என் காதலே - திரைப்பட விமர்சனம்

09 May, 2025 | 03:57 PM
image

நடிகர்கள்: லிங்கேஷ், திவ்யா தோமஸ் லேயா, மதுசூதனன் மாறன் கஞ்சா கருப்பு மற்றும் பலர்.

இயக்கம்: ஜெயலட்சுமி

மதிப்பீடு: 2 / 5

குணச்சித்திர நடிகராக பிரபலமான லிங்கேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' என் காதலே' திரைப்படம் இரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

கடற்கரையோரம் உள்ள மீனவ குப்பத்தில் கதையின் நாயகனான தீனா ( லிங்கேஷ்) இயல்பான மீனவர்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவருக்கு தனம் ( திவ்யா தோமஸ்) என்றொரு மாமன் மகள் இருக்கிறார். தனம், தீனா மீது உயிரையே வைத்திருக்கிறார் அவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து அவருக்காக காத்திருக்கிறார்.

இந்தத் தருணத்தில் தமிழர்களின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளவும், மீனவர்களின் வாழ்வியலை தெரிந்து கொள்ளவும் அயல் நாட்டிலிருந்து அந்த  மீனவ குப்பத்திற்கு ஆய்வு செய்யும் மாணவர்கள் கொண்ட குழு வருகிறது. அந்த குழுவில் ஹெலன் (லேயா) என்றொரு பெண்ணும் இடம் பிடித்திருக்கிறார்.

இவர்களுக்கு உதவுவதற்காக ஊர் பெரியவரான மதுசூதன் (மதுசூதனன் ராவ்) தீனாவை நியமிக்கிறார். தொடக்கத்தில் தீனாவை நேர்மையற்றவர்- தவறானவர்- என கருதும் ஹெலன், நாட்கள் செல்ல செல்ல அவர் மீது காதல் கொள்கிறார். இந்த முக்கோண காதலில் யார் வெற்றி பெறுகிறார்கள்? என்பது தான் இப்படத்தின் கதை.

படத்தின் தொடக்கம் முதல் எந்த ஒரு காட்சியும் இரசிகர்களுக்கு வியப்பையோ, சுவராசியத்தையோ தராமல் இயல்பாக கடந்து செல்கிறது. இதனால் இரசிகர்களுக்கு சோர்வும், அயர்ச்சியும் ஏற்படுகிறது. காட்சிகளில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு.. அதன் பிறகு எந்த தாக்கமும் இல்லாமல் கதை நகர்வதால் இரசிகர்களுக்கு எரிச்சலும் அதிகமாகிறது.

தீனாவை காதலிக்கும் தனம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை திவ்யா தோமஸ் நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார். தீனாவை காதலிக்கும் ஹெலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அயல் தேச நடிகை லேயா இளமையுடன் அழகாகவும் காட்சித் தருகிறார். தீனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிங்கேஷ் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்.

காதல் திரைப்படங்கள் என்றால் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் அதீத முக்கியத்துவத்தை பார்வையாளர்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த உணர்வு இசையின் மூலம் வெளிப்பட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். இந்த விடயத்தில் இசையமைப்பாளர் சாண்டி சாண்டெல்லோ தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் அது இரசிகர்களின் செவிகளுக்கு சென்று உணர்வைத்தூண்டியதா..!? என்றால் கேள்வி குறிதான். டோனி ஜான் - வெங்கடேஷ் ஆகிய இருவரின் ஒளிப்பதிவில் கடற்கரை அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

என் காதலே - பளபளப்பற்ற 'கிரிஞ்ச்'

முக்கிய செய்திகள்

icon-left
icon-right