வடக்கைச் சேர்ந்த மக்கள் தென்னிலங்கையிலுள்ள சிங்கள அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து கொழும்பு, கோட்டையில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர்.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தி  வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டங்களை வடக்கில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடக்கினை சேர்ந்த மக்கள் இவ்வாறு தென்னிலங்கை சிங்கள அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து ஒரு போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.

இந்த பேராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒரு பஸ்ஸிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து மற்றுமொறு பஸ்ஸிலுமாக மக்கள் வந்து  கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் வடக்கு, கிழக்கில் பறிக்கப்பட்ட காணிகளை உடனே வழங்குமாறும், முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களிடம் அபகரித்த காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதையடுத்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஜனாதிபதி மாளிகை நோக்கி நகர்ந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட மக்களில் 8 பேரை மாத்திரம் தெரிவுசெய்து பொலிஸார் ஜனாதிபதியை சந்திப்பதற்காக அழைத்துச்சென்றமை குறிப்பிடத்தக்கது.