“அதிரன்” கிராமத்து மண்வாசனையோடு நகரும் காதல் கதை - இயக்குநர் தினேஷ் கனகராஜ் 

16 Apr, 2025 | 01:31 PM
image

(உருத்திரா)

லங்கை சினிமாவில் புதியதொரு மைல்கல் என கொண்டாடப்படும் 'அதிரன்' திரைப்படம், அண்மையில் அதன் முன்னோட்டத்தை வெற்றிகரமாக காண்பித்து, எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகியிருக்கிறது. 

தினேஷ் கனகராஜின் திரைக்கதை, இயக்கத்தில் அமைந்த “அதிரன்” திரைப்படத்தை அட்ரியன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க, தயாரிப்பாளர் அன்டன் டெலாசெல்பின் பொருட்செலவில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

படத்துக்கான இசையை சகிஷ்ணா சேவியர் வழங்கியுள்ளார். 

“அதிரன்” திரைப்படத்தில் கதாநாயகனாக சுதர்ஷன் ரவீந்திரனும் கதாநாயகியாக சிங்கள திரைப்பட நடிகை மிஷேல் தில்ஹாராவும் நடித்துள்ளனர். 

அத்துடன் எல்றோய் அமலதாஸ், க்ரிஷான் வினோதன், ஷாமளா நிரஞ்சன், அருண் சுசீன், செல்வராஜ் லீலா, மொஹமட் உஸ்மான், டி.எம்.கே. மிதுன், கருணாகரன், ஒனாசீஸ், அமராதாஸ் ஜே.பி., ஜமாலதீன் முஸமில், திலன் பாலகுமார் என இலங்கையின் பிரபல நடிகர்களும் சில புதுமுக நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

“அதிரன்" படப்பிடிப்பின் ஊடாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இயக்குநர் தினேஷ் கனகராஜ் எம்மோடு பகிர்ந்துகொள்கையில், “அதிரன் - மலையக மண்ணின் கலை, கலாசாரத்தை சொல்லக்கூடிய, கிராமத்தின் மண்வாசனையோடு நகரக்கூடிய ஓர் அழகான காதல் கதை" என்றார். 

“காதல் வந்துருச்சி" - தொலைக்காட்சி திரைப்படம், “7K", “கடலாய் காதல்" ஆகிய தொலைக்காட்சித் தொடர்கள் மூலமாக திரைத்துறை சார்ந்த வெவ்வேறு அனுபவங்களை பெற்று, பல நாள் பெரும் முயற்சிகளுக்குப் பின்னர், “அதிரன்” திரைப்படத்தை உருவாக்கியிருப்பதாக கூறிய தினேஷ் கனகராஜ் தொடர்ந்து தெரிவிக்கையில், 

பெரிய ஆரம்பம்... சிறந்த அனுபவம்! 

“வெள்ளித் திரையாக வெளியாகும் எனது முதல் திரைப்படம் “அதிரன்". இப்படியொரு திரைப்படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது தயாரிப்பாளர் ஒருவர் எனக்கு வழிகாட்டினார். இந்த படம் மிகப் பெரிய ஆரம்பமாக அமைந்ததால் மிகச் சிறந்த அனுபவங்களை எனக்குக் கொடுத்திருக்கிறது. 

“அதிரன்" படத்தை வித்தியாசமாக, கமர்ஷியலாக உருவாக்க நினைத்தோம். அதிலும், மக்களின் விருப்பத்துக்குரிய திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணமாக இருந்தது. எமது பட்ஜட்டுக்கும் ஏனைய வளங்களுக்கும் தகுந்தபடி, இலங்கையின் தலைசிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களை இணைத்து படப்பிடிப்பு பணிகளை ஆரம்பித்தோம். 

படக்குழுவினரின் பங்களிப்பு 

“இந்த படத்தின் தயாரிப்பாளர் அன்டன் டெலாசெல்ப், அட்ரியன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பிரதான தயாரிப்பாளர் தீப்திகா ஞானசேகரன், இசையமைப்பாளர் சகிஷ்ணா சேவியர், படத்தொகுப்பாளர் துசிகரண், ஒளிப்பதிவாளர் கதிர் ராஜசேகரம், வசன அமைப்பாளர்களான சுகிர்தன் கிறிஸ்துராஜா, ஜெனோசன் ராஜேஸ்வர், ஆடை வடிவமைப்பாளர் அபு அச்சி உட்பட படக்குழுவினர் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் திறமைகளை படத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.  

கதாநாயகன் சுதர்ஷன் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ப நுணுக்கமாகவும் அர்ப்பணிப்புடனும் நடித்தார். 

சிங்கள சினிமாத்துறையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் திறமையான நடிகையான தில்ஹாராவை படத்தின் கதாநாயகியாக தெரிவுசெய்தோம். மிகத் திறமையான நடிகை அவர். இந்த படத்தில் அவர் தமிழ் பேசி நடித்த விதம் அருமை. 

திரைத்துறையில் வலம் வரும் முன்னணி நடிகர்களான எல்றோய் அமலதாஸ், சியாமளா நிரஞ்சன் போன்றவர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள். அது மட்டுமன்றி, நிறைய புதுமுகங்களை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பி, புதிய நடிகர்களை இணைத்திருக்கிறோம். 

புதுமுக நடிகரான அருண் ஹிந்தி வில்லனைப் போல் ஸ்டைலாக நடித்திருக்கிறார். மிகவும் உணர்ச்சிகரமாக நடிக்கக்கூடியவர். அவர் பார்வையும் மிரட்டலாக இருக்கும். 

கொஸ்ட்யூம் டிசைனர் அபு அச்சியின் பங்களிப்பை இந்த தருணத்தில் சொல்லியாக வேண்டும். அதேபோல் தொழில்நுட்பப் பிரிவிலும் பணிகள் நேர்த்தியாக, சிறப்பாக அமையவேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். 

இப்படி எல்லா கலைஞர்களின் திறமையும் ஒற்றுமையுமே படத்தின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறது. 

மூன்று பாடல்கள் 

“இந்த படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. இரண்டு காதல் பாடல்கள், ஒரு சோகப் பாடல்  அற்புதமான இசையினால் அமைக்கப்பட்டுள்ளன. படத்தை திரையில் பார்க்கும்போது நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என நம்புகிறேன். 

சவாலான படப்பிடிப்புப் பணிகள்  

“அதிரன்” படப்பிடிப்பு மலையகத்தில் உள்ள மிக அழகான பகுதியான மஸ்கெலியாவிலும் கொழும்பிலும் நடத்தப்பட்டது. 

கிட்டத்தட்ட இருபத்து நான்கு நாட்கள் படப்பிடிப்புப் பணிகள் நடத்தப்பட்டன. மஸ்கெலியாவில் அதிகப்படியான மழை நாட்களிலேயே படப்பிடிப்பு செய்தோம். 

அந்த சந்தர்ப்பங்களில் தயாரிப்பாளர், தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகி வழங்கிய பல்வேறு விதமான ஒத்துழைப்புகள், படப்பிடிப்பை தடங்கல்கள் இன்றி உரிய நாட்களில் நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்தன. 

அதேபோல படப்பிடிப்புத் தளத்திலும் பல சுவாரஸ்யங்கள், சவால்கள் இருந்தன. குறிப்பாக சொல்லவேண்டுமானால், சண்டைக் காட்சிகள்... நீண்ட நாட்களாக காத்திருந்து அந்த காட்சிகளை எடுத்தோம். ஏனென்றால், மஸ்கெலியாவில் குறிப்பிட்ட ஒரு தளத்தில் எடுப்பதென முதலில் முடிவு செய்தோம். ஆனால், அங்கு படப்பிடிப்பு நடத்தக் கைகூடவில்லை. 

ஒரு கமர்ஷியல் படத்துக்கு சண்டைக் காட்சிகள் ரொம்ப முக்கியம் என்பதால் பொருத்தமான இடத்தை தெரிவுசெய்வதற்காக பெரும் முயற்சியெடுத்தோம். பிறகு, மூன்று மாதங்கள் கழித்தே, கொழும்பில் சண்டைக் காட்சிகளை பதிவு செய்தோம். அந்த காட்சிகளும் கச்சிதமாக வந்திருக்கின்றன. 

இன்னும் சொல்லப்போனால், எடுத்த காட்சிகளில் எதையும் விட்டுவிடாமல் சேர்த்திருக்கிறோம். 

2 மணிநேரம் 50 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த பெரிய திரைப்படம், ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கக்கூடிய படமாக உருவாக்கப்பட்டிருக்கிறதென என்னால் தைரியமாக சொல்ல முடியும். 

அதற்காக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒவ்வொருவரும் அர்ப்பணிப்போடு, தூக்கம் மறந்து உழைத்தார்கள் என்று சொல்வதில் ஒரு இயக்குநராக நான் பெருமைப்படுகிறேன். 

அழகான காதல் கதை

“அதிரன்” கதையை பற்றி இப்போதே சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். ஓர் அழகான காதல் கதையை கொண்டது “அதிரன்”. கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சண்டை, கொஞ்சம் ரொமான்ஸ் என எல்லா உணர்வுகளும் கலந்த திரைப்படம். மலையக மண்ணின் கலை, கலாசாரத்தை சொல்லக்கூடிய, கிராமத்தின் மண்வாசனையோடு நகரக்கூடிய ஒரு கதையோட்டத்தை கொண்டது. 

படத்தை தமிழ், சிங்கள மொழிகளில் வெளியிட தயாராக இருக்கிறோம். அதற்கான வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. 

பரிச்சயமான சினிமா மொழி

“மக்களுக்குத் தெரிந்த, எல்லோராலும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு வழக்கமான சினிமா மொழியை அதிரனில் பிரயோகித்திருக்கிறோம். 

சிந்திக்காமல் எடுக்கின்ற முடிவு ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றிவிடும்! தவறான வழியில் செல்வது தவறான முடிவுக்கு வழிவகுக்கும். ஒரு முடிவை சரியான நேரத்தில் எடுக்காவிட்டால், அது எத்தனை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும், அதனால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறோம்.

பெண்களின் மதிப்பை, அவர்களுடைய பெறுமதியை படத்தின் முடிவில் உங்களால் உணரமுடியும். 

விரைவில் “அதிரன்” திரையரங்குகளில்  ஒலி/ளிக்கத் தயாராக இருக்கிறது! 

“அதிரன்” இலங்கைக்கான திரைப்படம்

“எனது பார்வையில் சொல்லவேண்டுமாயின், இலங்கை சினிமாவை இந்தியா தவிர்த்து உலக நாடுகளுக்கு கொண்டுசேர்க்க வேண்டும். ஏனென்றால், இந்திய திரைப்படத்துறை என்பது மிகப் பெரிய சமுத்திரம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், “அதிரன்” இலங்கைக்கான திரைப்படம். 

இந்திய திரைப்படங்களுக்கு இணையாக, ஒரே மாதிரியான அமைப்பில் படத்தை உருவாக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் எமக்கு இல்லை. ஒரு இலங்கை ரசிகன் எதிர்பார்க்கும் எல்லா விடயங்களும் படத்தில் இருக்க வேண்டுமென நாங்கள் சிந்தித்து, “அதிரனை” உருவாக்கியிருக்கிறோம். 

இந்திய திரைப்படங்களுக்கு இணையாக இலங்கையிலும் திரைப்படங்கள் அமைய வேண்டும் என்கிற ரசிகர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. இந்திய திரைப்படங்களை மட்டுமே பார்க்கின்ற இலங்கை ரசிகர்கள், இலங்கையில் படைக்கப்படும் தமிழ் படங்களையேனும் பார்ப்பதில்லை என்கிற குறை காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதை உடைப்பதே எனது முதல் நோக்கம். அதற்கான வாய்ப்பை நாம்தானே ஏற்படுத்த வேண்டும். எனவே, ரசிகர்கள் விரும்புகிற, எதிர்பார்க்கிற விடயங்கள் நமது படைப்புகளிலும் இருக்கவேண்டும். 

அந்த வகையில், “அதிரன்” திரைப்படத்தின் வெற்றிக்கு பலம் சேர்த்த தயாரிப்பாளர் அன்டன் டெலாசெல்ப் மற்றும் அட்ரியன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம் உட்பட அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைந்த படக்குழுவினருக்கு நன்றி!” என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜுலையில் வெளியாகும் சூர்யா சேதுபதி நடிக்கும்...

2025-04-26 17:13:02
news-image

தேவயானி நடிக்கும் 'நிழற்குடை' படத்தின் இசை...

2025-04-26 16:25:11
news-image

யுவனின் குரலில் ஒலிக்கும் 'டார்க் '...

2025-04-26 15:50:40
news-image

'ஒளிப்பதிவு மேதை' பி.சி. ஸ்ரீராம் வெளியிட்ட...

2025-04-26 15:49:51
news-image

ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் நானியின்...

2025-04-26 15:49:35
news-image

சீமானுக்கு உதவிய சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

2025-04-26 15:50:53
news-image

தனுசின் 'இட்லி கடை' படப்பிடிப்பு நிறைவு

2025-04-26 15:38:46
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-04-26 15:39:04
news-image

வல்லமை - திரைப்பட விமர்சனம்

2025-04-26 15:39:20
news-image

சுமோ - திரைப்பட விமர்சனம்

2025-04-26 15:39:42
news-image

பஹல்காம் தாக்குதலால் பிரபாஸ் பட நாயகிக்கு...

2025-04-26 11:24:19
news-image

ஷங்கர் மீது கார்த்திக் சுப்புராஜ் குற்றச்சாட்டு

2025-04-25 11:20:49