கினிகத்தேனை களவால்தெனிய பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி ஓடையில் குடைசாய்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

களவால்தெனிய சிறிய மின் உற்பத்தி நிலையத்தின் அருகாமையில் கட்டிட வேலைக்காக மணலை ஏற்றிச் சென்ற குறித்த உழவு இயந்திரம் வீதியில் முன்னோக்கி செல்லும் பொழுது கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி இழுத்து சென்றதனால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திலிருந்து சாரதியை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சாரதி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்தவர் களவால்தெனிய சிறிய மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகரான பாணந்துறை பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை சமந்த பெரேரா (44) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.