முன்னணி பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக இருந்துவரும் போட்டிக்கு நிலையான தீர்வு கிராமப் பாடசாலைகளை அனைத்து வசதி வாய்ப்புகளுடனும் மேம்படுத்துவதாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

இந்த கொள்கைக்கேற்ப செயற்பட்டுவரும் தற்போதைய அரசாங்கம் கிராமப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு பல விரிவான நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

பத்தேகம புனித அந்தோனியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப பீடம் மற்றும் தொழில்நுட்பக்கூடத்தை மாணவர்களிடம் கையளித்தல் மற்றும் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் கல்விக் கண்காட்சியைத் திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

நகரத்திலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற கருத்தின் காரணமாக பெற்றோர்களிடையே இந்தப் போட்டித்தன்மை ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அருகில் இருக்கும் பாடசாலையை சிறந்த பாடசாலையாக மாற்றி நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார். 

பத்தேகம நகரின் அபிவிருத்தி குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த நகரின் திட்டமிடல் மற்றும் சுற்றாடல் தொடர்பில் இதனை விட திட்டமிட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் அவசியம் எனக் குறிப்பிட்டார். 

இதற்காக முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் தொடர்பில் பிரதேச அரசியல் தலைமைகளுடன் கலந்துரையாடி தேவையான ஏற்பாடுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.