ஒரு சில ஊடகங்களே எனக்கும்  மலிங்கவுக்குமிடையில் முரண்பாட்டை தோற்றுவித்தன என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்   செய்தியாளர் மாநாட்டில்  கலந்து கொண்ட அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் எந்தவொரு  இடத்திலும் கிரிக்கெட் வீரர்  லசித் மாலிங்கவை பெயர் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை.அதுபோலவே அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் மீதும் நான் குறை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக  விளையாட்டு வீரர்களுக்கு உடற்தகுதி அவசியம் என்று வலியுறுத்தி கூறினேன். அதைவிடத்து யாரையும் குறிப்பிட்டு எதுவும் நான் தெரிவிக்கவில்லை. ஏதாவது ஒரு திட்டத்தை முன்னெடுக்கும்  போது சில ஊடகங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையினால் குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாமல் போகின்றது. 

எமது நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு திறமை உள்ளது.  ஆனால் உடற்தகுதியைப் பேணாமல் திறமையை வைத்துக்கொண்டிருப்பதில்  அர்த்தமில்லை.  எவ்வாறெனினும்  எனது கருத்து தொடர்பில்  லசித் மலிங்க ஒரு ஊடகத்திற்கு  தெரிவித்த    விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.  அதுதொடர்பில் நான் கவலையடைகின்றேன். ஒரு வீரருக்கு அவ்வாறு உரையாற்ற முடியாது.  

வீரர்களுக்கு    கிரிக்கெட் நிறுவனத்துடன் உடன்படிக்கைகள் உள்ளன. அதன்படியே நடந்துகொள்ளவேண்டும். அதன்படி   அவரின் கூற்றுக்குறித்து  விசாரிக்க குழு அமைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த குழுவானது தற்போது தீர்ப்பை அறிவித்திருக்கிறது. 

இதில் அவருக்கு போட்டி தடை வருவதற்கான சாத்தியம் இருந்ததாக அறியமுடிகின்றது. ஆனால்  அதற்கு நான் இடமளிக்கமாட்டேன்.  காரணம் மாலிங்க போன்ற ஒரு வீரர் எமது அணிக்கு கட்டாயம் தேவை. அவர்  நிச்சயம் அணியில் விளையாடவேண்டும்.  அவர்  அணியில் இடம்பெறாவிடின்  இறுதியில் அனைவரும் என்னை  திட்டுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.  இந்த உடற்தகுதி என்பது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல அனைத்து விளையாட்டுக்களுக்கும் பொருந்தும்.