வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மீது நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையை அடுத்து அவருக்கு 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடத் தடையுடன் அடுத்துவரும் சர்வதேச ஒருநாள் போட்டி ஊதியத்தில் 50 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறியமைக்காகவே ஒத்திவைக்கப்பட்ட தடையுடன் அபராதமும் விதிக்கப்பட்டடுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இந்தத் தீர்மானம், ஸிம்பாப்வேயுடனான தொடரில் அவர் பங்குபற்றுவதற்கு தடையாக இருக்காது.ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடனான வீரர்களுக்குரிய ஒப்பந்தத்தை மீறி இரண்டு தடவைகள் கருத்து வெளியிட்டமைக்காக லசித மாலிங்க மீது ஒழுக்காற்று விசாரணை நேற்றுமுன்தினம் மாலை நடத்தப்பட்டது.ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ பொதுச் செயலாளர் மொஹான் டி சில்வா, பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஞ்லி டி சில்வா, சட்டத்தரணி அசேல ரேகவ ஆகிய மூவரடங்கிய விசாரணைக் குழு முன்னிலையில் தோன்றிய லசித் மாலிங்க தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் மன்னிப்பு கோரியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனை அடுத்து லசித் மாலிங்கவுக்கு 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடத் தடையும் ஸிம்பாப்வேயுடனான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டிக்கான ஊதியத்தில் 50 வீத அபராதமும் விதிக்கப்பட்டது.அடுத்த 6 மாதக்காலப்பகுதில் லசித் மாலிங்க ஒப்பந்தத்தை மீறினால் அவர் மீதான ஒருவருடத் தடை இயல்பாகவே அமுலுக்கு வரும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடகப் பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.