விஜய் தற்போது அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, சில வெளிநாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லடாக்கில் நடைபெற்று வந்ததை தொடர்ந்து, தற்போது படப்பிடிப்புகளை முழுவதுமாக முடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட உள்ளனர். வருகிற கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். போக்கிரி, ஜில்லா ஆகிய படங்களுக்கு பிறகு விஜய், பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.