விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜய்யின் 61வது படமாக உருவாகிவரும் ‘மெர்சல்’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 62வது படத்தை யார் இயக்குவார்? என்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக எழுந்து வருகிறது. விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ்தான் இயக்குவார் என்றும் ஒருசிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும், அந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப்போவதாகவும் கோலிவுட் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. படப்பிடிப்பு ஒக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ஏற்கெனவே ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என இரு மாபெரும் வெற்றிப்படங்கள் அமைந்துள்ளன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கெனவே விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.