சுமோ - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

26 Apr, 2025 | 03:39 PM
image

தயாரிப்பு : வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்

நடிகர்கள் : சிவா, யோஷினோரா தாஷீரோ, விடிவி கணேஷ், பிரியா ஆனந்த், யோகி பாபு மற்றும் பலர்.

இயக்கம் : எஸ் பி ஹோசிமின்

மதிப்பீடு ‌: 2 / 5

முன்னணி திரையுலக வணிகர்களால் வணிகத்திற்கு எடுத்துக் கொள்ளாத திரைப்படங்களில் ஒன்று ' சுமோ' . அண்மையில் தூசு தட்டப்பட்டு வெளியான 'மத கஜ ராஜா' படத்தின் வசூல் வெற்றிக்குப் பிறகு.. 'சுமோ' படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமே கடினமாக முயற்சி செய்து சுமோ படத்தை வெளியிட்டிருக்கிறது. திரையுலக வணிகர்களின் அவதானம் துல்லியமாக இருந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

சென்னையின் புறநகர் பகுதியில் உணவகம் ஒன்றை நடத்துகிறார் வி டி வி கணேஷ். இவரிடம் சிவா ஊழியராக பணியாற்றுகிறார். சிவாவிற்கு ஸர்ஃபிங் எனப்படும் கடலலை சறுக்கு  எனும் சாகச விளையாட்டை விளையாடும் வழக்கமும் உண்டு. இது போல் ஒரு முறை கடலலை சறுக்கு விளையாடும் போது, கடற்கரையில் பேச்சு மூச்சு இல்லாமல் ‌வெளிநாட்டினர் ஒருவர் கிடப்பதை காண்கிறார். அவர் உயிரிழக்கவில்லை என தெரிந்ததும் முதலிதவி செய்து அவரது உயிரைக் காப்பாற்றுகிறார். தன் உயிரை காப்பாற்றியதால் அந்த வெளிநாட்டினர் சிவாவை கடவுளாக பார்க்கத் தொடங்குகிறார்.

இந்தத் தருணத்தில் கடற்கரையில் கிடந்த வெளிநாட்டினர் ஜப்பான் நாட்டை சார்ந்தவர் என்பது அங்குள்ள பிரசித்தி பெற்ற சுமோ எனும் மல்யுத்த விளையாட்டு வீரர் என்பதும் தெரிய வருகிறது. அதன் பிறகு அவரை ஜப்பானுக்கு அழைத்துச் சென்று விசாரித்து ஒப்படைக்க செல்கிறார். அதன் பிறகு தாஷியோரோவை பற்றிய உண்மை தெரிய வந்ததும் , அவரை சுமோ போட்டியில் பங்குபெற்ற செய்கிறார் சிவா. அந்த போட்டியில் யோசினோரா வென்றாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

இந்திய -ஜப்பானிய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கதைக் கள பின்னணி சுவராசியமானதாக இருக்கிறது. ஆனால் கதையை காட்சி வழியாக விவரிக்கும் போது ரசிகர்கள் எதிர்பார்க்கும் காட்சி எதிர்பார்த்த வகையில் ஆனால் குறைந்த தரத்தில் திரையில் தெரியும் போது எரிச்சல் தான் கூடுதலாகிறது.

நகைச்சுவை என்ற பெயரில் இவர்கள் செய்வதெல்லாம் சிரிப்புக்கு பதிலாக கண்ணீர் தான் வருகிறது. கதையின் முக்கியமான முன்னணி கதாபாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்படாததால் பார்வையாளர்களுக்கு சோர்வும், அயர்ச்சியும் ஏற்படுகிறது.

அகில உலக சுப்பர் ஸ்டார் சிவா தன் வழக்கமான பாணியில் வருகிறார். பேசுகிறார். செல்கிறார். பிரியா ஆனந்த் நாயகியாக வருகிறார். செல்கிறார். யோகி பாபு வருகிறார். செல்கிறார்.

இயக்குநர் குழப்பத்தில் இருந்திருப்பதால்  ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும் தெளிவாக பணியாற்றவில்லை. ஆனால் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா கடுமையாக உழைத்து படத்தை ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறார்.

இதற்காக கடந்த கால திரையுலக வணிகர்களின் அவதானம் சரியே என தோன்றுகிறது.

சுமோ - வாய்சொல்லில் வீரனடி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right