பாதுகாப்புச் செயலர்,  ஜனாதிபதி  செயலாளர் மற்றும் புதிய இராணுவத் தளபதியென அதிரடியாக புதிய நியமனங்கள் இன்று  வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, கபில வைத்தியாரத்ன பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, லெப்டினென் ஜெனரல் மகேஷ் செனாநாயக்க புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

லெப்டினன் ஜெனரல் மகேஷ் செனநாயக்க 22 ஆவது இராணுவத் தளபதியென்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

இலங்கையின் சிரேஷ்ட நிருவாக சேவை உத்தியோகத்தரான ஒஸ்டின் பெர்ணான்டோ, ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் அரச நிர்வாகம் பற்றிய முதுநிலை பட்டதாரியாவார்.

பொலன்னறுவை மற்றும் நுவரெலிய மாவட்டங்களின் அரச அதிபராக கடமையாற்றியுள்ள அவர், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராகவும் செயற்பட்டுள்ளார். மேலும் புனர்வாழ்வு, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்களின் செயலாளராகவும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் கபில வைத்தியரத்ன, ஜனாதிபதியிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

புதிய இராணுவத் தளபதியாக பாதுகாப்புப்படை பிரதானி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவரும் இன்று ஜனாதிபதியிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

ஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.