வாக்குறுதிகளை நிறைவேற்றும் விடயத்தில் பயங்கரவாத தடைச்சட்ட ஒழிப்பு அரசாங்கத்துக்கு சிறந்த ஒரு பரீட்சை

30 Apr, 2025 | 03:08 PM
image

(எம்.ஏ. சுமந்திரன்) 

குழப்பகரமான இலங்கையின் வரலாற்றில் பல வன்முறைச் சுழற்சிகளில் "பயங்கரம்" என்பது இடையறாத பேசுபொருளாக இருந்து வருகிறது. திரும்பத் திரும்ப பெரும்பான்மையின வாதப் போக்கு ஒன்றை வெளிக்காட்டி வந்திருக்கும் அரசு தன்னால் குடிமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களை ஏற்றுக்கொண்டு ஒருபோதுமே சுயபரிசோதனையைச் செய்ததில்லை என்கிற அதேவேளை அது "பயங்கரம்" என்று தான் கருதுகின்ற எதையும் "எதிர்ப்பதற்கு" அல்லது "நசுக்குவதற்கு" கொடூரமான வழிமுறைகளை பயன்படுத்துவதை பெரும்பாலும் நியாயப்படுத்தியே வந்திருக்கிறது.

இது விடயத்தில் இலங்கையில் தொடர்ச்சியாக கவனத்தைப் பெற்றிருக்கும் ஒரு சட்டம் என்றால் அது ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் 1979ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டமேயாகும் (Prevention of Terrorism Act). அந்த சட்டம் தென்னாபிரிக்காவில் வெள்ளையரின் இன ஒதுக்கல் ஆட்சிக்காலத்தின் சட்டம் மற்றும் ஐரிஷ் தீவிரவாதத்துக்கு எதிரான பிரிட்டிஷ் சட்டங்களின் பாணியில் அமைந்ததுடன் 1978ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதேபோன்ற வேறு இயக்கங்களையும் தடைசெய்வதற்காக  கொண்டுவரப்பட்ட இன்னொரு சட்டத்தை பதிலீடு செய்தது. 

அதன் நோக்கம் தெளிவானது; இலங்கைத் தீவில் தனித்தமிழ் நாடு ஒன்றை உருவாக்குவதில் நாட்டம் கொண்ட தமீழீழ விடுதலைப் புலிகளையும் ஏனைய இயக்கங்களையும் ஒழிப்பதேயாகும். பயங்கரவாத தடைச்சட்டம் ஆரம்பத்தில் மூன்று வருட காலத்துகான ஒரு தற்காலிக ஏற்பாடாகவே கொண்டுவரப்பட்டது. பிறகு 1982ஆம் ஆண்டில் இலங்கையின் சட்டப் புத்தகத்தில் நிரந்தரமானதாக பொறிக்கப்பட்டுவிட்டது.

தண்டனையின்மையுடன் துஷ்பிரயோகம் 

இந்த சட்டத்தில் நீதித்துறையின் மேற்பார்வையின்றி ஆட்களை நீண்டகாலத்துக்கு (Administrative detention) தடுப்புக்காவலில் வைப்பதற்கும் பொலிஸாருக்கு அளிக்கின்ற ஒப்புதல் வாக்குமூலங்களை சாட்சியங்களாக ஏற்றுக்கொள்வதற்கும் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கத் தவறுவதை ஒரு குற்றமாக்குவதற்கும்  ஏற்பாடுகள் இருக்கின்றன. வெளிப்படையான தணடனையின்மையுடன் (Impunity) இந்த ஏற்பாடுகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்பதை சொல்லித்தான் எவரும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று இல்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்கு ஒன்றில், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் பொய்யான அல்லது  புனைந்து  கட்டப்பட்ட சாட்சியங்களை சமர்ப்பித்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் கூட அவர்கள் எந்தவிதமான விளைவுக்கும் முகங்கொடுக்கத் தேவையில்லாத அளவுக்கு இந்த தண்டனையின்மை இருக்கிறது. வழக்குகள் தோல்வியடைகின்றன. ஆனால், சாட்சியங்களை புனைந்து கட்டிய அல்லது அதையும் விட மோசமாக, சித்திரவதையைச் செய்து ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுதந்திரமாகத் திரிகிறார்கள்.

இந்த சட்டத்தின் இன்னொரு விளைவு ஓயாது தொல்லை தரும் ஒரு பாதுகாப்பு அனர்த்தமாகும். "பயங்கரவாத குற்றங்களை தீர்த்துக்கொள்வதற்கு” சுலபமான வழியொன்றை பொலிஸ் அதிகாரிகள் கண்டபோது அவர்கள் உண்மையான குற்றவாளியை கண்டறிய விசாரணையை நடத்தவில்லை. அந்த குற்றச்செயலில் உண்மையில் சம்பந்தப்படாதவர்களிடம் இருந்து கூட ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. உண்மையான குற்றவாளி வெளியில்  இருந்த அதேவேளை அவ்வாறு ஒப்புதல் வாக்குமூலங்களை கொடுத்தவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டார்கள். 

பொலிஸாருக்கு "தகவல் கொடுக்கவில்லை" என்பதற்காக பல அப்பாவிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்ட பல வழக்குகளை நாம் கண்டிருக்கிறோம். அவர்களிடம் இருந்து பலவந்தமாக பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றே போதும். அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

உரிமைகளை பாதுகாப்பதற்காக போராடுகின்ற செயற்பாட்டாளர்கள் பல தசாப்தங்களாக பயங்கரவாத தடைச்சட்டத்தை கடுமையாக எதிர்த்துக் குரல்கொடுத்து வருகிறார்கள். நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பாரதூரமான அச்சுறுத்தலாக அமையும் குற்றச்செயல்களை கையாளுவதற்கு சாதாரண சட்டத்தில் ஏற்பாடுகள் இருக்கின்றன என்பதை சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாகவும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சுதந்திரங்கள் மீதான அதன் தாக்கங்கள் தொடர்பாகவும் ஜனநாயகத்தை மதிக்கும் பல நாடுகள் விசனத்தை வெளிக் காட்டியிருக்கின்றன. உறுதியளித்ததன் பிரகாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை இரத்துச் செய்யாததை காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2010ஆம் ஆண்டில் இடைநிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக உலகின் வேறு நாடுகளிலும் கொடூரமான சட்டங்கள் பயன்படுத்தப்படுவதில் ஒரு பொதுவான அம்சத்தை அவதானிக்க முடியும். இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டமும் அரசாங்கத்தின் எதிரிகள், அதிருப்தியாளர்கள் மற்றும் சிறுபான்மை இனக்குழுக்களுக்கு எதிரான தெரிந்தெடுத்த முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல  மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். போரின்போது தமிழ் மக்களை அரசாங்கம் பட்டினிபோட்டதாக குற்றஞ்சாட்டி பிரபல்யமான பத்திரிகையாளரான ஜே.எஸ். திஸ்ஸநாயகம் பெரிதாக அறியப்படாத சஞ்சிகை ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியதற்காக அவருக்கு 2009ஆம் ஆண்டில் 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. (கடுமையான சர்வதேச நெருக்குதல்களை தொடர்ந்து அவர் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலையானார்) திஸ்ஸநாயகத்தின் கட்டுரை இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதே அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.

சிறிய திருத்தங்களுடன் தொடருகிறது

கொழும்பில் அடுத்தடுத்து பதவியில் இருந்த அரசாங்கங்கள், குறைந்தபட்சம் 2009ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த பின்னராவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதாக உறுதியளித்தன. ஆனால், சில மேலோட்டமான திருத்தங்களுடன் அந்த சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாடு மீது இடைக்கால நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே அதன் கீழ் கைதுகள் இடம்பெற்றன.

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்  ஆளும் தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் பிரசாரங்களின்போதும்  அதிகாரத்துக்கு வந்த பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதாக திரும்பத் திரும்ப உறுதியளித்தது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன  (ஜே.வி.பி.) அதன் இரண்டாவது ஆயுதக்கிளர்ச்சிக் காலத்தில்  (1987 - 1990 ) பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பெருமளவுக்கு பாதிக்கப்பட்ட காரணத்தால், அந்த சட்டத்தை இரத்துச் செய்வது என்ற அதன் உறுதிமொழி பெரும்பாலும் நிறைவேற்றப்படும் என்று நம்பப்பட்டது. 

தமிழ்ப் போராளிகளை ஒடுக்குவதற்காக முதலில் அந்த சட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும், சிங்களவர்களுக்கு எதிராகவும் குறிப்பாக, ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு எதிராக அதைப் பயன்படுத்துவதற்கு அரசு தயக்கம் காட்டவில்லை. மிகவும் அண்மைக்காலத்தில் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பிறகு முஸ்லிம்களை இலக்குவைக்கவும் அது பயன்படுத்தப்பட்டது.

இரத்து செய்யக் கோரும் இயக்கம் 

2021ஆம் ஆண்டில் இந்த கட்டுரையாளர் பாராளுமன்றத்தில் உள்ள சகாக்களுடனும்  உரிமைகள் செயற்பாட்டாளர்களுடனும் சேர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடு  தழுவியதாக கையெழுத்து இயக்கம் ஒன்றை முன்னெடுத்தார். அந்த கோரிக்கைக்கு சகல இனத்துவ சமூகங்களிடம் இருந்தும் மக்களின் பேராதரவு கிடைத்தது பெரும் நம்பிக்கையை தந்தது. அந்த இயக்கத்தில் சகல மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் கூட ஆர்வத்துடன் பங்கேற்றனர். என்றாலும், அந்த சடடத்தை இரத்துச் செய்கின்ற பொறுப்பு அதன் கைகளில் வந்து வீழ்ந்தபோது தேசிய மக்கள் சக்தியும் தயக்கம் காட்டுவதைப் போன்றே தெரிகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீண்டகாலமாக (துஷ்) பிரயோகம் செய்து பழக்கப்பட்டுவிட்ட பாதுகாப்புத் துறை அதை கைவிடுவதற்கு விரும்பாமல் இருப்பது அதற்கு பெரும்பாலும் காரணமாக இருக்கலாம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டதற்கு புறம்பாக, அது விடயத்தில் முக்கியமான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் இன்னமும் எடுக்கவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றுமுழுதாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அதை இன்னொரு "மனிதாபிமானம் வாய்ந்த சட்டத்தினால்" பதிலீடு செய்வது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும்  பங்கேற்பதற்கு, எதிர்க்கட்சியில் இருந்தபோது தேசிய மக்கள் சக்தி உறுதியாக மறுத்தது. ஆனால், இப்போது அதிகாரத்தில் இருந்துகொண்டு அது பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கு வரையப்பட வேண்டிய இன்னொரு சட்டம் குறித்து பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 

அந்த பதிலீட்டுக்காக அடுத்தடுத்து முன்னைய இரு அரசாங்கங்களினால் இரு வரைவுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அந்த இரு வரைவுகளும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் மிகவும் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகின. அந்த வரைவுகள் உண்மையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மோசமானவையாக இருந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமின்றி இல்லாமல் செய்யப்பட வேண்டிய பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக வழங்கிய அதன் சொந்த வாக்குறுதி விடயத்தில் தேசிய மக்கள் சக்தி எவ்வாறு நகர்வுகளை முன்னெடுக்கிறது என்பதை நாம் அவதானித்துக்கொண்டிருக்கிறோம். 

தேர்தல் காலத்தில் மக்களுக்கு அள்ளி வீசிய வாக்குறுதிகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா, இல்லையா என்பதை பார்ப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்ட இரத்து விவகாரம் ஒரு சிறந்த பரீட்சையாக இருக்க முடியும். 

(தி இந்து, 30, ஏப்ரல் 2025)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த தேர்தல்?

2025-06-16 17:47:31
news-image

இலங்கை கடல் பரப்பில் கரையொதுங்குவது என்ன?...

2025-06-16 16:29:56
news-image

முட்டாள்களாக்கப்படும் தமிழ் மக்கள்

2025-06-16 10:15:35
news-image

ஜனாதிபதியின்  கையொப்பமில்லாது விடுதலையான 68 கைதிகளும்...

2025-06-15 15:56:50
news-image

அரசியலமைப்புப் பேரவையில் மீளப்பெறப்பட்ட அநுரவின் பரிந்துரை

2025-06-15 18:29:30
news-image

இலங்கையை கட்டிப் போட்ட இந்தியா

2025-06-15 16:07:02
news-image

மக்கள் காங்கிரஸ், பிரமுகர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டதா?

2025-06-15 16:04:36
news-image

இராணுவ மயமாக்கப்படும் பொலிஸ்

2025-06-15 15:14:32
news-image

நிழல் அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள்

2025-06-15 15:50:31
news-image

ஜி7 எனும் சர்வதேச கூட்டு

2025-06-15 15:50:03
news-image

நீண்டகால திட்டமிடலை வேண்டிநிற்கும் முஸ்லிம்கள்

2025-06-15 14:16:55
news-image

இஸ்ரேலின் போர் வெறி : வலதுசாரி...

2025-06-15 14:16:24