(நெவில் அன்தனி)
ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் (17 மற்றும் 18 வயது) குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பின் மூன்றாவது நாளான புதன்கிழமை (14) நடைபெற்ற பெண்களுக்கான அரை இறுதிக் குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் வவுனியாவைச் சேர்ந்த லோகநாதன் கஜிந்தினி இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தவறினார்.
அதேவேளை இலங்கை வீரர் யஸ்மின் மொஹமத் யூசெய்த் கால் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டி அரை இறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.
23 நாடுகள் பங்குபற்றும் ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் (17 மற்றும் 18 வயது) குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவருகிறது.
நேற்று பிற்பகல் நடைபெற்ற 22 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் குத்துச்சண்டை கோதாவில் இறங்கிய கஜிந்தினி துரதிர்ஷ்டவசமாக தோல்வி அடைந்தார்.
தனது முதலாவது சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்றிய கஜிந்தினி, சர்வதேச குத்துச்சண்டை சங்க கொடியின்கீழ் நடுநிலையாளராக பங்குபற்றிய இந்தியாவின் நான்சி நான்சியிடம் தோல்வியைத் தழுவினார்.
முதலாவது சுற்றின் ஆரம்பத்தில் நான்சியை கடுமையாக தாக்கிய கஜிந்தினி போட்டியில் மிக இலகுவாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த சுற்றில் ஒன்றரை நிமிடங்கள் மீதமிருந்தபோது நான்சி கடும் தாக்குதலைத் தொடுக்க கஜிந்தினியினால் பதிலடி கொடுக்க முடியாமல் போனது.
இரண்டாவது சுற்றில் கஜிந்தினியிடம் போதிய வேகமும் விகேமும் இல்லாததைப் பயன்படுத்தி சரமாரியான தாக்குதல்களில் ஈடுபட்ட நான்சி வெற்றிப் புள்ளிகளை ஈட்டிக்கொண்டார்.
மூன்றாவது சுற்றில் நான்சியின் கடும் தாக்குதலில் கஜிந்தினி நிலைகுலைந்துபோனதால் போட்டியில் ஒரு நிமிடம் எஞ்சியிருந்தபோது போட்டியை மத்தியஸ்தர் முடிவுக்கு கொண்டுவந்தார்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த போதிலும் கஜிந்தினிக்கு வெண்கலப் பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
22 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 75 கிலோ கிராம் எடைப் பிரவு கால் இறுதிப் போட்டியில் சவூதி அரேபியாவின் அல்மவலாத் நயிப் என்ற வீரரை சந்தித்த இலங்கை வீரர் யஸ்மின் மொஹமத் யூசெய்த் மிக அற்புதமாக தாக்குதல்களைத் தொடுத்து வெற்றியீட்டி அரை இறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.
மூன்று சுற்றுகளிலும் மிகவும் வேகமாகவும் சிறந்த நுட்பத்திறனுடனும் அல்மவலாத் நயிபை தாக்கிய யூசெய்த் இறுதியில் மத்தியஸ்தர்களின் ஏகமனதான தீர்ப்புக்கு அமைய 5 - 0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றார்.
இந்த வெற்றி மூலம் அரை இறுதிக்கு முன்னேறிய யூசெய்த், இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பபதை உறுதிசெய்தார். இதற்கு அமைய இலங்கைக்கு இப்போதைக்கு 22 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இதேவேளை, நேற்று நடைபெற்ற கால் இறுதிகளில் பங்குபற்றிய மற்றைய 3 இலங்கையர்கள் தோல்விகளைத் தழுவி வெளியேறினர்.
22 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 67 கிலோ கிராம் எடைப் பிரிவில் சவூதி அரேபிய வீரர் அல்காசிமி இஸ்மாயிலிடம் 0 - 5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வி. ஜயசிங்க தோல்வி அடைந்தார்.
71 கிலோ கிராம் எடைப் பிரிவு கால் இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீரர் காதிர் அகஸானின் கடுமையான தாக்குதல்களுக்கு கந்தேகெதர பண்டார இலக்கானதால் முதல் சுற்றுடனேயே ஆட்டம் நிறுத்தப்பட்டு காதிர் அகாஸானுக்கு வெற்றி அளிக்கப்பட்டது.
86 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட அரம்பேகெதர பண்டாரவின் போட்டி இரண்டாம் சுற்றுடன் நிறுத்தப்பட்டது.
நியூஸிலாந்து வீரர் வைனி ரோமனின் தாக்குதல்களில் பல தடவைகள் நிலைகுலைந்துபோன பண்டார, இரண்டாவது சுற்றில் தொடர்ந்து போட்டியிட முடியாது என அறிவித்தார். இதனை அடுத்து நியூஸிலாந்து வீரர் வைனி ரோமன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
போட்டியின் நான்காம் நாளான நாளை வியாழக்கிழமை (15) ஏழு குத்துச்சண்டைப் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் இரண்டு இலங்கையர்கள் கோதாவில் குதிக்கவுள்ளனர்.
இளையோர் ஆண்களுக்கான 67 கிலோ கிராம் எடைப் பிரிவில் தஜிகிஸ்தான் வீரர் சுல்தோனோவ் முஹம்மத் சுல்தோனை இலங்கை வீரர் அஸார் சர்மின் கபூர் மொஹமத் சந்திக்கவுள்ளார்.
இளையோர் பெண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவு போட்டியில் கிர்கிஸ்தான் வீராங்கனை அசில்பெக் கிஸி ஆடேலியாவை இலங்கையின் ஷ ஷிகலா நாணயக்கார எதிர்கொள்ளவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM