பலவகை சத்துகள் நிரம்பிய சோளம்…!

17 Apr, 2025 | 04:07 PM
image

புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கல்சியம், விட்டமின்கள் என உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கொண்டது தான் சோளம். இப்படி உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் சோளம் குறித்து சில மூட நம்பிக்கைகளும் இருக்கத் தான் செய்கின்றன.

அதாவது, சிறியவர்கள் சோளம் சாப்பிடக் கூடாது என சிலர் எண்ணுவதுண்டு. ஆனால், அது தவறான எண்ணமாகும். பொதுவாக 100 கிராம் சோளத்தில் 73 கலோரி எனர்ஜி, நமது உடலுக்குக் கிடைக்கிறது. தவிர, 2.7 கிராம் புரதச்சத்து, 12 கிராம் மாச்சத்து, 6 கிராம் நார்ச்சத்து, சிறிய அளவில் கொழுப்புச்சத்து மற்றும் கல்சியம், பொஸ்பரஸ், விட்டமின்கள், என்டி ஒக்சிடன்ட்ஸ் என பல வகையான சத்துக்கள் சோளத்தில் நிரம்பி வழிகின்றன. 100 கிராம் சோளத்தினை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது பெரும் ஆரோக்கிய நன்மைகளைப் பெற்றுத் தரும் என்கின்றார்கள் உணவியல் நிபுணர்கள்.

சோளத்தில் பல வகைகள் உள்ளன. பதப்படுத்தாமல் இயற்கையாக வளரும் சோளம் உடலுக்கு மிகுந்த நன்மைகளை தருகிறது. அதிலும் பிஞ்சு சோளம் உடலுக்கு மிகவும் நல்லது.

நாட்டுச்சோளம் அல்லது வெள்ளைச்சோளம் என்று அழைக்கப்படும் சிறு சோளம் உடலுக்கு ஏராளமான சத்துக்களைத் தருகிறது. ஆனால், இவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் இரத்தத்தில் சீனி அளவு அதிகரிக்கக்கூடும். அதன் விளைவாக, இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படலாம்.

தவிர, பதப்படுத்தப்பட்ட சோளத்தையும் பெக்கெட்களில் அடைத்து விற்கப்படும் சோளம் தொடர்பான சிற்றுண்டிகளையும் தவிர்ப்பது நன்று. ஏனென்றால், பதப்படுத்தப்பட்ட சோளத்தில் அதிக அளவு சோடியம் இருப்பதால் அது உடலுக்கு தீங்கையே விளைவிக்கும்.

நன்மைகள்

சோளத்தில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து இருப்பதால், இது உடல் எடை குறைவதற்கு மிகவும் உதவுகிறது.

சோளத்தை அளவாக சாப்பிட்டால் இதய நோய் வராமல் பாதுகாத்தல், இரத்தத்தில் சீனி அளவை சரியாக வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றிற்கு உதவுகிறது.

இதிலிருக்கிற லியூசின் என்ற வேதிப்பொருள் வயது சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்கும், கண்களின் நன்மைக்கும் உதவுகிறது.

யார் உண்ணக்கூடாது?

சோளத்தில், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து காணப்படுவதால் இதனை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உட்கொள்ளலாம். ஒரு முழு சோளம் 75 கிராம் இருக்கும். ஒரு மனிதன் ஒரு முழு சோளத்தை தனது உணவில் ஒரு பகுதியாக தினந்தோறும் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் இவற்றில்கிளைசெமிக் இன்டெக்ஸ்குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளர்கள் தாராளமாக இதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், வெள்ளை சோளம் எடுத்துக் கொள்ளும்போது மட்டும் சிறிது கவனம் தேவை.

உணவு குழாய் சார்ந்த பிரச்சினைகள் உள்ளவர்கள், நார்ச்சத்து உடலுக்கு சேராதவர்கள் சோளத்தைத் தவிர்ப்பது நன்று.

மேலும், சோளத்துடன் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கெரட், சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து உண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. வயதானவர்களுக்கு சூப் வடிவில் கொடுக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right