பட அதிபர் மதனுக்கு சொந்தமான சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமலாக்கப்பிரிவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ வாங்கித் தருவதாக ரூ.91 கோடி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து சினிமா பட அதிபர் மதனை கைது செய்தனர்.

பணத்தை பறிகொடுத்த 133 மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் பட அதிபர் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக மத்திய அரசின் அமலாக்கப்பிரிவும் பட அதிபர் மதன் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டது.

அமலாக்கப்பிரிவு தற்போது பட அதிபர் மதனுக்கு சொந்தமான ரூ.6.35 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை வடபழனி மற்றும் சாலிகிராமத்தில் உள்ள சொத்துகள், கேரளா மாநிலம் கொல்லத்தில் உள்ள சுமார் 6 ஏக்கர் நிலம் மற்றும் 2 வீடுகள் முடக்கப்பட்ட சொத்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அமலாக்கப்பிரிவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.