எக்காரணம் கொண்டும் இலவசக் கல்வியைச் சீரழிக்கமாட்டோம் என சபையில் உறுதிபடத்தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சைட்டம் குறித்த விசேட அமைச் சரவைப் பத்திரத்தை அடுத்தவாரம் சமர்ப்பிக் கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போது முழுநாட்டிற்கும் அரச வைத்தியர் கள் சங்கத்தினர் பயங்கரவாதிகளாக மாறியுள்ளதாக சாடிய அமைச்சர் ராஜித, பிறந்த குழந்தையை குளிப்பாட்டி விட்டு வீசுமாறு கோரியே போராட்டங்கள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல், வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், 

வடக்கில் மட்டும் பயங்கரவாதமாக விடுதலை புலிகள் உள்ளனர். ஆனால்  முழு நாட்டிற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரே பயங்கரவாதிகளாக உள்ளனர். காலோ பொன்சேகா முன்னர் சைட்டம் ஆதரவு கொள்கையைக் கடைபிடித்தார். ஆனால் தற்போது திசை மாறியுள்ளார். அவரது காலத்தை நீடிப்பது தொடர்பில் நாம் பேசி தீர்மானிப்போம். 

அரசியல் பின்னணியில் மருத்துவ சபை செயற்பட்டது. சைட்டம் கல்லூரியில் தரமில்லை. இருப்பினும் முன்னர் நெவில் பெர்ணான்டோவை வைத்து காய் நகர்த்தினர். தற்போது இருக்கும் விசேட நிபுணர்கள் அனைவரும் தனியார் வைத்திய நிறுவனமான வட கொழும்பு வைத்திய கல்லூரியில் இருந்தே வந்தனர்.

வைத்திய பீடத்தில் மாணவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று பார்க்க வேண்டும். அங்கு  பிக்குகள் உள்ளார்களா? என்றும் பார்க்க வேண்டும். அண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றாகக் கூடினர். அங்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அதிக பெரும்பான்மையினர் வகுப்புக்குச் செல்லவே தீர்மானித்தனர். 

மக்கள் விடுதலை முன்னணியினர் கோருவது வேறு, அவர்களிடத்திலிருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோசலிச கட்சி கோருவது வேறு. இவர்கள் எல்லாம் இலங்கையை வட கொரியாவாக மாற்றவே முனைகின்றனர்.

அனைத்திற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களாக மாறியுள்ள இடது சாரிகள் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள இடதுசாரிக் கட்சி போன்று  உருவாக்குங்கள். நிச்சயமாக அதற்கு நானும் வருவேன்.

குழந்தையை பெற்று குளிப்பாட்டி விட்டு தற்போது அதனை வீசுமாறு கோருவது நியாயமா? மாணவர்களில் உள்ள  இரு தரப்பினர்  குறித்தும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தனியே ஒரு தரப்பினருக்கு மட்டும் உரிமையை வழங்குவது நோக்கம் இல்லை. 

சைட்டத்தின் பங்குகளை பங்குச் சந்தையில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. மேலும் சைட்டத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் கோருவதை  நிறுத்தியுள்ளோம். அதேநேரம் நெவில் பெர்ணான்டோவின் வைத்தியசாலையை நாம் அரசாங்க உடமையாக மாற்றிப் பெறுவோம். அதற்கான  பத்திரத்தினை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பேன்.

எக்காரணம் கொண்டும் இலவச கல்வியை சீரழிக்க மாட்டோம். எதிர்ப்பு வௌியிடுவதாயின் யாதார்த்தமாக செயற்படுங்கள். எமது பிள்ளைகளை பங்களாதேஷுக்கு அனுப்புவது வெட்கம். சில நாடுகளில் அனைத்து துறை கல்விக்கும் பணம் அறவிடுகின்றனர். மாணவர்கள் அப்பாவிகள். அவர்களை சில சக்திகள் போராட்டத்துக்காக பலவந்தப்படுத்துகின்றன.  4 மணிக்கு எழுந்து வர சொல்வார்கள். தலைவர் வர மாட்டார். 

முன்னதாகவே மாணவர்கள் 26ஆம் திகதி வகுப்புகளுக்குச் செல்ல தீர்மானித்தனர். 22ஆம் திகதி சைட்டம் குறித்த வழக்கு இருந்தது. அவ்வாறிருக்கையில் போராட்டத்தினை நடத்தினார்கள். அப்படியாயின் அவர்களுக்கு தேவை மரணம். 

எவராவது இறந்தால் அது அவர்களுக்கு (ஜே.வி.பி, அரச வைத்தியர்கள் சங்கம், கூட்டு எதிர்க்கட்சி) சாதகமாக மாறும். இந்த நாட்டில் ஒழுங்கான சோசலிசம் தேவை. அதனை நான் வரவேற்கின்றேன்.  இந்த நாட்டின் சுகாதரத்துறையை கட்டியெழுப்புவதற்காக எனக்கு வைத்தியர்கள் தேவை. 

அப்படியாயின் ஏறக்குறைய மூன்றரை மடங்கு வைத்தியர்கள் தேவைப்படுகின்றனர். அப்போதுதான் நாட்டில் சீரான சுகாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். மக்கள் விடுதலை முன்னணி இந்த விடயங்களில் விலகி இருக்க வேண்டும். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை நம்பி மக்கள் விடுதலை முன்னணி களத்திற்கு இறங்க கூடாது. 

அவ்வாறு களம் இறங்கினால் முன்னிலை சோசலிச கட்சியினரும் அரச வைத்திய அதிகாரிகளும் துப்பாக்கி ஏந்திவிடுவார்கள். அதனால் நீங்களே நிர்க்கதியாகிவிடுவீர்கள். 

முன்னர் ஜே.ஆர் ஜெயவர்தனவின் ஆட்சியின் போது அவருக்கு எதிராக தைரியமாக எழுந்து பேசியவர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோவாவார். பின்னர் முறுகல் நிலைமை காரணமாக சுதந்திரக் கட்சியில் இணைந்துதார்.

அதனையடுத்து அவர் அச்சகம் ஆரம்பித்து அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு சென்ரல் வைத்தியசாலையை ஆரம்பித்தார். அந்த வருமானத்தை கொண்டு தனது பெயரில் வைத்தியசாலையை  ஆரம்பித்தார். 

அப்போது தான் அவர் தனது பெயரில் இந்த நாட்டில் வைத்தியகல்லூரியை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதற்காக அந்த வைத்தியசாலையை இலவசமாக வழங்குவதாகவும் எம்மிடத்தில் கூறினார். பணத்தினை ஈட்டுவது தனது நோக்கமல்ல. வைத்திய பீடம் ஒன்றை ஆரம்பித்தால் இன்னும் பலஅவ்வாறு  ஆரம்பிக்கப்படும். அதனை கொண்டு எனது இலட்சியம் நிறைவேறும் என்று கூறினார்.  ஆகவே நெவில் பெர்ணான்டோவின் நோக்கம் இதுவாக இருக்கையில் அவருடைய பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுவதற்கு முற்படாதீர்கள் என்றார்.