பொருளாதார சவால்களை இலங்கை எப்படி சமாளிக்கும்? 

13 May, 2025 | 12:57 PM
image

ரொபட் அன்டனி 

இலங்கையின் பொருளாதாரம் 2024ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததை விட வலுவாக மீட்சியடைந்திருப்பினும் கூட, நாட்டின் மொத்த சனத்தொகையில் அதிகமானோர் வறுமைக் கோட்டினுள் அல்லது வறுமைக்கோட்டுக்குள் விழக்கூடிய அபாய நிலையிலேயே இருப்பதாக அண்மையில்  உலக வங்கி வெளியிட்டிருந்த இலங்கை குறித்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீண்டு வருகின்ற பின்னணியிலேயே உலக வங்கியின் அரையாண்டு அறிக்கை கடந்த மாதம் வெளியாகியிருக்கிறது. அறிக்கையில் பல இடங்களில் இலங்கை கடந்த வருடத்தில் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை வெளிக்காட்டினாலும் தொடர்ந்தும் பல சவால்கள் இருப்பதாக ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முக்கியமாக வறுமை அதிகரிப்பு தொடர்பாகவே உலக வங்கியின் இலங்கை குறித்த அரையாண்டு அறிக்கையில் பல இடங்களிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இலங்கைக்கு உலக வங்கியின் தலைவர்  அஜய் பங்கா விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி செயற்பாடுகளுக்காக  மூன்றுவருட காலப்பகுதிக்காக ஒரு பில்லியன் டொலர் இலகு ரக சலுகை கடனை வழங்க இணங்கியிருந்தார். 3 வருடகால அடிப்படையில் வலுசக்தி துறைக்கு 185 மில்லியன் டொலர்களும், தனியார்துறை முதலீட்டுக்காக 800 மில்லியன் டொலர்களும், விவசாயத்துறை மேம்பாட்டுக்காக 100 மில்லியன் டொலர்களும், சுற்றுலாத்துறைக்காக 200 மில்லியன் டொலர்களும், பிராந்திய அபிவிருத்திக்காக 200 மில்லியன் டொலர்களுமாக ஒரு பில்லியன் டொலர்கள்  இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன. 

இந்த பின்னணியிலேயே அதற்கு முன்னதாக இலங்கை குறித்த பொருளாதார அபிவிருத்தி அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது. அதாவது இலங்கையின் பொருளாதார நிலைவரம் தொடர்பான உலக வங்கியின் அரையாண்டு அறிக்கை கடந்த மாதம் 'உரிய பாதையில் தொடர்ந்து நிலைத்திருந்தல்' எனும் தலைப்பில் கொழும்பில் வெளியிடப்பட்டது. இதில் இலங்கையின் பொருளாதார போக்கு தொடர்பில் விரிவான பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக 2024ஆம் ஆண்டில் 4.4 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவுசெய்யும் என எதிர்வுகூறப்பட்ட நிலையிலும் 2024ஆம் ஆண்டில் இலங்கை 5 வீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவுசெய்ததன் ஊடாக நாடு குறிப்பிடத்தக்களவிலான பொருளாதார மீட்சியை அடைந்திருப்பதாக உலக வங்கியின் அரையாண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது 2024ஆம் ஆண்டின் 4.4 வீதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், அந்த எதிர்வுகூறலைத் தாண்டி இலங்கையானது 2024ஆம் ஆண்டின் 5 வீத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த எதிர்பாராத வளர்ச்சியின் வேகம் பொருளாதாரத்தின் சாதகதன்மையை வெளிக்காட்டியிருக்கிறது. ஆனாலும் கூட நாட்டில் வறுமை அதிகரித்துக்கொண்டு செல்வதாகவே உலக வங்கி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

'இந்த வளர்ச்சியானது குறிப்பாக கட்டுமானம் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளடங்கலாக கைத்தொழில் மற்றும் சேவைத்துறைகளின் வலுவான செயலாற்றத்தின் ஊடாக சாத்தியமாகியிருக்கின்றது’’ என்றும் உலக வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

"இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவாக மீண்டு வரும் அதே வேளையில், மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் - சுமார் மூன்றில் ஒரு பங்கு - வறுமையில் உள்ளனர் அல்லது மீண்டும் வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளனர்" இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின்   பணிப்பாளர் டேவிட் சிஸ்லன்.

நடுத்தரகால வளர்ச்சியானது  மற்றும் வறுமைக் குறைப்பு, அதிகரித்து வரும் நிச்சயமற்ற உலகளாவிய சூழலுக்கு மத்தியில், பாரிய பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுதல்,  முக்கிய கட்டமைப்பு சீர்திருத்தங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. 2026ஆம் ஆண்டில் இலங்கை சுமார் 3.1 சதவீத மிதமான வளர்ச்சியை நோக்கி பயணிக்கும்.  வர்த்தகம், முதலீடு, போட்டி மற்றும் பெண் தொழிலாளர் படை பங்கேற்பை மேம்படுத்தும் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம் அதிக வளர்ச்சிப் பாதைக்கு மாறுவது, அனைத்து இலங்கையர்களும் மீட்சியிலிருந்து பயனடைவதை உறுதி செய்வதற்கு அவசியம் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் பொருளாதார வளர்ச்சி சாதகமாக இருந்தாலும் கூட வறுமை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதானது பொருளாதார மீட்சி செயற்பாட்டில் கரிசனையை தோற்றுவித்துள்ளது. வறுமையைக் குறைப்பதற்கும் நலிவுற்ற மக்களுக்கு பொருளாதார ரீதியிலான உதவிகள் செய்வதற்கும் வேலைத் திட்டங்கள் அவசியம் என்றும் உலக வங்கி உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றன.

‘‘2024 இல் வறுமை மட்டமானது 24.5 சதவீதமாகப் பதிவாகியிருப்பதுடன், இது இன்னமும் தீவிர கரிசனைக்குரிய உயர்வான மட்டத்திலேயே காணப்படுகின்றது. தொழிற்சந்தையும் தொடர் நெருக்கடிக்கு முகங்கொடுத்துவருதுடன், அதன் காரணமாகப் பலர் தொழில்வாய்ப்புக்களைத்தேடி வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் நிலை உருவாகியுள்ளது’’ என்றும் உலக வங்கி எடுத்துரைத்துள்ளது.

2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு காரணமாகவே இந்த முன்னேற்றத்தை அடைந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

2024 ஆம் ஆண்டில் வளர்ச்சி, நிதி சமநிலைகள் மற்றும் வெளிப்புற இடையகங்கள் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருப்பதால் பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருகிறது. ஆனால் குடும்பங்களின் வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி ஆகியவை நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விட மிகவும் குறைவாகவே உள்ளன என்றும் உலக வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது.

அந்த வகையில் உலக வங்கியின் அறிக்கையை ஒரு எச்சரிக்கை கலந்த மதிப்பீடாகவே இலங்கை பார்க்க வேண்டியிருக்கிறது. உண்மையில் 2022ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியை அடுத்து நாட்டின் பொருளாதார கட்டமைப்பு சீர்குலைந்தது. எனினும், முன்னைய ரணில் விக்கிரமசிங்க காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தை நாடி நிதிவசதி ஒப்பந்தத்தை செய்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனூடாக இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு கிடைத்தன. அதாவது எட்டு தவணைகளில் இந்த நாணய நிதியத்தின் கடன் கிடைக்கவுள்ளது.

ஏற்கனவே நான்கு தவணைப் பணங்கள் கிடைத்துவிட்டன. இன்னும் நான்கு தவணைப் பணம் கிடைக்கவுள்ளது. நான்காம் கட்ட நாணய நிதியத்தின் மீளாய்வு முடிந்துவிட்டதுடன் உத்தியோகஸ்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.  ஆனால்  ஐந்தாவது தவணை பணத்தை பெறவேண்டுமாயின் மின்கட்டண மீள்திருத்தம் உட்பட சில நிபந்தனைகளை நாணய நிதியம் முன்வைத்துள்ளது.  

2023ஆம் ஆண்டில் நாணய நிதியத்துடன் இலங்கை செயற்படத் தொடங்கியதையடுத்து நாட்டின் பொருளாதாரம் மீள எழும்ப ஆரம்பித்தது. குறிப்பாக ரூபாவின் பெறுமதி 300 ரூபாவுக்குள் ஸ்திரமடைந்தது. அரச வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 12 வீதமாக அதிகரித்தது. இவ்வருடம் 15 வீத இலக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வட்டி வீதங்கள் பாரியளவில் குறைவடைந்தன. நெருக்கடியின் போது 16.5 வீதமாகக் காணப்பட்ட கடன்களுக்கான வட்டி தற்போது குறைவடைந்திருக்கிறது. அதேபோன்று பணவீக்கமும் வீழ்ச்சியடைந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் பொதுவான பணவீக்கம் 80 வீதமாகவும் உணவுப் பணவீக்கம் 90 வீதமாகவும் காணப்பட்டது.  எனினும் தற்போது பணவீக்கம் ஒற்றை இலக்கத்துக்கும் குறைவடைந்து சென்றதுடன் பணவோட்டமும் நாட்டில் ஏற்பட்டது.

கடன் மற்றும் விலை ஸ்திரத்தன்மை மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டு மட்டத்திலும் கடன் மறுசீரமைப்புகள் செய்யப்பட்டன. உலக வங்கியும் பல்வேறு கட்டங்களில் இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கியது. வெளிநாட்டு கையிருப்பு 6 பில்லியன்களை தாண்டியது. 2022ஆம் ஆண்டு 15 பில்லியன் கையிருப்பு கூட இருக்கவில்லை.

அத்துடன் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு டொலர்களை அனுப்புகின்ற இலங்கையர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்நிய செலவாணி வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று சுற்றுலாத்துறையும் முன்னேற்றமடைய ஆரம்பித்துள்ளது. இவ்வருடத்தில் கிட்டத்தட்ட 27 இலட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள். அதன் மூலம் 4 பில்லியன் டொலர்கள் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இவ்வாறு சகல மட்டங்களிலும் இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. அதாவது பொருளாதாரம் மீட்சியடைய ஆரம்பித்தது.

இந்த முன்னேற்ற குறிகாட்டிகளை கவனத்தில்கொண்டுள்ள உலக வங்கி இலங்கை மீட்சி செயற்பாடுகளின் முன்னேற்றமடைந்து வருவதாகவும் எனினும், தொடர்ந்தும் பாரிய சவால்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த வகையில் அரசாங்கம் உடனடியாக வறுமையைப் போக்குவதற்கும் தொழில்வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில்வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் வாழ்க்கைச் செலவு உயர்வை குறைத்தால் வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழுவார்கள்.

வறுமையை போக்கி வறிய கோட்டின் வாழ்கின்ற மக்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த செயற்பாடுகளின் ஊடாகவே வறுமையை ஒழிக்க முடியும். ஆனால் தொழில்வாய்ப்புகளை உருவாக்கவும் பொருளாதார சந்தர்ப்பங்களை அதிகரிக்கவும் நாட்டுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அவசியமாகின்றன.

எனவே நேரடி வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்கான வேலைத் திட்டங்கள் அவசியமாகின்றன. இதற்காக பல்வேறு நாடுகளுடன் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொள்ள வேண்டும்.

இதனூடாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரித்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது. எனினும் தற்போது இவை தொடர்பாகவும் சிக்கல் நிலை தோன்றியுள்ளன. இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 54 வீத வரியை (10+44) விதித்துள்ளது. தற்போது இந்த வரி அமுலாக்கம் 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும், 90 நாட்களின் பின்னர் என்ன நடக்கும் என்பதை எதிர்வுகூற முடியாமல் இருக்கிறது. இந்த வரி அமுலாக்கம் நடைபெற்றால் அது இலங்கையின் ஆடை உற்பத்தித்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தொழில்வாய்ப்புகள் இழக்கப்படலாம். மக்களின் வருமானம் பாதிக்கப்படலாம்.  இது தொடர்பில் தற்போது  இலங்கை அரச தரப்பினர் அமெரிக்க பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்ளவுள்ளதாக  அரசாங்கம் அறிவித்துள்ளது. 

“அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் சிறந்த மட்டத்தில் காணப்படுகின்றன. எமது தூதுக்குழு அங்கு விஜயம் செய்து பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தது. அதாவது இந்த விடயத்திற்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது. அந்த வர்த்தக ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இது தொடர்பாக பல மட்டங்களில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் இலங்கைக்கு அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். அதன் ஊடாக இந்த தீர்வைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையா அல்லது சாதாரண வர்த்த உடன்படிக்கை என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. வர்த்தக உடன்படிக்கையின் உள்ளடக்கம் குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அது தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தொழில்நுட்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்’’   என்று  வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டிருக்கிறார். 

அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியம் வழங்குகின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைக்கும் அடுத்த வருடம் இலங்கை மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அது கிடைக்குமா என்பதை இன்னும் உறுதி செய்ய முடியாமல் இருக்கிறது.  இது குறித்து பேச்சுக்களும் தற்போது இடம்பெற்றுவருகின்றன. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழு இலங்ககைக்கு விஜயம் செய்து  பல்வேறு தரப்பினர்களுடன் பேச்சுச்களை நடத்தியிருந்தது.  

இது குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரினோ ‘’ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கைக்கு வேண்டுனால் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருக்கின்ற நிபந்தனைகளை இலங்கை பின்பற்றியாக   வேண்டும்.  இணக்கப்பாடுகளை நிறைவேற்றியாக வேண்டும்.  இல்லாவிடின்  ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கைக்கு இலங்கைக்கு கிடைக்காமல் போய்விடும். ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கையே  ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்கிறது.  எனவே அந்த சலுகையை கேட்டால் அதற்கேற்றவாறு இலங்கை நடந்து கொள்ள வேண்டும்.  எங்களது நிபந்தனைகளை தளர்த்துமாறு இலங்கை  எமக்கு கூற முடியாது.  அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியிருக்கின்ற சலுகையை இலங்கை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.  அதனை முழுமையாக பயன்படுத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதியை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும்’’  என்று குறிப்பிட்டிருந்தார். 

எனவே எப்படி பார்த்தாலும் இலங்கைக்கு சர்வதேச மட்ட விடயங்களில் ஒரு சவாலான காலப்பகுதி வந்துகொண்டிருக்கிறது என்பதே யதார்த்தமாகும். இந்தப் பின்னணியிலேயே உலக வங்கி விடுத்திருக்கின்ற எச்சரிக்கை தொடர்பாக இலங்கை கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது, பொருளாதார மீட்சியில் முன்னேற்றம் இருந்தாலும் வறுமை என்பது ஒரு மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. அடுத்த சில வருடங்களில் வறுமை மட்டம் 20 வீதத்தை தாண்டி பதிவாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே இந்த சவால்களின் தன்மையை புரிந்துகொண்டு இலங்கை அடுத்தகட்டத்துக்கு தயாராக வேண்டும்.  சர்வதேச மட்டத்தினருடன் இராஜதந்திர பேச்சுக்களை நடத்தி  இலங்கைக்கு சாதகமான சூழலை உருவாக்கவது அவசியமாகும்.  உலக வங்கி கூறுவதைப் போன்று பொருளாதார மறுசீரமைப்புகளும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் முதலீட்டுக்கு உகந்த சூழலும் வட்டி வீதக் குறைப்பும் சரியான முறையில் நாட்டில் இயங்கும் பட்சத்திலேயே பொருளாதார வளர்ச்சி ஏற்படும். வறுமையைக் குறைக்கலாம்.

சர்வதேச ரீதியான பொருளாதார வர்த்தக ரீதியான உறவுகளும் விரிவடைவதுடன் அவை சரியான முறையில் இயங்க வேண்டும். எனவே இவற்றை கருத்திற்கொண்டு அரசாங்கம் உரிய தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்கவேண்டிய தேவை காணப்படுகிறது.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் - ஈரான் மோதல் வரலாற்றில்...

2025-06-22 13:44:34
news-image

தடுக்கப்படும் ஐ.நா.வின் ஆய்வுக்கப்பல்

2025-06-22 12:49:45
news-image

ஆட்சிக்காக இணைவது என்றால் மக்களை பிரித்தது...

2025-06-22 13:07:12
news-image

ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைதல்:...

2025-06-22 11:55:15
news-image

முஸ்லிம்கள் ஏமாளிச் சமூகமா?

2025-06-22 12:25:04
news-image

தமிழரசுக் கட்சி ஒருங்கிணைந்த அரசியலை நோக்கி...

2025-06-22 12:04:05
news-image

வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்ஜென்டீன முன்னாள் ஜனாதிபதி

2025-06-22 11:03:27
news-image

மேற்கு சஹாராவின் ஆட்சி உரிமை

2025-06-22 11:18:24
news-image

அகதி என்ற நிலையில் இருந்து வெளியேறி,...

2025-06-22 09:35:53
news-image

செம்மணி புதைகுழி குறித்த இலங்கையின் மௌனம்...

2025-06-20 17:27:24
news-image

சென்னையில் ஈ.பி.ஆர்.எல் எவ். தலைவர்கள் படுகொலையை...

2025-06-20 09:10:41
news-image

இலங்கையில் இதுவரை 20 மனித புதைகுழிகள்...

2025-06-19 16:06:09