(நா.தனுஜா)
பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் தமக்கே ஆணை வழங்கியதாக தேசிய மக்கள் சக்தியினால் கூறப்பட்டுவரும் நிலையில், அதனைப் பொய்யாக்கும் வகையில் உள்ளுராட்சிமன்றத்தேர்தல் முடிவுகள் அமையவேண்டும். அதன்படி உதிரிக்கட்சிகளுக்கு வாக்களிப்பதை விடுத்து, சமஷ்டியை நீண்டகாலமாக வலியுறுத்திவரும் பிரதான தமிழ்த்தேசிய கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கே தமிழர்கள் வாக்களிக்கவேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி திங்கட்கிழமை (14) ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர், மேலும் கூறியதாவது:
இம்முறை புத்தாண்டு உள்ளுராட்சிமன்றத்தேர்தலுடன் பிறந்திருக்கிறது. இப்புத்தாண்டில் எமது மக்கள் புதியதொரு அணுகுமுறையில் செயற்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் பிரதேசங்களில், அதிலும் குறிப்பாக தமிழ்மக்களின் தேசிய கலாசார பாரம்பரிய உறைவிடமாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கியிருக்கிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.
தேசிய மக்கள் சக்திக்கு 25 சதவீதமான வாக்குகளே கிடைத்திருக்கின்றன. ஆனால் ஏனைய அனைத்துத் தரப்புக்களுக்கும் தனித்தனியாகப் பார்க்கும்போது அதனைவிடக் குறைந்தளவிலான வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தேசிய மக்கள் சக்திக்கு அடுத்ததாக இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதேபோன்று ஜனாதிபதித்தேர்தலில் வாக்களித்தவர்களைவிட 10 சதவீதம் குறைவானவர்களே பாராளுமன்றத்தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள். இதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தமிழ்மக்கள் தமிழ்க்கட்சிகளைப் புறந்தள்ளி, தமக்குத்தான் ஆணை வழங்கியிருக்கிறார்கள் எனத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறமுற்படுகின்றது. இதுவொரு தவறான பிம்பம்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதற்கு அடுத்ததாக உள்ளுராட்சிமன்றத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தல் தமிழ் மாவட்டங்கள் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் நடைபெறவிருப்பதனால், இத்தேர்தல் முடிவானது அரசாங்கம் தற்போது கூறிவருகின்ற விடயம் உண்மையா, இல்லையா என்பதை சோதித்துப் பார்ப்பதற்கு உகந்ததாக அமையும். ஆகையினாலேயே நாம் எமது மக்களிடம் தெளிவானதொரு ஆணையை வழங்குமாறு கேட்கின்றோம்.
உண்மையில் பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்மக்கள் தென்னிலங்கை சிங்கள தேசிய கட்சிகளுக்கு ஆணை வழங்கவில்லை. மாறாக அவர்கள் கூடுதலான வாக்குகளைப் பெற்றதை வைத்து அவ்வாறானதொரு பிம்பம் காண்பிக்கப்படுவதனால், இம்முறை தமிழ்மக்கள் அவ்வாறு வாக்களிக்காமல், தமிழ்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும். அதேவேளை தமிழ்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும்போது பிரிந்து பிரிந்து ஒவ்வொரு தமிழ்க்கட்சிக்கு வாக்களித்தாலும், அதன் முடிவு பாராளுமன்றத்தேர்தல் முடிவை ஒத்ததாகவே இருக்கும். எனவே தமிழர்கள் குறித்தவொரு தமிழ்க்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும். அதனூடாகவே தமிழ்மக்களின் ஆணை தமிழரசுக்கட்சிக்கு அல்லது ஒரு தமிழ்க்கட்சிக்கு இருக்கிறது என்ற விடயம் புலப்படும்.
அதன்படி தமிழரசுக்கட்சியே இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறை நிறுவப்படவேண்டும் என்ற கட்சியின் கொள்கையை சுமார் 75 வருடகாலமாகத் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது. எனவே அரசியல் தீர்வானது சமஷ்டி முறைமையை அடிப்படையாகக்கொண்டதாக இருக்கவேண்டும் என வலியுறுத்துகின்ற தமிழரசுக்கட்சிக்கே தமிழர்கள் ஆதரவளிக்கவேண்டும்.
அடிப்படையில் சமஷ்டிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்களும், இதுவரை காலமும் அதுபற்றிப் பேசாதவர்களும் இப்போது தேர்தலுக்காக அதனை வலியுறுத்திவருகின்றார்கள். அடுத்ததாக உதிரிக்கட்சிகளுக்கு வாக்களிப்பதால் எவ்வித பயனுமில்லை. ஆகவே பிரதான தமிழ்த்தேசிய கட்சியான தமிழரசுக்கட்சிக்குத் தமிழர்கள் வாக்களிக்கவேண்டும். சகல உள்ளுராட்சிமன்றங்களிலும் தமிழரசுக்கட்சி ஆட்சிசெய்வதற்கான ஆணையை மக்கள் வழங்கவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM