வரலாற்றின் மிகப்பெரிய பணக்காரர் மான்ஸா மூஸா…!

03 May, 2025 | 05:14 PM
image

வரலாற்றின் மிகப்பெரிய பணக்காரராகத் திகழ்ந்தவர், பேரரசர் மான்சா மூஸா (Mansa Musa). மேற்கு ஆபிரிக்காவில் உள்ள மாலி பேரரசை 25 ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர்தான் இந்த மான்சா மூசா. இவரது காலம் கி.பி 1280 முதல் கி.பி 1337.

இவரது சிறப்பான ஆட்சிமுறையாலும், கொடைத்தன்மையாலும் இஸ்லாம் மார்க்கத்திற்கு பெறும் புகழை தேடித்தந்த குறிப்பிடத்தக்கவர்களில் இவரும் ஒருவர். நிறத்தாலும், குணத்தாலும், செல்வத்தாலும் இவரை "கருப்புத் தங்கம்" என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆபிரிக்க கண்டத்தின் மிகப்பெரிய பேரரசு என்றால் இவர் ஆட்சி புரிந்த மாலி பேரரசு தானாம்.

தற்போது, உலகின் மிகப்பெரிய பணக்காரராக எலான் மஸ்க் திகழ்கின்றார். இவரின் சொத்து மதிப்பு 373.8 பில்லியன் அமெரிக்க டொலராகும். ஆனால் மாலி பேரரசர் மான்சா மூசாவின் ஆட்சிகாலத்தில், அவரது சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிகராக இருந்திருக்கக் கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 

மான்சா மூசாவுக்கு முன்னர் மாலியை ஆண்ட மன்னர் தன்னுடைய மிகப்பெரிய ஆசையான "உலகின் கடைசியில் என்ன இருக்கிறது" என்று அறிந்து கொள்ளும் நோக்கில் மிகப்பெரிய ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தார்.

அதற்கு முன்பு தனது அரச குடும்பத்தில் பிறந்து யாராலும் கவனிக்கப்படாத மான்சா மூசாவையே தற்காலிக அரசனாக அரியணையில் அமரவைத்து பயணித்த அரசன், மீண்டும் நாடு திரும்பவே இல்லையாம். அந்த அரசரை பற்றிய தகவலும் கிடைக்கவில்லையாம்.

அதன் பிறகு மாலிப் பேரரசை மான்சா மூசா 25 வருடங்களாக சீரும், சிறப்புமாக ஆட்சி செய்தார். அவர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது எந்த ஒரு போரிலும் தோற்றதில்லையாம். போரினால் மட்டும் இல்லாமல் வணிக ரீதியிலும் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்கிறார்கள்.

மாலி நாடு கடற்கரையை ஒட்டி இருப்பதால் உப்பு உற்பத்தி செய்து உலகெங்கிலும் அவர் ஏற்றுமதி செய்தார். அதுமட்டும் இல்லாமல் மாலி பேரரசு உட்பட்ட பகுதியில் தங்கம் அதிக அளவு கிடைத்ததால் நிறைய தங்கச்சுரங்கங்களை வெட்ட ஆரம்பித்தார். இதன் காரணமாக 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாலி மிகப்பெரிய வணிக நாடாக உருவெடுத்தது.

மாலி பேரரசர் மான்சா மூசாவின் ஆட்சியின் கீழ் தற்போதைய செனகல், புர்கினா பாசோ, மாலி, நைஜர், நைஜீரியா போன்ற நாடுகள் இருந்தன. இவர் கட்டிய பல மசூதிகள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இன்றளவும் உள்ளன.

இவ்வாறு 25 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்த மூசாவிற்கு வயதாகிக் கொண்டே சென்றதால் இஸ்லாமியர்களின் முக்கிய கடமையான ஹஜ் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தார். கி.பி.1324இல் அதற்கான ஆயத்தப்பணியை மிகப்பெரிய திருவிழாவைப் போல் மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்தார்.

மூசாவின் "ஹஜ்" புனித யாத்திரை சென்று திரும்ப ஒருவருடம் கூட ஆகலாம் என்பதால் வழி நெடுகிலும் கலைப்பாற கலைஞர்கள், சமையற்காரர்கள், மருத்துவர்கள், 80 ஒட்டகங்கள் மற்றும் குதிரையுடன் கூடிய படைவீரர்கள் என மூசாவுடன் 60 ஆயிரம் பேர் மக்காவிற்கு பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.

அந்த பயணத்தின் போது ஒட்டகத்தில் 2000 கிலோ தங்கம் மற்றும் 300 பவுண்ட் சுத்திகரிக்கப்படாத தங்கத்துகள்கள் என மூசாவின் படைவீரர்கள் கிலோ கணக்கில் தங்கத்தையும் சுமந்து சென்றனராம். அவரது புனித பயணத்தில் இடம்பெற்ற முதல் ஒட்டகம் ஒரு இடத்தில் கால்வைத்தால் அந்த படையின் கடைசி ஒட்டகம் அதே இடத்தில் கால்வைக்க கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆனதாம். அவ்வளவு பெரிய ஊர்வலமாக அது இருந்ததாக கூறப்படுகின்றது.

மேலும், மூசா மிகவும் தாராள மனமுடையவர் என்பதால் எகிப்து தலைநகர் கொய்ரோ மட்டும் இல்லாது தான் புனித பயணம் செய்யும் வழிநெடுகிலும் அங்கு உள்ள ஏழை எளிய மக்களுக்கு தான் கொண்டு வந்த தங்கத்தை தானமாக வழங்கிச் சென்றாராம்.

இந்த பயணத்தின் போது சில பள்ளிவாசல்களையும் இவர் கட்டி இருக்கிறார். இவ்வாறு அவரது "ஹஜ்" பயண புனித யாத்திரை வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மாலியிலும், ஆபிரிக்காவிலும் பல பள்ளிகளையும், பல்லாயிரக்கணக்கானோர் படிக்கும் வகையில் பிரம்மாண்டமான நூலகங்களையும் மான்சா மூசா கட்டியுள்ளாராம். இன்றளவும் அந்த பிரமாண்ட நூலகங்கள் வரலாற்று சின்னமாக ஆபிரிக்காவில் திகழ்கின்றன.

இவ்வாறாக 25 ஆண்டு காலம் எந்தவித போரிலும் தோற்காமல், சிறப்பான ஆட்சி செய்த மாலி பேரரசர் மான்சா மூசா 1337ஆம் ஆண்டு இயற்கையாக மரணமடைந்தார்.

அவர் இறந்த பிறகு, அவரது மகன் அரியனையில் ஏறியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு போர்த்துக்கீசர், ஸ்பானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் அந்நாட்டை சூழ்ச்சியால் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மாலியின் ஆட்சி மொழியே ‘ஃபிரென்ச்’ மொழியாக மாறியுள்ளதாம்.

இவ்வாறாக இன்றளவும் வரலாற்றில் மிகப்பெரிய பணக்காரராக மாலி பேரரசர் மான்சா மூசா திகழ்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்