தமிழரசுக்கட்சி வன்னியில் கசிப்பையும் பணத்தையும் விநியோகித்தது - பிமல் ரத்நாயக்க

Published By: Digital Desk 2

09 May, 2025 | 08:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சித் சபைகளுக்கான தேர்தலில் வன்னி மாவட்டத்தில் வாக்குகளை பெறுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி அங்கு  கசிப்பும் பணமும் விநியோகித்துள்ளது. அதேபோன்று இனவாதத்தை முன்னெடுத்தனர்.இதனை பொறுப்புடன் தெரிவிக்கிறேன் என சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8)  இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 'அ' அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில்  பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியையும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அதிகாரத்தையும் தற்போது 341 உள்ளுராட்சி சபைகளில் 79 சதவீதமான அதிகாரத்தை கொண்டுள்ள கட்சியாகும். அதேபோன்று தொழிற்சங்க அதிகாரத்தையும் நாங்கள் கொண்டுள்ளோம். இவ்வாறான எங்களின் பணிவு நிலை தொடர்பில் மக்களும் விமர்சிக்கின்றனர்.

கடந்த 15 வருடங்களில் மூன்று தடவைகளே உள்ளுராட்சித் தேர்தல்கள் நடந்துள்ளன. 2011 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அவர்களின் கட்சி 270 சபைகளை வென்றது. 2611 உறுப்பினர்களையே கொண்டிருந்தனர். பின்னர் 2018ஆம் ஆண்டில் அந்த அதிகாரத்துடனேயே உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றினர்.

231 உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்றனர். அப்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே இருந்தது. தமது ஜனாதிபதி, பிரதமர் பதவியை வைத்துக்கொண்டே 31 உள்ளூராட்சி சபைகளையே கைப்பற்றியது. அப்போது அவர்கள் ஆட்சியில் இருந்து போனார்களா இல்லையே .

2018ஆம் ஆண்டில் எங்களிடம் ஒரு உள்ளூராட்சி சபைகளும் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் பூச்சியத்தில் இருந்து 267 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளதுடன் 3000க்கும்  அதிகமான உறுப்பினர்களை பெற்றுள்ளோம்.

இப்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு 14 சபைகளே கிடைத்துள்ளன. அவற்றில் ஆட்சி அமைக்கக்கூடிய சபைகள் எத்தனை உள்ளன என்று தெரியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்துப்பார்த்தால் 34 சபைகளில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி 14 சபைகளாக குறைந்துள்ளது.

இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்தவொரு சபையும் கிடைக்கவில்லை.இலங்கை வரலாற்றில் தேசிய மக்கள் சக்தியே அதிகளவான உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது .

இந்நிலையில் வடக்கில் நாங்கள் இல்லாமல் போயுள்ளோம் என்று கூறுகின்றனர். ஆனால் வன்னி மாவட்டத்தில் எங்களின் வாக்குகள் அதிகரித்துள்ளன. வன்னி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி கசிப்பு விநியோகித்தது. பணமும் கொடுத்தனர். இதனை பொறுப்புடன் கூறுகின்றேன்.

பச்சையான இனவாதத்தை முன்னெடுத்தனர். ஆனால் அவ்வாறு எங்களுக்கு விநியோகிப்பதென்றால் எவ்வளவோ  விநியோகித்திருக்கலாம்.

குறைந்தது இந்த வீதியை திருத்துவோம் என்று கூறிக்கூட நாங்கள் ஒரு வாக்கையேனும் பெறவில்லை. கணக்கு வாக்கெடுப்பில் குறிப்பிடப்பட்ட வீதிகளை மாத்திரம் நாங்கள் சொல்லியிருக்கலாம். எந்தவொரு உறுப்பினரையும் நாங்கள் பணத்திற்காக வாங்கவில்லை. நாங்கள் இனவாதத்தை பயன்படுத்தவில்லை. நாங்கள் சுத்தமான அரசியல் செய்தோம்.

வடக்கில் வன்னி மாவட்டத்தில் மன்னாரில் தேசிய மக்கள் சக்தியே பெரிய கட்சியாக இருக்கின்றது. ஷொப்பிங்  பேக்குடன் மன்னாரில் இருந்து புத்தளம் போய் இப்போது கப்பலில்கூட ஏற்றமுடியாதளவுக்கான சொத்துக்களை கொண்டவர்கள் நாங்கள் அல்ல.

வவுனியாவிலும் நாமே  பெரிய கட்சி , முல்லைத்தீவிலும் வாக்குகள் அதிகரித்துள்ளன. வடக்கில் குறிப்பாக வன்னி மாவட்டத்தில் வாக்குகளை அதிகரித்துள்ள ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தி மட்டுமே.

அதேபோன்று யாழ். மாவட்டத்தில் எமது கட்சிக்கு வரலாற்றில் உள்ளூராட்சி சபைகளில் ஒரு ஆசனமேனும் இருந்ததில்லை. ஆனால் இன்று 81 உறுப்பினர்கள் அங்கே இருக்கின்றனர். கிளிநொச்சியை சேர்த்தால் நூறு வரையிலான உறுப்பினர்கள் உள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியே வரலாற்றில் சகல சபைகளையும் ஆட்சி செய்துள்ளது. யாழ். நகர சபையின் நிலைமை என்ன? பெரும் கதைகளை கதைத்துக்கொண்டிருக்கும் அந்தக் கட்சிக்கு 13 ஆசனங்களே கிடைத்துள்ளன.

பொன்னம்பலத்தின் கட்சிக்கு 12 ஆசனங்கள் கிடைத்துள்ளன. இவர்கள் அந்த சபையை ஆட்சி செய்தவர்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தி 10 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒன்றும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒன்றும் என்றே ஆசனங்கள் கிடைத்துள்ளன.

நாங்கள் அங்கே புதியவர்கள். அந்த மண்ணை மிதிக்காதவர்கள் இப்போது அங்கே 150 உறுப்பினர்கள் உள்ளனர். வன்னியில் முதலிடத்தில் இருக்கும்  கட்சி நாங்களே, முழு வடக்கிலும் தேசிய கட்சிகளில் பெரிய கட்சி நாங்களே.இம்முறை நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி 267 உள்ளூராட்சி சபைகளையும் ஆட்சி செய்யும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் இஸ்ரேலில்...

2025-06-22 14:25:31
news-image

யாழில் பல்வேறு குற்றச்செயல்களை புரிந்த மூவர்...

2025-06-22 14:07:15
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஒடுக்குமுறைப்போக்கை தெள்ளத்தெளிவாகக் காண்பிக்கிறது ருஷ்டியின்...

2025-06-22 13:10:38
news-image

குறைந்த செலவிலான தரமான வலுசக்தி உற்பத்திக்கு...

2025-06-22 13:08:11
news-image

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித...

2025-06-22 13:02:04
news-image

கட்டுநாயக்கவில் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!

2025-06-22 13:06:03
news-image

பல்துறைசார் வாய்ப்புக்கள் குறித்து ஆராய முன்வாருங்கள்...

2025-06-22 13:03:51
news-image

செம்மணி மனிதபுதைகுழி பகுதிக்கு செல்வதற்கு ஐநா...

2025-06-22 12:36:49
news-image

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ்...

2025-06-22 12:38:09
news-image

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை...

2025-06-22 11:58:41
news-image

ஈரானில் 37 இலங்கையர்கள் உள்ளனர் ;...

2025-06-22 12:02:33
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் கைக்குண்டு, போதைப்பொருளுடன் சந்தேக நபர்...

2025-06-22 12:03:12