம்' நரேன் - ஆகியோர் இயக்குநரின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு, கலை இயக்கம் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இயக்குநரின் கற்பனைக்கு தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கி பாராட்டைப் பெறுகிறார்கள்.

லெவன் - இரட்டை கோபுரம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்