நேர்கண்டவர்கள்: ரொபட் அன்டனி, இராஜதுரை ஹஷான்
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மக்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான பிரதிநிதிகளை மக்கள் நிச்சயமாக தெரிவு செய்ய வேண்டும். மக்கள் இந்த தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.
வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே சிவசுப்பிரமணியம் அச்சுதன் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள், வாக்காளர்களின் எண்ணிக்கை, எவ்வாறு வாக்களிப்பது, எவ்வாறு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள், கலப்பு தேர்தல் முறை எவ்வாறு நடைபெறும் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் அச்சுதன் விளக்கமளித்தார்.
‘‘தேர்தல் என்பது ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒரு விடயமாகும். எனவே சகலரும் இந்த தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பதற்கு தேவையான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்’’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த தேர்தலில் விருப்பு வாக்கு முறைமை இல்லை என்பதால் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். இது தொடர்பாக வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் அச்சுதன் சுட்டிக்காட்டினார்.
‘‘உள்ளூராட்சித் தேர்தல் முறைமையில் விருப்பு வாக்குகள் இல்லை. வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயரும் சின்னமும் இருக்கும். சுயேச்சைக்குழுக்களின் இலக்கங்கள் இருக்கும்.
எனவே தான் விரும்புகின்ற கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுக்களுக்கு மக்கள் வாக்களிக்க முடியும். அந்த கட்சியில் அந்த சுயேச்சைக் குழுவில் போட்டியிட்ட நபர் அதிகமான வாக்குகளை பெற்றால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் வாக்களிப்பு முடிந்ததும் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார் என்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் கேசரியிடம் சுட்டிக்காட்டினார்.
அவருடனான செவ்வியின் முழுமையான விபரம் வருமாறு:
கேள்வி: உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு ஒருவாரம் மாத்திரமே உள்ளது. தேர்தல் பணிகள் எவ்வாறு உள்ளன?
பதில்: 339 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளுக்காக வாக்கெடுப்பை 2025.05.06ஆம் திகதியன்று நடாத்துவதற்கு ஆணைக்குழு தீர்மானித்தது. நீதிமன்ற நடவடிக்கைகளினால் ஏற்பட்ட தாமதத்துக்கு மத்தியில் சகல தரப்பினரது அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளினால் குறித்த திகதியில் 339 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கான சகல பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தபால்மூல வாக்கெடுப்பு நடைபெற்றாலே தேர்தல் நிறைவடைந்ததாக கருதப்படும். எனவே சகல பணிகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.
கேள்வி: தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ள அரச உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்களிப்பு மத்திய நிலையங்கள் எத்தனை?
பதில்: இம்முறை சுமார் 6 இலட்சத்து 48 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தபால்மூல வாக்களிப்பின் போது இம்முறை விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது கண்டி ஸ்ரீ தலதா வழிபாட்டு யாத்திரையில் பாதுகாப்பு பணிகளின் நிமித்தம் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உட்பட 8 ஆயிரம் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்காக கண்டி மகளிர் உயர் கல்லூரியில் விசேட வாக்களிப்பு மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கேள்வி: இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் வாக்களிப்பு மத்திய நிலையங்கள் எத்தனை?
பதில்: 339 உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகளுக்கான தேர்தல் 2024 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பு மற்றும் 3 ஆம் இணைப்பு பட்டியல் பிரகாரம் நடத்தப்படவுள்ளது. இதற்கமைய இம்முறை 01 கோடியே 17 இலட்சத்து 56 ஆயிரம் பேர் வரையில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வழமைபோன்று நாடளாவிய ரீதியில் 13,700 வரையிலான வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஊடாக வாக்கெடுப்பு நடத்தப்படும்.
கேள்வி: புதிய கலப்பு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறைமை 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கமைய 2018ஆம் ஆண்டு முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் முறைமை எவ்வாறானது?
பதில்: இலங்கையின் தேர்தல் வரலாற்று பின்னணியை நோக்குவோமாயின், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரான காலப்பகுதிகளில் அதிக பெரும்பான்மையான வாக்குகளை பெறுபவர்களை தெரிவு செய்யும் முறைமை காணப்பட்டது. அதனை தொகுதிவாரி முறைமை என்பார்கள்.
பெரும்பாலான நாடுகளில் தொகுதிவாரி முறைமையும், விகிதாசார முறைமையும் காணப்படுகின்றன. இலங்கையில் விகிதாசார முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் தொகுதிவாரியான முறைமை மாற்றம் பெற்று, மாவட்ட ரீதியாக ஒரு தேர்தல் நடைபெறுகின்ற போது அல்லது உள்ளூராட்சிமன்ற ரீதியாக தேர்தல் நடைபெறுகின்ற போது ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக்கொண்ட வாக்குகளின் வீதத்துக்கு அமைய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
2017ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு கலப்பு தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது வட்டார ரீதியாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அதேவேளை கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையின் வீதத்துக்கு அமைய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். வட்டார முறைமையின் பிரகாரம் 60 சதவீதமான உறுப்பினர்களும், 40 சதவீதமானோர் விகிதாசார முறைமையிலும் தெரிவு செய்யப்படுகின்றனர்.
கேள்வி: உதாரணமாக கொழும்பு மாநகர சபையை ஆராய்வோமாயின், 110 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதில் எவ்வாறு இந்த முறைமை அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்?
பதில்: கொழும்பு மாநகர சபையில் 47 வட்டாரங்கள் உள்ளன. இந்த வட்டாரங்களில் இருந்து 66 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். (சில வட்டாரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.) 44 உறுப்பினர்கள் விகிதாசார முறைமையில் தெரிவு செய்யப்படுவார்கள்.
வாக்காளர்கள் வட்டார முறைமையில் வாக்களிப்பார்கள். கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் மற்றும் சதவீதத்துக்கு அமைவாக மதிப்பீடுகள் செய்யப்பட்டு விகிதாசார ரீதியாக உறுப்பினர்கள் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கென எம்மிடம் ஒரு முறை இருக்கிறது. அது தொடர்பாக கட்சிகள், வேட்பாளர்கள், சுயேச்சை குழுக்களுக்கு தெளிவு உள்ளது.
கேள்வி: இந்த தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது?
பதில்: உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்குச்சீட்டில் சிறிய மாற்றத்தை அவதானிக்க முடியும். இங்கு விருப்பு வாக்கு முறைமை என்பதொன்று இல்லை.
ஆகவே வாக்குச்சீட்டில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கும். கட்சிகளின் பெயர்கள் சிங்கள அகரவரிசை முறைமையில் காணப்படும். இதற்கு அருகில் சின்னங்களும் அதன் அருகில் வாக்களிக்க இடமும் அளிக்கப்பட்டிருக்கும்.
வாக்குச்சீட்டில் சுயேச்சைக் குழுக்கள் 'எண்' அடிப்படையில் காணப்படும். வாக்காளர்கள் தாங்கள் விரும்புகின்ற கட்சிக்கோ அல்லது சுயேச்சைக் குழுவுக்கோ வாக்களிக்க முடியும். ஒரு வாக்கினை மாத்திரம் அளிக்க முடியும். வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படமாட்டாது.
வட்டாரத்தில் ஏதேனும் கட்சி அல்லது சுயேச்சைக் குழு அதிகளவான வாக்குகளை பெற்று வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சி அல்லது சுயேச்சை குழு சார்பில் குறித்த வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
அதன் பின்னரே விகிதாசார முறைமையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்கு வீதத்துக்கு அமைய ஆசனங்கள் ஒதுக்கப்படும்.
கேள்வி: 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் எவ்வாறு உறுதி செய்யப்படும்?
பதில்: இந்த தேர்தலில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் காணப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக கொழும்பு மாநகர சபையை எடுத்துக்கொண்டால் இந்த வட்டாரத்தில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள் என்பது கவனத்திற்கொள்ளப்படும். இவர்களின் எண்ணிக்கையை நீக்கி விட்டு, மிகுதியாக அங்கு எத்தனை பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும்.
ஒரு கட்சி 3க்கும் குறைவான உறுப்பினர்களுடன் வெற்றி பெற்றிருக்குமாயின், அக்கட்சியிடம் பெண் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு குறித்து அறிவுறுத்த முடியாது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடியளவான உறுப்பினர்களை பெற்று வெற்றி பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களிடம் பெண் பிரதிநிதித்துவம் குறித்து ஆணைக்குழு கட்டாயமாக அறிவுறுத்தும். பெண் பிரதிநிதித்துவ முறைமைக்கு பிரத்தியேகமான கணிப்பீட்டு முறைமை உள்ளது.
கேள்வி: தேர்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களில் எப்படி ஆட்சியமைக்கப்படும்?
பதில்: உள்ளூராட்சிமன்றத்தில் 50 வீதத்துக்கும் மேலான உறுப்பினர்கள் வெற்றி பெறுகின்ற கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் விடுக்கும். அதாவது சபையின் முதல்வர் மற்றும் துணை முதல்வரை நியமிக்குமாறு அறிவிப்போம்.
அந்தக் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் கீழ் அந்த ஆட்சி நடைபெறும். இங்கு முக்கியமான விடயம் ஒன்றைப் பார்க்க வேண்டும். மாநகர சபை என்றால் முதல்வர், துணை முதல்வர். நகர சபையாக இருந்தால், தலைவர் உபதலைவர். பிரதேச சபையாக இருந்தால் தவிசாளர், உப தவிசாளர். இந்த நியமனங்களை செய்து எங்களுக்கு அறிவிக்குமாறு இக்கட்சியின் செயலாளருக்கு அறிவிப்போம்.
உள்ளூராட்சி மன்றங்களைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை. தேர்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களில் அரசியல் இருக்க முடியாது என்பதுதான் எண்ணக்கரு.
எனவே அங்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி அங்கு இருக்காது. சகல உறுப்பினர்களும் சமமாக ஒன்றிணைந்து அந்த உள்ளூராட்சி சபையை நடத்துவார்கள். இங்கு எந்தவொரு கட்சியோ அல்லது சுயேட்சைக் குழுவோ 50 வீத உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ளாவிடின் அது தேர்தல் ஆணைக்குழுவுக்கு அப்பாற்பட்டதாக மாறி விடும். அப்போது உள்ளூராட்சி ஆணையாளர் ஒரு குறித்த தினத்தில் சகல கட்சிகளையும் அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தி அங்கே தலைவரையும் உபதலைவரையும் தெரிவு செய்வார்.
கேள்வி: ஒருவேளை பல கட்சிகள் இணைந்து அல்லது சுயேச்சைக் குழுக்கள் இணைந்து ஆட்சி அமைக்க முடியுமா?
பதில்: ஏதாவது ஒரு கட்சி அல்லது ஒரு சுயேச்சைக் குழு 50 வீதத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றால் மட்டுமே அங்கு தேர்தல் ஆணைக்குழு தலையிடும். அதனை ஏற்றுக்கொள்வோம். அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் அது உள்ளூராட்சி ஆணையாளருக்கு போய் விடும்.
கேள்வி: தேர்தல் ஆணைக்குழு என்ற வகையில் வாக்காளர்களுக்கு உங்கள் செய்தி என்ன?
பதில்: கெளரவமான அரசியல் கலாசாரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் வன்முறையின்றி இலங்கைக்கு நற்பெயரை தேடிக்கொடுக்கும் வகையில் இடம்பெற்றன.
அதேபோன்று இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலும் கெரளவமாகவும் அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். இங்கு இரண்டு விடயங்களை முக்கியமாக பார்க்கிறோம். முதலாவதாக கட்டாயமாக வாக்காளர்கள் வாக்களிக்கவேண்டும். இந்தத் தேர்தலில் மக்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருப்பதாக ஊடகங்களில் பார்க்கிறோம்.
அப்படியில்லை. நான், கிராமத்தின் ஒரு வேலை நடக்கவில்லை என்று கூறுவதற்கு முன்பதாக வாக்களித்திருக்க வேண்டும். வாக்களித்து சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யாமல் எனக்கு சேவை கிடைக்கவில்லை என்று நான் எப்படி குறை கூற முடியும்? அந்தத் தார்மீகப் பொறுப்பு எனக்கு இல்லை.
காரணம் நான் வாக்களிக்கவில்லை. நான் வாக்களித்து விட்டே கேள்வி கேட்க வேண்டும். கட்டாயமாக வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களியுங்கள் என்று வாக்காளர்களை தேர்தல் ஆணைக்குழு விநயமாகக் கோருகின்றது.
வாக்களிக்கும் போது உங்கள் உங்கள் பகுதிகளில் சரியாக சேவையாற்றுகின்றவர்கள், நடைமுறைகளைப் பின்பற்றுகின்றவர்கள், கெளரவமான, கண்ணியமான சட்டத்தை மதித்து செயற்படுகின்றவர்களை தெரிவு செய்யுங்கள். அதன்மூலமாக கெளரவமான உள்ளூராட்சி மன்றத்தையும் அரசியல் கலாசாரத்தையும் உருவாக்குவதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இதையே வாக்காளர்களிடம் ஆணைக்குழு கோருகிறது.
உள்ளூராட்சிமன்றங்கள் என்பவை ஜனநாயகத்தின் முன்பள்ளி என்று கூறப்படுகிறது. இங்கு முதலாவதாக தெரிவு செய்யப்படுகிறவர்கள் பின்னர் மாகாண சபை, பாராளுமன்ற சபை என்று பிரவேசிப்பார்கள். எனவே அவர்கள் படிப்படியாக வளர்ந்து செல்வதற்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கேள்வி: மக்களின் ஆர்வம் தேர்தலில் எப்படி இருக்கிறது?
பதில்: இதுபோன்ற விடயங்கள் சில ஊடகங்களில் வருவதையும் காண்கிறோம். ஆனால், மக்களுக்கு வாக்களிப்பில் பாரிய ஆர்வம் இருக்கிறது. மக்கள் தமது உள்ளூர் பிரதேசங்களை ஆளுவதற்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யவுள்ளார்கள். அதில் அவர்கள் ஆர்வமாக செயற்படுவார்கள் என்று நாம் நம்புகிறோம்.
கேள்வி: அரசியல்வாதிகளிடம் உங்கள் கோரிக்கை என்ன?
பதில்: அரசியல் கட்சிகள், ஆதரவாளர்கள், வேட்பாளர்கள் ஆகியோரிடம் சட்டத்தை மதித்து செயற்படுமாறு கோரிக்கை விடுக்கிறோம். சட்ட திட்டங்கள் விதிமுறைகள் காணப்படுகின்றன. எனவே அமைதியான சுதந்திரமான நீதியான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கேள்வி: 06ஆம் திகதி காலை வாக்களிக்க செல்கின்றவர்கள் எவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்?
பதில்: உங்களுக்கு தபாலில் வந்து சேருகின்ற வாக்காளர் அட்டைகளை எடுத்துச் செல்லுங்கள். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் தற்போது இடம்பெறுகிறது. அது கிடைக்காதவர்கள் அருகில் இருக்கின்ற தபால் நிலையத்துக்கு சென்று உங்களது பெயரை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். அது கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறப்படவில்லை. ஆனால் அது எடுத்துச் செல்வது வாக்களிப்பதற்கு இலகுவான நிலையில் ஏற்படுத்திக்கொடுக்கும். தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில்கூட வாக்காளர் அட்டையைப் பெற முடியும்.
கேள்வி: எந்தெந்த அடையாள அட்டைகளை கொண்டு செல்ல வேண்டும்?
பதில்: அடையாள அட்டையின்றி யாருக்கும் வாக்களிக்க முடியாது. தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, மதத் தலைவர்களுக்கான அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை என்பனவற்றைக் கொண்டு செல்லலாம்.
இவற்றுக்கு மேலதிகமாக வலிமை இழப்புக்கு உட்பட்டவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அடையாள அட்டை வழங்கும். அதனையும் கொண்டு செல்லலாம். அத்துடன் இவை எதுவும் இல்லாதவர்கள் உடனடியாக உங்கள் கிராம உத்தியோகத்தரை நாடி தேர்தல் ஆணைக்குழு வழங்குகின்ற தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுங்கள்.
வலது குறைந்த பிரஜைகளுக்கு ஆட்பதிவுத் திணைக்களம் அடையாள அட்டைக்கு பதிலாக ஒரு A4 தாளில் படத்தை உறுதிப்படுத்தி ஆவணம் ஒன்றை வழங்குகின்றது. அதனையும் எடுத்துச் செல்லலாம். மேலும் சாரதி அனுமதிப்பத்திரம் கிடைக்கும் முன்பதாக தற்காலிகமாக ஒரு தாளில் சான்றுபடுத்தப்பட்டு வழங்கப்படும் அதனையும் பயன்படுத்தலாம்.
கேள்வி: வாக்காளர்களுக்கு சகல ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராக இருக்கிறதா?
பதில்: நாங்கள் தற்போதே செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.
கேள்வி: தேர்தல் கண்காணிப்புக்கள் எப்படி நடைபெறும்?
பதில்: உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வர மாட்டார்கள். உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இதில் பெவ்ரல், கபே, சி.எம்.இ.வி. உள்ளிட்ட சில அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்காளர் நிலையங்களிலும் கண்காணிப்பு செய்வார்கள். ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு வகையறாக்களின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி: வாக்கு எண்ணும் பணிகள் எப்படி நடைபெறும்?
பதில்: ஏனைய தேர்தல்களில் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு முடிந்ததும் வாக்குச் சீட்டுகள் வாக்கு எண்ணும் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் இந்தத் தேர்தலில் குறித்து வட்டாரத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்படும்.
ஒரு வட்டாரத்துக்கு ஒரு வாக்களிப்பு நிலையம் மட்டும் இருந்தால் அங்கு வாக்குகள் எண்ணப்படும். ஒரு வட்டாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் இருந்தால் ஒரு இடத்துக்கு கொண்டு வரப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். அங்கேயே வெற்றி பெற்றவர்கள் யார் என்பதை அறிவிப்போம்.
அதன் பின்னர் விகிதாசார உறுப்பினர்கள் தெரிவுகள் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும். அதாவது வட்டாரங்களில் வாக்களிப்பு செய்யப்பட்ட பதியப்பட்ட படிவங்கள் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
கேள்வி: தேர்தலின் முடிவுகள் எப்படி வரும்?
பதில்: தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடிய ஒரே ஒரு அதிகாரம் பெற்ற நிறுவனம் தேர்தல் ஆணைக்குழுதான். அதன் அறிவிப்பே இறுதியானது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM