(நெவில் அன்தனி)
பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (24) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 42ஆவது போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை பரபரப்பான முறையில் 11 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்ளூரு வெற்றிகொண்டது.
விராத் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக குவித்த அரைச் சதங்கள், கடைசிக் கட்டத்தில் ஜொஷ் ஹேஸ்ல்வூட், யாஷ் தயாள் ஆகிய இருவரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பவற்றின் மூலம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றிபெற்றது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைக் குவித்தது.
பில் சோல்ட் (26), விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 40 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
அதன் பின்னர் 2ஆவது விக்கெட்டில் தேவ்தத் படிக்கல்லுடன் மேலும் 95 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் விராத் கோஹ்லி ஆட்டம் இழந்தார்.
42 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களைக் குவித்தார்.
மொத்த எண்ணிக்கை 161 ஓட்டங்களாக இருந்தபோது தேவ்தத் படிக்கல் 50 ஓட்டங்களுடன் வெளியேறினார். 27 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களை விளாசினார்.
அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் ரஜாத் பட்டிடார் ஒரு ஓட்டத்தை மட்டும் பெற்று நடையைக் கட்டினார்.
டிம் டேவிட் (23), ஜிட்டேஷ் ஷர்மா (20 ஆ.இ.) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
பந்துவீச்சில் சந்தீப் ஷர்மா 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
206 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
யஷஸ்வி ஜய்ஸ்வால், 14 வயதுடைய வைபவ் சூரியவன்ஷி ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
வைபவ் சூரியவன்ஷி 2 சிக்ஸ்களுடன் 16 ஓட்டங்களைப் பெற்றார்.
மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 20 ஓட்டங்கள் சேர்ந்தபோது யஷஸ்வி ஜய்ஸ்வால் 19 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 40 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்தார்.
மத்திய வரிசையில் நிட்டிஷ் ராணா (28), அணித் தலைவர் ரெயான் பரக் (22), ஷிம்ரன் ஹெட்மயர் (12) த்ருவ் ஜுரெல் (47), ஷுப்மான் துபே (11) ஆகியோர் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல முயற்சித்தனர். ஆனால், அவர்கள் ஆட்டம் இழந்ததும் ராஜஸ்தான் றோயல்ஸ் நெருக்கடிக்குள்ளானது.
ராஜஸ்தானின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஜொஷ் ஹேஸ்ல்வூட்19ஆவது ஓவரை மிகத் துல்லியமாக வீசி ஒரு ஓட்டத்தை மட்டும் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கடைசி ஓவரை மிகவும் கட்டுப்பாட்டுடன் வீசிய யாஷ் தயாள் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியதுடன் மற்றொரு விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டது. அந்த ஓவரில் ஒரு உதிரி உட்பட 5 ஓட்டங்கள் பெறப்பட்டது.
பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் க்ருணல் பாண்டியா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஜொஷ் ஹேஸ்ல்வூட்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM