வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை இன்று அமைச்சரது வவுனியா இணைப்பு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

இதன்போது வவுனியாவில் 399 பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும் தமது போராட்டம் 125 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கவில்லையென்றும் முதலமைச்சர், பிரதமர் ஆகியோர் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லையென்றும் தெரிவித்தனர். 

மாகாண சபையின் திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படல்வேண்டுமெனவும் பட்டதாரிகளை போட்டிப்பரீட்சை நடாத்தி நியமனம் வழங்குவதை நிறுத்தவேண்டுமெனவும் மூப்பு அடிப்படையில் பல்கலைகழகத்தை விட்டு வெளியேறிய ஆண்டின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படல்வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவரை தாங்கள் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் மாகாணத்தில் நீடித்து நிலைக்கக்கூடிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிப்பதன் மூலமே பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை காணமுடியுமெனவும் மாகாண சபைக்கு நியமனங்கள் வழங்கும் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தனது அமைச்சில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் இருப்பதாகவும் இதுதொடர்பில் இதுவரை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி கிடைக்கவில்லையென்றும் தெரிவித்ததோடு எதிக்கட்சி தலைவருடன் பேசி சந்திப்பொன்றை ஏற்படுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதாகவும் தெரிவித்தார்.