எரிசக்தியின் வினைதிறன் மீதான விழிப்புணர்வை அதிகரித்து, படிம எரிபொருட்களில் தங்கியிருப்பதைக் குறைத்து, காபனீரொட்சைட்டு வெளியேற்றங்களைக் குறைப்பதே இலங்கையின் தற்போதைய எரிசக்தி தொடர்பான கொள்கையின் பிரதான இலக்குகளாகக் காணப்படுகின்றன. சூரிய எரிசக்தி, உயிர் வாயு, நீர்மின்வலு மற்றும் காற்று மூலமான எரிசக்தியைப் பயன்படுத்துவற்கான மிகச் சிறந்த சூழ்நிலைகளை இந்த நாடு கொண்டுள்ளது. 

ஜேர்மன் வெளி விவகார அமைச்சு மற்றும் இலங்கை மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து, இச்செயற்திட்டத்தின் அமுலாக்க பங்காளரான Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH மற்றும் இலங்கை நிலைபேண்தகு எரிசக்தி அதிகார சபை ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு, இலங்கையில் எரிசக்தி மாற்றத்தை வெற்றிகரமான ஒரு முயற்சியாக ஆக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

எரிசக்தி வினைதிறனை ஊக்குவித்து, நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பாவனையை ஊக்குவிக்கும் வகையிலான புத்தாக்கமான திட்டங்களை இனங்கண்டு, அவற்றிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நாடளாவியரீதியில் இடம்பெறும் போட்டியான இலங்கையின் பசுமை எரிசக்தி வெற்றியாளர் முன்னெடுப்பின் இரண்டாவது சுற்று கடந்த ஜுன் 29 ஆம் திகதியன்று இதில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்காளர்களாலும் ஒன்றிணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. 

இலங்கை மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் பிரதி அமைச்சரான அஜித் பீ பெரேரா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஜேர்மன் தூதுவரான மேன்மை தங்கிய ஜோர்ன் ரோட் ஆகியோர் இந்த அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கடந்த ஆண்டில் இதன் முதலாவது செயற்திட்டம் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, எரிசக்தியை சேமிப்பது தொடர்பாக பயன்மிக்க தகவல்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான தகவல் பின்னணி தொடர்பில் 700,000 வரையான மக்கள் ஊடகங்கள் வாயிலாக பயன்பெற்றிருந்த நிலையில், பசுமை எரிசக்தி வெற்றியாளர் 2017 போட்டி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது போட்டியில், எரிசக்தி வினைதிறன் தொடர்பில் ஒரு முழுமையான, வித்தியாசமான அணுகுமுறையை முன்வைத்திருந்த கொழும்பு ஆனந்தா கல்லூரி வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. வெற்றியை ஈட்டித்தந்த அவர்களது செயற்திட்டமானது, 2016 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் அமுலாக்கம் செய்யப்பட்டுரூபவ் ஆண்டுதோறும் 24,000 கிலோவாற் மணித்தியாலங்களுக்கும் மேற்பட்ட எரிசக்தியை உற்பத்தி செய்யும் சூரிய ஒளிமின்னழுத்தவியல் தொகுதி (solar PV system) பொருத்தப்பட்டதுடன், பாடசாலையில் பசளையாக்க முறைமையை மேம்படுத்தி, திண்மக் கழிவுகளை அகற்றும் சிறந்த முகாமைத்துவத் திட்டமொன்றும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. மேலும், 7,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சி நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தற்போது இந்த முன்னெடுப்பின் கீழ் நிலைபேண் தகைமை கொண்ட மற்றும் தூய எரிசக்தி தீர்வுகளைக் காண்பிக்கவுள்ள மூலத் திட்டத்தை முன்வைக்கும் மற்றுமொரு “பசுமை எரிசக்தி வெற்றியாளர்” தெரிவு செய்யப்படவுள்ளார். வெற்றிபெறும் திட்டத்திற்கு அதனை அமுலாக்கம் செய்வதற்காக ரூபா 10 மில்லியன் ரூபா வரையான (அண்ணளவாக 60,000 யூரோ) தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அமுலாக்கத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனை ஆகியன வழங்கப்படவுள்ளன.

இப்போட்டிக்கான விண்ணப்பங்களை ஜுலை 1 முதல் ஆகஸ்ட் 18 வரையான காலப்பகுதியில், www.greenenergychampion.lk என்ற பிரச்சார இணையத்தளத்தில் கிடைக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியும். இது தொடர்பான மேலதிக தகவல் விபரங்களையும் இந்த இணையத்தளத்தின் ஊடக அறிந்துகொள்ள முடியும்.

தமது சூழலில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை எவ்வாறு உபயோகிக்க முடியும் என்பது தொடர்பில் நிலையான திட்டங்களை முன்வைக்கும் வகையில் இலங்கை மக்களை ஊக்குவிப்பதே இப்போட்டியின் நோக்கமாகும். செயன்முறைத் திட்டத்தைத் தொகுத்தல் மற்றும் அதற்கான உத்தேச மதிப்பீட்டை முன்வைப்பதற்காக வழிகாட்டல் விபரங்கள் அடங்கிய வினாக்கொத்து ஒன்றும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

அனைத்து விண்ணப்பங்களும் முறையாக பரிசீலனை செய்யப்பட்டுரூபவ் அதனைத் தொடர்ந்து மிகச் சிறந்த திட்டங்களை முன்வைத்த ஐந்து பேருக்கு தமது தொடர்பாடல் மற்றும் முகாமைத்துவத் திறன்களை வளர்க்க உதவும் வகையில் செயலமர்வொன்றில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படுவர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி வினைதிறன் மற்றும் திட்ட படைப்பு விளக்கங்கள் தொடர்பான தொழில்நுட்ப கருத்துக்களையும் அவர்கள் இச்செயலமர்வில் பெற்றுக்கொள்வர். செயலமர்வின் நிறைவாக போட்டியாளர்கள் தமது திட்டங்களை முன்வைக்குமாறு கோரப்படுவர். ஜேர்மனிய குடியரசு தூதரகம், மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு, இலங்கை நிலைபேண்தகு எரிசக்தி அதிகார சபை மற்றும் GIZ நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பிரபல நடுவர் குழு, இறுதி வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும்.

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஜேர்மன் தூதுவரான மேன்மை தங்கிய ஜோர்ன் ரோட், இது தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றுகையில்ரூபவ் “நாம் வாழ்கின்ற தற்போதைய காலத்தில் காலநிலை மாற்றம் என்பது பாரியதொரு சவாலாகக் காணப்படுகின்றது. மின்சாரத்தை உற்பத்தி செய்து அதனை உபயோகிக்கின்ற எமது வழிமுறைகளை நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. நாம் முன்னெடுக்கின்ற பசுமை எரிசக்தி வெற்றியாளர் போட்டியானது இந்த நாடு தனது எரிசக்தி மாற்றத்தை உண்மையாக முன்னெடுக்க உதவும் வகையில் இலங்கை மக்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான புத்தாக்கமான திட்டங்களை பெருமளவில் முன்வைக்க உதவுமென நான் உறுதியாக நம்புகின்றேன். நிலைபேண் தகைமை கொண்ட பசுமை எரிசக்தியின் எதிர்காலம் தொடர்பான இலங்கையின் முயற்சிகளுக்கு ஜேர்மனி தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும்,” என்று குறிப்பிட்டார்.

உலகில் பொருளாதாரரீதியாக நான்காவது இடத்தில் திகழ்ந்துவருகின்ற ஜேர்மனி “Energiewende”என்று அழைக்கப்படுகின்ற ஒரு சகாப்த மாற்றத்தை தற்போது முன்னின்று நடைமுறைப்படுத்தி வருகின்றது. தனது நாட்டின் எரிசக்தி உற்பத்தி மூலங்களை நிலைபேண் தகைமை கொண்ட வகையில் மாற்றத்திற்கு உட்படுத்துவதே இந்த முன்னெடுப்பின் மூல நோக்கமாகும். அணுசக்தி மின்வலு, நிலக்கரி, வாயு மற்றும் ஏனைய அனைத்து படிம எரிபொருட்களும் படிப்படியாக புதுப்பிக்கத்தக்க எரிபொருள் மூலங்களால் பிரதியீடு செய்யப்படவுள்ளன. அந்த முயற்சியில் ஜேர்மனி தொடர்ந்தும் சிறப்பாகப் பயணித்து வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் அந்நாட்டின் மொத்த மின்சாரப் பாவனையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு வெறும் 6.2 வீதமாக மட்டுமே காணப்பட்ட நிலையில், 2016 ஆம் ஆண்டில் அது 41.7 வீதம் என்ற பாரிய இலக்கினை எட்டியுள்ளது. 

இந்த வெற்றிகரமான அணுகுமுறையைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதால், சூழலுக்கு தீங்கிளைக்கும் வெளியீட்டு விளைவுகளை 1990 ஆம் ஆண்டில் காணப்பட்ட நிலைமட்டங்களுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டளவில் குறைந்தபட்சம் 40 வீதத்தினாலும் இனாலும், 2050 ஆம் ஆண்டளவில் 80 வீதத்தினாலும் குறைக்க வேண்டும் என்ற இலட்சியப்பற்று மிக்க இலக்கினை அடைந்துகொள்ள திடசங்கல்பத்துடன் ஜேர்மனி செயற்பட்டு வருகின்றது.