முதலாவது இளையோர் ஒருநாள் போட்டியில் ஆகாஷ் 5 விக்கெட் குவியல்; பங்களாதேஷை வென்றது இலங்கை

26 Apr, 2025 | 09:51 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் நடப்பு ஆசிய இளையோர் சம்பியன் பங்களாதேஷுக்கும் இடையில் சிசிசி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (25) நடைபெற்ற முதலாவது இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 98 ஓட்டங்களால் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி அமோக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 6 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை 1 - 0 என முன்னிலை அடைந்துள்ளது.

பருத்தித்துறை ஹாட்லி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் தனது அறிமுக இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து ஆட்டநாயகனானார்.

17 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்றபோதும் தனது அறிமுகப் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்திருந்தார்.

இதற்கு அமைய இரண்டு வயது பிரிவுகளில் அறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஆகாஷ் படைத்தார்..

இலங்கை இளையோர் அணியின் இந்த வெற்றியில் ஆகாஷைவிட மஹநாம வீரர் சாமிக்க ஹீனட்டிகல, கண்டி கிங்ஸ்வூட் வீரர் கவிஜ கமகே, குருநாகல் புனித சூசையப்பர் வீரர் சேனுஜ வேக்குனாகொட ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், யாழ். சென். ஜோன்ஸ் வீரர் குகதாஸ் மாதுளன், ஆனந்த வீரர் கித்ம விதானபத்திரன ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சகள் என்பனவும் முக்கிய பங்காற்றின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.

30ஆவது ஓவரில் இலங்கை இளையோர் அணியின் 6ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 114 ஓட்டங்களாக இருந்ததுடன் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

முன்வரிசையில் சேனுஜ வேக்குனாகொட மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

எனினும் சாமிக்க ஹீனட்டிகல, கவிஜ கமகே ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 127 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர்.

ஹீனட்டிகல 72 ஓட்டங்களுடனும் கமகே 60 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ரிஸான் ஹொசன் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இக்பால் ஹொசன் எமொன் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 33.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம்  பெற்று  தோல்வி அடைந்தது.

17ஆவது ஓவரில் பங்களாதேஷ் ஒரு விக்கெட்டை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.

ஆனால், சுழல்பந்துவீச்சாளர்  விக்னேஸ்வரன்   ஆகாஷ் பந்துவீச ஆரம்பித்ததும் பங்களாதேஷின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.  பங்களாதேஷின் கடைசி 9 விக்கெட்கள் 69 ஓட்டங்களுக்கு சரிந்தன. இதில் 5 விக்கெட்களை ஆகாஷ் கைப்பற்றினார்.

பங்களாதேஷ் இளையோர் அணி சார்பாக கலாம் சித்திக்கி 46 ஓட்டங்களையும் அணித் தலைவர் அஸிஸுல் ஹக்கிம் 24 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.

பந்துவீச்சில் விக்னேஸ்வரன் ஆகாஷ் 9 ஓவர்களில் 35 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அவரை விட கித் விதானபத்திரண 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குகதாஸ் மாதுளன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: விக்னேஸ்வரன் ஆகாஷ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீ லயன்ஸ் சர்வதேச வலைபந்தாட்ட லீக்...

2025-05-16 02:10:06
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2025-05-16 02:01:26
news-image

ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-05-16 01:58:43
news-image

ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி அதிசிறந்த வீரர்...

2025-05-15 18:59:49
news-image

ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப்...

2025-05-15 16:14:14
news-image

ஆசிய 22இன் கீழ் மற்றும் இளையோர்...

2025-05-14 19:16:13
news-image

ஆரம்ப வீரருகக்காக அலைமோதும் அவுஸ்திரேலியா; 12...

2025-05-14 14:49:52
news-image

தடையை புறந்தள்ளி வைத்துவிட்டு WTC இறுதிப்...

2025-05-14 13:40:17
news-image

இறக்குவானை பரி.யோவான் தமிழ் கல்லூரி பழைய...

2025-05-14 12:21:00
news-image

ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-05-14 11:40:36
news-image

இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் மே 17 தொடரவுள்ளது

2025-05-13 02:00:13
news-image

ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-05-12 23:05:11