அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்லெக் தோட்டத்தில் 230 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதுடன் இங்கு 800க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இத்தோட்டத்திற்கு செல்வதாக இருந்தால் ஆகுரோயா ஆற்றினை கடந்தே செல்லவேண்டும். ஆற்றினை கடந்து செல்வதற்கு 75 வருடங்களுக்கு முன்பு மரத்திலான பாலத்தினை தோட்ட மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

மழைக்காலங்களில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுக்கும் போது பாலம் வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்படும். இதன்போது இவர்கள் போக்குவரத்து செய்யமுடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இம்மக்களின் நலன் கருதி 30 வருடங்களுக்கு முன்பு இரும்பு பாலம் அமைத்து கொடுக்கப்பட்டது. இப்பாலம் மிகவும் சிறிய அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மழைக்காலங்களில் இப்பாலமும் வெள்ளத்தால் மூழ்கிவிடும்.

தற்போது இப்பாலம் உடைந்த நிலையில் காணப்படுவதால் பாலம் எந்த நேரத்திலும் உடைந்து போகக்கூடும் என்ற அச்சத்தில் பயணத்தினை தொடர்வதாக அங்குள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக இத்தோட்ட மக்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதற்காக மன்றாசி அல்லது ஹோல்புறூக் நகரங்களுக்கு செல்லவேண்டும்.

பாலம் உடைந்து காணப்படுவதால் சுமார் 6 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பாதையின் ஊடாக பயணிக்க வேண்டியுள்ளதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இத்தோட்ட மக்கள் அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு செல்வதாகயிருந்தால் இப்பாலத்தின் ஊடாக 30 நிமிடங்களில் செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், பாலம் உடைந்திருப்பதன் காரணமாக ஒரு மணி நேரம் தேவைப்படுவதாகவும், போக்குவரத்திற்கு அதிக பணம் செலவு செய்யவேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதேவேளை, தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் பாலத்தினை உடனடியாக செய்து தருவதாக வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்ற தலைவர்கள் தற்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து செயல்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர்.