வயலின் மறுசீரமைப்பில் ஒரு கலங்கரை விளக்கமாக இலங்கையில் எனது பணி தொடரும்...! - யாழ். சக்தி தர்ஷினி  

Published By: Nanthini

22 Apr, 2025 | 01:58 PM
image

(மா. உஷாநந்தினி)

“வயலின் வாத்தியத்தை மீட்டுவது மட்டும் கலையல்ல, அந்த வாத்தியத்தை உருவாக்குவதும் பழுதுபார்ப்பதும் கூட ஒரு பெரும் கலையே. வயலின் வாசிப்பது, மாணவர்களை உருவாக்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், வயலினில் ஏற்படும் பழுதுகளை சரியான முறையில் திருத்தி மறுசீரமைப்பதில் இலங்கையில் ஒரு கலங்கரை விளக்கமாக எனது பணி அர்ப்பணிப்புடன் தொடரும்” என்கிறார் யாழ்ப்பாணம், உடுவில் பகுதியைச் சேர்ந்த சக்தி தர்ஷினி சந்தானகுமாரன்.

வில்லாலும் வயலினிசைக் கருவியை இசைக்கவல்ல வித்துவத்தாலும் இசையுலக மேதையாக திகழ்ந்துகொண்டிருக்கும் மறைந்த வயலின் வித்துவான் லால்குடி ஜெயராமனின் நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) அனுஷ்டிக்கப்படுகிறது. அவர் பெயரால் இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையில் இயங்கிவரும் லால்குடி அறக்கட்டளை அமைப்பில் இணைந்து, வயலின் இசைக்கருவியை பழுதுபார்க்கவும் மறுசீரமைக்கவும் கற்றுத் தேர்ந்து, தற்போது வயலின் இசைக்கலைஞராக, இசையில் தீராப்பற்று கொண்டவராக விளங்குகிறார், சக்தி தர்ஷினி.

இலங்கையின் வயலினிசைத் துறையில் வித்துவான்கள், வயலின் வாத்தியக்காரர்கள் பலர் வலம் வருகின்றபோதும், சக்தி தர்ஷினி வயலினை இசைப்பதோடு நின்றுவிடாமல், வயலின் வாத்தியத்தை பழுதுபார்க்கின்ற வித்தையும் தெரிந்த பெண்ணாக வியக்கவைக்கிறார்.

“வயலின் வாத்தியத்தின் வளர்ச்சிக்காகவும் இயற்தன்மை பேணப்படுவதற்காகவும் என்னாலான முழு பங்களிப்பினை அர்ப்பணிப்புடன் வழங்கத் தயாராக இருக்கிறேன்” எனக் கூறும் சக்தி தர்ஷினி, லால்குடி அறக்கட்டளையில் வயலின் மறுசீரமைப்பு பயிற்சி பெறுகையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வீரகேசரியிடம் பகிர்ந்துகொண்டார். 

இசைத்துறையில் பிரவேசம்…

“சிறுவயதிலிருந்தே அக்காவுடன் இணைந்து இசைக் கல்வியை கற்க ஆரம்பித்தேன். அதனால் நாங்கள் இருவரும் பல்வேறுபட்ட கர்நாடக இசை, பண்ணிசை போட்டிகள் அனைத்திலும் பங்குபற்றி பல பரிசில்களையும் பெற்றுள்ளோம். இசைத்துறை சார்ந்த எங்களது எல்லா முயற்சிகளுக்கும் பின்னால் நின்று எங்களது அப்பா மிக அதிகமாக உழைத்திருக்கிறார் என்பதையும் இந்த தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன். 

அம்மா, அவரது சிறு வயதிலிருந்து இசை கற்றபோதும், அவரால் முழுமையாக இக்கலைக்கான பயிற்சியை பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் ஏற்பட்ட ஏக்கம், ஆதங்கம் காரணமாக எங்களையும் சிறு வயதிலிருந்தே இசையில் இணைத்துவிட்டார்.

சிறு வயதில் அறிமுகமான வயலின்

“நான் வயலின் வாத்தியத்தை தரம் பத்துக்கு மேல் தான் கற்க ஆரம்பித்தேன். முதலில் வட இலங்கை சங்கீத சபையில் துணைப்பாடத்துக்கான தெரிவாக வயலின் கற்றேன். பின்னர் வயலின் இசையின் மீது எழுந்த ஆர்வம், பற்று காரணமாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட போது வயலின் இசையை பிரதான பாடமாக தெரிவு செய்து நுண்கலைமாணி பட்டம் பெற்றேன்.

அம்மாவுக்காக வாசிக்க ஆரம்பித்த வயலின்

“சிறு வயதிலேயே குன்னக்குடி வைத்தியநாதனின் இசை இறுவட்டுகள் எங்களது வீட்டில் ஒலிக்கும்போது கேட்டிருக்கிறேன்.

அம்மாவுக்கு வயலின் வாசிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். அவரால் கற்று வாசிக்க முடியாத இந்த வாத்தியத்தை அவருக்காக நான் பயில ஆரம்பித்தேன். காலப்போக்கில் வயலின் இசை என்னை அதீதமாக ஈர்த்ததால்தான் பின்னாட்களில் வயலின் இசைத்துறையில் நுண்கலைமாணி, முதுகலைமாணி பட்டம் பெற முடிந்தது.

பக்கவாத்திய பங்களிப்பு 

“யாழ். ராமநாதன் பல்கலைக்கழகத்தில் படித்தபோதும் சரி, சென்னையில் டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் படித்தபோதும் சரி, பல்வேறுபட்ட பல்லியல் கச்சேரி நிகழ்வுகளிலும், இங்கு நல்லூர் திருவிழா மற்றும் ஆலய திருவிழாக்களிலும் பக்கவாத்திய கலைஞராக பங்குபற்றியிருக்கிறேன்.

“வயலின் இசைக்கருவியை உருவாக்குவதும் ஒரு கலையே!”

“வயலின் வாசிப்பதில் மட்டுமின்றி அவ்வாத்தியத்தின் உருவாக்கம், அதில் ஏற்படும் பாதிப்புகள் சரி செய்யப்படும் விதம் பற்றி பல காணொளிகளை யூடியூப் (youtube) மூலம் பார்ப்பது வழக்கம். அத்துடன், வயலின் செய்முறை, பழுதுபார்க்கும் முறையை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் எனக்குள் இருந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு முறையாவது வயலின் தயாரிக்கும் இடத்துக்குச் சென்று, பார்த்துவிட வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசையும் கூட.

நான் இலங்கையில் நுண்கலைமாணி பட்டத்தை பூர்த்தி செய்த பின் இந்தியாவில் சென்னையில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் வயலின் துறையில் இரண்டு வருடகால முதுகலைமாணிப் பட்டப்படிப்பை கற்பதற்காக இந்தியாவுக்குச் சென்றிருந்தேன். அங்கு இறுதியாண்டு பரீட்சையின்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆய்வுக் கட்டுரைக்கு “வயலின் வாத்தியத்தில் ஏற்படும் பழுதுகளும் அவற்றை சரி செய்யும் முறைகளும்” என்னும் தலைப்பினை தெரிவு செய்திருந்தேன்.

அந்த கட்டுரையை எழுதுவதற்காக சங்கீத கலாநிதி திரு. லால்குடி ஜி.ஜெ.ஆர் கிருஷ்ணன் அவர்களை தொடர்புகொண்டு இது பற்றிய விடயங்களை கேட்டறிந்துகொள்ள நாடியபோது ‘லால்குடி டிரஸ்ட்’ அமைப்பின் மூலம் இந்தியாவில் நான்கு வயலின் தயாரிப்பாளர்களை அவர்கள் உருவாக்கியிருந்தார்கள். அவர்களில் சென்னையில் வசிக்கும் இரு தயாரிப்பாளர்களான திரு. ரஞ்சித் லீலா சந்திரன் மற்றும் திரு. சத்ய நாராயணன் ஆகியோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களை சந்தித்து, வயலின் உருவாக்கும் முறை  பற்றி தெரிந்துகொண்டேன். அத்துடன் பழுது பார்ப்பது, சீரமைப்பது பற்றிய விளக்கங்களையும் பெற்று, எனது ஆய்வுக் கட்டுரையை நிறைவு செய்தேன்.

வயலின் இசைக்கருவியை உருவாக்குவது என்பது சாதாரண விடயமல்ல, அதுவும் ஒரு மிகப் பெரிய கலை என்பதை நான் புரிந்துகொண்டேன்.  சந்தர்ப்பம் கிடைத்தால் அதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே விரும்பினேன்.

லால்குடி அறக்கட்டளை பற்றி...

“லால்குடி அறக்கட்டளை (Lalgudi Trust) பற்றி நான் கண்டிப்பாக இத்தருணத்தில் கூறவேண்டும்.

லால்குடி டிரஸ்ட் 1979ஆம் ஆண்டில் சென்னையில் வயலின் மேதை திரு. லால்குடி ஜெயராமன் அவர்களால் நிறுவப்பட்டது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் இளைய தலைமுறையினரை பல விதங்களில் இசைத்துறையில் இணைத்துக்கொண்ட இந்த நிறுவனம் வாத்தியங்களை வழங்குவது, புலமைப்பரிசில் அளிப்பது என இசையை நேசிக்கும் இளைஞர்களை பலவாறு ஊக்குவித்து வருகிறது.

2013ஆம் ஆண்டு லால்குடி ஜெயராமன் அவர்களின் மறைவுக்குப் பின், அவரது மகன் சங்கீத கலாநிதி லால்குடி கிருஷ்ணன் இந்த டிரஸ்ட்டை நிர்வகிக்க ஆரம்பித்தார்.

அமெரிக்காவில் தந்தி வாத்தியங்களை தயாரிப்பதிலும் பழுதுபார்ப்பதிலும் வல்லுநரான (Luthier) ஜேம்ஸ் விம்மரை சென்னைக்கு வரவழைத்து, அக்கலையை சென்னையில் உள்ள பலருக்கும் 2013 முதல் 2019 வரை இலவசமாக கற்பிக்க வழிவகுத்தார். இதில் இடைவிடாது பயின்று நான்கு கலைஞர்கள் பட்டம் பெற்றனர். இது இந்தியாவின் இசையுலகில் ஒரு மகத்தான சாதனை என்றே கூறலாம்.

ஏனெனில், 250 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வயலின் புழங்கி வந்தாலும், வாத்தியக் கலைஞர்கள் இருந்தாலும், பழுது பார்ப்பவர், விஞ்ஞான முறைப்படி வாத்தியம் தயாரிக்கும் கலைஞர் என எவரும் இதுவரை இருந்ததில்லை. ஆனால், இன்றோ வயலின் தயாரிக்கும் நான்கு நிபுணர்களை இந்தியாவில் உருவாக்கிய பெருமை லால்குடி அறக்கட்டளையையே சாரும்.

லால்குடி அறக்கட்டளையில் முழுமையான பயிற்சி

“தற்பொழுது சென்னையில் வசிக்கும் திரு. ரஞ்சித் லீலா சந்திரனிடம் வயலின் பழுதுபார்க்கும் பயிற்சியை பெற்றுக்கொள்ள கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இந்தியாவுக்கு சென்றிருந்தேன். இந்த கற்கைநெறியை திருப்திகரமாக பூரணப்படுத்துவதற்கு “லால்குடி அறக்கட்டளை” அமைப்பே முழுக் காரணம்.

அறக்கட்டளையின் தற்போதைய நிர்வாகி திரு. லால்குடி ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன் அவர்களின் முழுமையான வழிகாட்டுதலின் கீழும் இந்த கற்கைநெறியை நான் நிறைவு செய்திருக்கிறேன் என்றே கூறவேண்டும்.

வயலின் பழுதுபார்க்கும் கலை தனது நாடான இந்தியாவுக்கு பயன்படுவதோடு மட்டுமன்றி, இக்கலையினூடாக அயல் நாடான இலங்கையிலும் வயலின் துறையில் ஒரு பரிணாம வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர் எனது ஆர்வத்தைக் கண்டு, முழுமையான ஆதரவு வழங்கினார்.

இதற்குத் தேவையான பெறுமதி மிக்க உபகரணங்கள் அனைத்தையும் ஜெர்மனி, அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் இருந்து வரவழைத்ததுக் கொடுத்தார். அது மட்டுமன்றி, வயலின் சீரமைப்புப் பயிற்சியைத் தொடர்வதற்கு எனக்கு வேண்டிய வளங்களையும் லால்குடி அறக்கட்டளையின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்தார்.

வயலின் தயாரிப்பாளரான திரு. ரஞ்சித் லீலா சந்திரன் அவர்களின் வழிகாட்டலில் கீழ் இப்பயிற்சி எனக்கு அளிக்கப்பட்டது.

இது, தற்போதைய வடிவத்தைக் கொண்ட வயலின் வாத்தியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய ‘ஸ்ராடி வேரியஸ்’ என்பவரின் ஜெர்மனிய முறைப்படி அமைந்த பாரம்பரிய கற்கைநெறியாகும்.

உண்மையில், எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாகவே இதைக் கருதுகிறேன். காரணம், இப்பயிற்சிநெறியை வழங்கிய ரஞ்சித் அவர்கள் இதை ஒரு தொழிலாக மட்டும் கருதாமல், உயர்ந்த அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் செய்து வருகிறார்.

வயலின் பயிற்சிக்காக எடுத்துக்கொண்ட இரு மாதங்களில் அவரிடமிருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொண்டேன். தனக்கெனவோ தனது குடும்பத்துக்கெனவோ தேவையற்ற எந்த ஒரு விடுமுறைகளையும் எடுக்காமல், இரண்டு மாதங்களையும் ஒரு தவம் போல பயிற்சி நெறிக்காக அர்ப்பணித்து எனக்கு கற்பித்தார். அவரது துணைவியார் திருமதி ஆதிரா ரஞ்சித் அவர்களும் தனக்குத் தெரிந்த அனைத்து விடயங்களையும் எனக்கு கணவருடன் இணைந்து கற்பித்தார். அவரும் ரஞ்சித் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் தற்போது ஒரு வயலினை தயாரித்து இந்தியாவின் முதல் பெண் வயலின் தயாரிப்பாளராக உருவாகியுள்ளார் என்பது இன்னுமொரு சிறப்பு.

வயலின் தயாரிப்பு, பழுதுபார்ப்பதில் உள்ள நுட்பங்கள் 

“இந்த பயிற்சிநெறியை பற்றி சொல்லவேண்டுமானால், ஆரம்பப் பயிற்சியாக வயலின் திருத்துவதற்கு தேவையான உபகரணங்களை எவ்வாறு கூர்மைப்படுத்தி தயார் நிலையில் வைப்பது என்பதில் தொடங்கி அதற்கான உபகரணங்களை எவ்வாறு கையாள்வது, அவற்றை எவ்வாறு ஒழுங்குபடுத்தி பாதுகாப்பது, நேர்படுத்தி வைப்பது, அதற்கான பாதுகாப்பு முறைகள் வரையான பல்வேறு விடயங்களை நுணுக்கமாக எனக்கு கற்பித்தார்.

ஒரு வயலினை திருத்துவதற்கு முன் அவற்றில் அவதானிக்கவேண்டிய விடயங்கள், வயலினில் ஏற்பட்டுள்ள சிறு பிழையையும் எவ்வாறு இனங்காண்பது, அதை எவ்வாறு சரி செய்வது போன்ற தனக்குத் தெரிந்த அனைத்து விடயங்களையும் எனக்கு கற்றுக்கொடுத்தார். அந்த வகையில் திரு ரஞ்சித் அவர்கள் ஒரு சிறந்த ஆசானுக்கான முன்னுதாரணம். அவரது நற்பண்புகளும் திறமையான கற்பித்தல் முறையும் அவருடைய ஆசான் ஜேம்ஸ் விமர் (Jem's Wimmer) அவர்களின் பிரதிபலிப்பு என்பதையே எடுத்தியம்புகின்றன.

வயலின் பழுதுபார்ப்பதற்குரிய பல பொருட்கள் இலங்கையில் கிடைப்பது அரிது என்பதால் பயிற்சி முடிந்து நான் நாடு திரும்புவதற்கு முன், எனக்குத் தேவையான, தன்னிடம் மேலதிகமாக இருந்த, வயலின் பழுதுபார்ப்பதற்கு வேண்டிய பல்வேறு பொருட்களை திரு. ரஞ்சித் அவர்கள் எனக்கு வழங்கி உதவினார்.

“வயலினை ஒரு குழந்தை போல் கையாள வேண்டும்...”

“இலங்கையில் கர்நாடக இசை மற்றும் மேலைத்தேய இசைத்துறையில் பல்வேறுபட்ட கலைஞர்களால் தற்போது வயலின் இசைக்கருவி அதிகளவில் கையாளப்பட்டு வருகிறது. எனினும், இந்த வாத்தியத்தில் ஏற்படும் பழுதுகளை சரியான முறையில் ஆராய்ந்து, திருத்துவதற்கு பழுதுபார்ப்போர் மிகக் குறைந்த அளவிலேயே இந்நாட்டில் உள்ளனர் என கூறலாம்.

மரத்தினாலான இந்த வாத்தியத்தை ஒரு குழந்தை போல் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். எனினும், சில வயலின்கள் என்னிடம் வரும்போது மிகவும் மோசமான முறையில் பழுதுபார்க்கப்பட்டிருப்பதை அவதானிக்கும்போது மிகவும் கவலைகொள்வேன்.

எனவே, வயலின் வாத்தியத்தின் வளர்ச்சிக்காகவும் அதன் இயற்தன்மை பேணப்படுவதற்காகவும் என்னாலான முழு பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கத் தயாராக உள்ளேன் என்பதை இத்தருணத்தில் கூறவிளைகிறேன்.

“கலங்கரை விளக்கமாக இலங்கையில் எனது பணி தொடரும்!” 

“வயலின் வாசிப்பதோடும் மாணவர்களை உருவாக்குவதோடும் மட்டும் நின்றுவிடாமல், வயலினில் ஏற்படும் பழுதுகளை சரியான முறையில் திருத்தி மறுசீரமைப்பதில் இலங்கையில் ஒரு கலங்கரை விளக்கமாக எனது இப்பணி அர்ப்பணிப்புடன் தொடரும் என்பதை உறுதியுடன் கூறுகிறேன்” என பெருமை மேலிடத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீதா எலிய : இலங்கையின் ஆன்மிக...

2025-06-16 12:05:58
news-image

வைகாசி விசாகத்தின் மகத்துவங்கள்....

2025-06-09 09:14:33
news-image

"நாட்டியத்தில் முழுமையான சந்தோஷத்தை உணர்கிறேன்" -...

2025-06-11 17:04:49
news-image

கலையில் சமத்துவமின்மையை ஏன் கொண்டுவர வேண்டும்? ...

2025-05-23 18:56:02
news-image

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, அரசடி ஶ்ரீ...

2025-05-08 13:55:50
news-image

மனம் திறந்தார் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’

2025-04-29 21:17:35
news-image

காண்பியக் காட்சி - கே.கே.எஸ் வீதி...

2025-04-25 21:34:14
news-image

இசையின் காதல் ராணி எஸ். ஜானகியின்...

2025-04-23 13:13:06
news-image

வயலின் மறுசீரமைப்பில் ஒரு கலங்கரை விளக்கமாக ...

2025-04-22 13:58:25
news-image

புதிய அலை கலை வட்ட இளைஞர்...

2025-04-19 10:02:50
news-image

பங்குனி உத்தர நாயகி போற்றி....!

2025-04-04 16:54:50
news-image

நுவரெலியா காயத்ரி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள 108...

2025-04-10 16:32:08